இப்படியும் பொருளா ஏதுமறியேனே!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

வீடுவரை உறவு என்றொரு கவிதை
என்றோ சொல்லிவைத்தான் கவிஞன்
பொருள் புரியாமல் ஒருவன் புலம்பிட
பலரிடம் சென்று பொருளும் கேட்டான்
கல்லிலே கலைவண்ணம் கண்டோர்
சொல்லிலும் பொருள் பல சொன்னார்
வீட்டில் இருக்கும் வரைமட்டும் உறவு
வீட்டைவிட்டு சென்றால் மறைவென்றார்
வீட்டிலிருந்தால்தான் உறவா என்றே
மயங்கியே நின்றான் அந்த மனிதனும்
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவின்றி
இன்னொருவனை நாடினான் பொருள்நாடி
வீட்டில் இருக்கும்வரை உறவு என்பதெலாம்
வீட்டுக்காரனுக்கும் குடியிருப்பவனுக்குமே
வீட்டைவிட்டு குடியிருப்பவன் சென்ற பின்னே
இருவருக்கும் என்ன உறவென்றான் அவனும்
பொருந்தும் என்று அவன் பொருள்சொல்ல
குழம்பிப்போனவன் தெளிந்து நின்றவேளை
குட்டையைக் குழப்பிடவே ஒருவன் வந்தான்
வீடுவரை உறவெனில் வேறு பொருளென்றான்
வீடுவரைதான் கடவுளுக்கும் நமக்கும் உறவு
வீடடைந்த பின்னே அவர் யாரோ நாம் யாரோ
படித்துப் பட்டம் வாங்கிய பின்னரும் எவரும்
பல்கலைக் கழகம் திரும்பவும் செல்வாரோ
குழம்பிய குட்டையில் மீன் பிடித்தாற்போல
வீடு பொருளையறிய விரும்பி நின்றவனோ
வீடுவேண்டாம் வீட்டின் பொருளும் வேண்டாம்
என்றவனும் எடுத்தான் அங்கிருந்தே ஓட்டம்
அவ்வீடு வேண்டின் கடவுளுக்கும் எனக்கும்
இன்றுவரை இருந்த உறவெல்லாம் முடிந்திடும்
இந்த வீட்டில் இருந்தால் அவ்வீட்டை எண்ணி
என்றுமவனை எண்ணி துதித்தபடி இருப்பேன்
இவ்வீட்டில் இருக்கும்வரை அவனோடு உறவு
அந்த வீடு சென்றபின் எனக்கேன் அவன் உறவு
அவ்வீடு வேண்டாம் இவ்வீடே போதுமென்றான்
வீடுபேறு வேண்டுவோரே இதுவே பொருளாம்!

![]()