கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!…. தொடர் – 05….. சங்கர சுப்பிரமணியன்

ஷிண்டோ வழிவந்த கோவில்களில் நுழைவதற்கு முன் அலங்கார வளைவுபோல் இருக்கும் ஒரு அமைப்பே டோரி கேட் ஆகும். இதன் அமைப்பில் செங்குத்தாக இடைவெளியிட்டு அமைக்கப் பட்டிருக்கும் இருதூண்கள் இருக்கும். அவற்றை இணைக்கும் வண்ணம் அவற்றின் மேல் இரண்டு விட்டங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டு அலங்கார வளைவு போல் இருக்கும்.

இவற்றை பொதுவாக மரம் மற்றும் கல்லில் அமைத்தாலும் இப்போது வெங்கலம், எஃகு, காங்ங்ரீட் மற்றும் மரப்பிசின் போன்றவற்றாலும் இதை அமைக்கிறார்கள். இதன் நிறம் சிவப்பு மற்றும் காவி நிறத்தில் இருக்கும்.

இரு தூண்களும் விட்டங்களோடு இணையுமிடம் அடிப்புறத்தை விட மேற்புற இடைவெளி சற்று குறைவாக தூண்கள் உட்புறம் சாய்ந்தபடி தோற்றமளிக்கும். தூண்களில் இணக்கப் பட்ட இரு விட்டங்களும் நேராக அல்லது மேலுள்ள விட்டம் மேல்நோக்கி இரு ஓரங்களிலும் சற்று வளைந்தும் காணப்படும். மேலும் இந்த டோரி கேட் எனப்படுபவை பல அமைப்புக்களில் காணப்படுகின்றன.

இப்படி வேறுபட்ட அமைப்புக்களுக்கு காரணம் கோவிலுள்ள கடவுள், கோவிலின் பாரம்பரியம், அக்கோவில் அமந்துள்ள இடத்தின் செல்வாக்கு மற்றும் வரலாற்று பரிமாணம் போன்றவைகளாகும். இந்த டோரி கேட்டின் முதன்மை நிலைப்பாடு டோரி கேட்டிற்கு வெளிப்புறத்தையும் மற்றும் அதைக்கடந்த உட்புறத்தையும் வேறுபடுத்துவதாகும்.

அப்படியென்ன அந்த நுழைவு வாயிலின் உட்புறத்துக்கும் வெளிப்புறத்துக்கும் உள்ள வேறுபாடு என்கிறீர்களா? டோரி கேட்டைத் தாண்டும் முன் உள்ள நிலம் சாதாரண மனிதர்கள் இருக்கும் நிலமென்றும் டோரி கேட்டைக் கடந்ததும் அது கடவுள் வாழும் புனித நிலமென்றும் கருதப் படுகிறது. அதனால் மதநம்பிக்கை கொண்டவர்கள் டோரி கேட்டை கடக்கும் முன் உடலை முன் நோக்கி வளைத்து குனிந்தபடி சென்று மரியாதை செய்து டோரி கேட்டைக் கடந்ததும் நிமிர்கிறார்கள்.

இது கடவுளுக்கு செய்யும் பணிவான மரியாதையாகும். ஆனால் இதை அங்கு வரும் பயணிகள் யாரும் கடைப் பிடிப்பதில்லை. எல்லா ஜப்பானியர்களும் அவ்வாறு செய்து நான் பார்த்ததில்லை. இது அவரவர் மனதைப் பொருத்தது என்பதால் கட்டாயம் இல்லை என்பது தெரிகிறது. இன்னும் ஒன்றையும் நான் குறிப்பிட வேண்டும்.

இந்த டோரி கேட் என்று சொல்லப்படும் கோவில் வாசல் அல்லது புனித வாசலை ஜப்பானிலுள்ள எல்லா ஜிண்டோ மதக் கோவில்களிலும் காணலாம். இதைத் தவிர இவற்றை ஜப்பானிலுள்ள புத்த கோவில்களிலும் காணலாம். இதற்குக் காரணம் வணிகம், குடிபெயர்தல் மற்றும் போரின் வெற்றி போன்றவற்றால் மக்கள் இணையும்போது பண்பாட்டுத் தொடர்பும் உண்டாகிறது.

இவ்வாறு ஏற்படும் பண்பாட்டுத் தொடர்பால் வேறுபட்ட நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் சிந்தனைகள் போன்றவை இணைந்து ஒருங்கிணைந்த கலப்பு ஏற்படுகிறது. ஜப்பானில் உள்ள பெரும்பாலான மக்கள் ஷிண்டோ மதத்தையே பின்பற்றுகிறார்கள். ஷிண்டோ மதம் வேறு புத்தமதம் வேறு.

