பலதும் பத்தும்

கனவு நிறைவேறியது – வெற்றியின் பின் விராட் கோலி

போட்டியில் வெற்றிக்காக கடைசி ஓட்டத்தை பெறும் தமது கனவு நிறைவேறியுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

19வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (31) இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை வெற்றிக் கொண்டது.

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றதுடன், இறுதியாக 6 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்காக பங்காற்றியிருந்தார்.

இந்நிலையில் இந்த வெற்றிக் குறித்து விராட் கோலி இவ்வாறு கருத்து வௌியிட்டார்.

அனைவரும் கனவு காணும் ஒரு விஷயம் இது. இந்தத் தருணத்தைப் பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன், வெற்றிக்கான அந்த கடைசி ஓட்டத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.

களமிறங்கும் போது மிகவும் நிதானமாக உணர்ந்தேன். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெல்லும் நம்பிக்கையை எங்கள் அணி நமக்குத் தருகிறது. இலக்கைத் துரத்தும் போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

நான் எனது ஆட்டத்தை மாற்ற வேண்டியதில்லை, எனது மனநிலையைதான் மாற்ற வேண்டியிருந்தது. பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு கூடுதல் ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்தது.

எங்களிடம் முதிர்ந்த தொழில்முறை ஆட்டக்காரர்கள் உள்ளனர், அவர்களின் அனுபவம் களத்தில் வெளிப்படுகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, அனுபவமுள்ள பெரிய வீரர்கள் பொறுப்பேற்று ஆட வேண்டும்.

இது இலக்கைத் துரத்தும் ஆட்டம் என்பதால், என்னை சீக்கிரமே ஆட்டமிழக்கச் செய்ய அவர்கள் முயல்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இன்னும் 3-4 ஓவர்கள் மீதமிருக்கும் போதே போட்டியை வெல்லக்கூடிய ஒரு சேம்பியன் அணி எங்களிடம் உள்ளது என்பதில் நம்பிக்கை இருந்தது.

பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை எங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறினேன். அதில் முழுமையான தெளிவு இருந்தது. எங்களுக்கு சிறிய இலக்கே இருந்தது. நாங்கள் எந்த அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாடினோம்.

எங்களுக்கு 7 போட்டிகள் அல்ல, 14 போட்டிகளுமே சொந்த மைதானப் போட்டிகள் போலத்தான்,ஏனெனில் ரசிகர்கள் எப்போதும் எங்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள்.

இது குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் சொந்த மைதானமாக இருந்தபோதிலும், 90 சதவீத ரசிகர்கள் எங்கள் பக்கமே இருந்தனர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button