337 பொக்கிஷங்களை இத்தாலியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

அமெரிக்காவினால் இத்தாலியிலிருந்து கடத்தப்பட்ட 337 பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மீண்டும் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலாசார சொத்து பரிமாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ரோம் மற்றும் வொஷிங்டன் இடையிலான பலமான ஒத்துழைப்பை இது பிரதிபலிக்கிறது.
பண்டைய ரோமானிய சிற்பங்கள் முதல் கிரேக்க, எட்ரஸ்கன் மற்றும் எகிப்திய கலைப்பொருட்கள் வரை உள்ளடங்கியுள்ள இந்தத் தொகுப்பு, இத்தாலியின் ‘காராபினியேரி’ கலாசார பாதுகாப்புப் பிரிவின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
நியூயோர்க் நகரை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பலனாகவே இவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவற்றுள் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட ரோமானிய நாணயங்கள், ஆபரணங்கள், மட்பாண்டங்கள் மற்றும் கட்டடக்கலை சிதைவுகள் அடங்குகின்றன.
குறிப்பாக, 1960ஆம் ஆண்டு ரோம் அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாவீரன் அலெக்சாண்டரின் பளிங்குத் தலைச் சிற்பம் மற்றும் ஹெர்குலேனியம் நகரில் திருடப்பட்ட வெண்கலச் சிற்பம் என்பனவும் இதில் அடங்கும்.
இந்த நடவடிக்கையில் நியூயோர்க் மென்ஹாட்டன் மாவட்ட சட்டமா அதிபர் அலுவலகம் முக்கிய பங்காற்றியுள்ளதுடன், அவர்கள் மாத்திரம் 221 பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
இத்தாலியின் இணையற்ற வரலாற்றையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கும், இக்கலைப்பொருட்களை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என இத்தாலிக்கான அமெரிக்க தூதுவர் டில்மேன் ஜே. ஃபர்டிட்டா தெரிவித்துள்ளார்.
கலாசார மரபுகளைப் பாதுகாப்பதென்பது அடையாளத்தை வலுப்படுத்துவதும், எதிர்கால சந்ததியினருக்கு கலாசார விழுமியங்களை கையளிப்பதுமாகும் என இத்தாலிய கலாசார அமைச்சர் அலெஸாண்ட்ரோ ஜூலி குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொல்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்தப் பொருட்கள் மேலதிக ஆய்வுகளின் பின்னர் இத்தாலியில் அவை இருந்த இடங்களுக்கே மீண்டும் கொண்டு செல்லப்படவுள்ளன.
![]()