ஷிண்டோ மதம் என்பது ஜப்பானின் பழங்குடியினரின் இயற்கையை வணங்கும் மதமாகும். மரம், செடி, கொடி, மலை,கல் மற்றும் ஆறு என்று இயற்கையை இறைவனாக கொண்டு வணங்கிய மரபைப் பின்பற்றியதே இம்மதம். ஆறாம் நூற்றாண்டு வாக்கில் கொரியா மற்றும் சீனா மூலம் ஜப்பானுக்கு புத்தமதம் அறிமுகமானது.

ஜப்பானில் அறிமுகமான புத்தமதம் அங்கிருந்த பூரவீக குடியினரின் இயற்கை வழிபாடு முறையுடன் கலந்தது. அப்படி கலந்து ஈமச்சடங்கு மற்றும் மூதாதையரை வணங்கி வழிபடும் சடங்குகளின் மூலம் ஜப்பானிய கலாச்சாரத்தை வடிவமைத்தது. இப்படி கலாச்சாரத்தை வடிவமைத்த புத்தமதம் ஆன்மீகம், கலை, கட்டிடக்கலை மற்றும் தத்துவத்தின் அடித்தளமாகி வளர்ந்தது.

இன்று ஜப்பானியரின் வாழ்கக்கையில் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது. குறிப்பாக ஈமச்சடங்கு மற்றும் மூதாதையரை நினைவுகூறும் சடங்குகள் போன்றவற்றில் ஷிண்டோ மதத்தடன் இணந்துபோகும் அளவுக்கு வேறூன்றியுள்ளது. அதே சமயம் இறந்தவர்களை அடக்கம் செய்து நினைவுச்சின்னம் அமைக்கும் முறை ஷிண்டோமத முறைப்படி கோவில் வளாகத்துக்குள்ளோ அல்ல அருகிலோ இருந்ததையும் மாற்றினார்கள்.

பல நூற்றாண்டுகளாகவே பூர்வீக ஷிண்டோ மதமும் புத்த மதமும் இணைந்தே பயணித்தபோதும் ஷிண்டோ மதப்படியான இயற்கையை கடவுளாக வணங்கும் முறை பின்பற்றப்பட்டது. இந்த இயற்கைக் கடவுளரை “காமி” என்பார்கள். நாம் “சாமி“
என்று சொல்வதுபோல் என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த காமிகளையே புத்தமதத்தைக் காக்கும் பாதுகாவலர்களாக ஜப்பானியர்களால் நம்பப்படுவதால் புத்த கோவில்களில் காமிகளையும் வைத்துள்ளார்கள். அதற்கும் மேலாக புத்தரை காமியாகவே காண்கிறார்கள். இந்த உயர்ந்த பண்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்படியென்ன உயர்ந்த பண்ப என்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.

புதிதாக வந்த மதத்தையும் ஏற்று தங்களது பூர்வீக மண்சார்ந்த மதமான ஷிண்டோ மதத்தையும் மறக்காதிருப்பதை உயர்ந்த பண்பென்கிறேன். மறக்காதிருப்பதை நிரூபிக்கும் வண்ணம் புத்த கோவில்களில் இயற்கை வழிபாட்டுமுறை தெய்வங்களான காமிகளையும் வைத்திருப்பது. எல்லாவற்றிற்கும் மேலாக காமிகளை புத்தரை பாதுகாக்கும் பாதுகாவலர்களாக எண்ணுவதோடு புத்தரை காமியாகவே எண்ணி வணங்குவதாகும்.

இது தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ நடக்குமா? அல்லது தமிழர் அதிகம் வாழும் மற்ற நாடுகளிலோ இதனைப் பார்க்க முடியுமா? மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழரால் தொன்றுதொட்டு வணங்கப்படும் பேச்சியம்மனோ இசக்கியம்மனோ இருக்கமுடியுமா? சிவன் கோவிலில் கருப்பசாமியோ சுடலைமாடனோ இருக்க முடியுமா? ஆகமவிதி என்ற பூச்சாண்டி வந்து நம்மை பயமுறுத்தும். புதிதாக வந்த கோவிலில் பழைய சாமிக்கு இடம் கிடையாது.

அம்மா அப்பா கட்டிய வீட்டில் தாத்தா பாட்டிக்கு இடம் கொடுத்தால் தீட்டு வந்துவிடும். மகன் மகள் கட்டிய வீட்டில் அம்மா அப்பாவுக்கு இடமில்லை. அவர்களை வேண்டுமானால் முதியோர் இல்லத்தில் வைத்துக் கொள்ளலாம். இசக்கியம்மனையும் இருளப்பனையும் தனியாகத்தானே வைத்திருக்கிறோம். இப்போது புரிகிறதா?லாஜிக் ஒர்க் அவுட் ஆகிறதல்லவா?

பதினட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே ஜப்பானில் நடைமுறை வாழ்க்கையில் ஒரு நவீனத்துவம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கோவில்கள் மூதாதையினர் வழிபாட்டுக்கும் ஜப்பானிய மக்களுக்கும் மையமாக இருந்து செயல்படுகிறது.

(தொடரும்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button