முச்சந்தி
ஈரானின் அணு ஆயுதக் கனவுக்கு முற்றுப்புள்ளி : சர்வதேச சட்டங்களை தெஹ்ரான் மீறுகிறதா ?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சர்வதேச அணுசக்தி சட்டங்களின் (Nuclear Non-Proliferation Treaty – NPT) கீழ், ஒரு நாடு தனது அணுசக்தித் தேவைகளுக்காக யுரேனியத்தை வைத்திருக்கும் உரிமைக்கும், அதனை ஆயுதமாக மாற்றும் அபாயத்திற்கும் இடையிலான போராட்டமே தற்போது ஈரானில் நடைபெற்று வருகிறது)அமெரிக்கா அரசு ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கக் கோருகிறது. ஆனால் ஈரான் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிறுத்த முடியும் எனவும், யுரேனியம் செறிவூட்டும் உரிமை தங்களுக்கு உண்டு எனவும் வாதிடுகிறது.
இதன் விளைவாக ஈரானின் அணு ஆயுதக் கனவை முறியடிப்பதற்கான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த வருட ஜீன் மாத தாக்குதல்கள் ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி ஆலையைத் தாக்கி, அதன் நுழைவுப் பகுதிகளைச் சேதப்படுத்தியது. இதனால் அந்த அணு ஆலைக்கான அணுகல் தடுக்கப்பட்டது.
இதன் பின்னர் முழுமையாக அணு உலைகளை தகர்க்க மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்த போர் மூண்டது. தற்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான முன்னேற்றமாக, ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தூசுக்களை (Nuclear Dust) (யுரேனியம்) திருப்பித் தர ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான அமைதி ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் அதனை ஈரான் மறுத்துள்ளது.மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பாகிஸ்தானுக்கு தான் நேரில் சென்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் ஈரானின் மறுப்பு ஆணித்தரமாக உள்ளது.
நீண்டகாலமாக தொடர் தடைகளால் ஈரான் அரசு தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தது. அத்துடன் செப்டம்பர் 2025ல் ஈரானுக்கு எதிராக ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன. ஈரான் தொடர்ந்து அணுசக்தி தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து வந்தாலும் (ரஷ்யாவுடன் ஒப்பந்தம்), இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நேரடித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக அதன் அணு ஆயுதக் கனவு பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது. இருப்பினும், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை அமைதியான நோக்கங்களுக்காகவே பயன்படுத்துவதாகக் கூறி வருகிறது.
ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி:

உலக எண்ணெய் விநியோகத்தில் இருபது சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. ஒருவேளை அமெரிக்கா அராஜகமாகச் செயல்பட்டால், அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்கப் போவதாக ஈரானின் உயர்மட்ட இராணுவ ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் மூடுவதும் – திறப்பதுமாக பாரிய நெருக்கடி நிலை நிலவுகிறது. இந்த நீரிணை திறந்துள்ளது என ஈரான் கூறினாலும், கண்காணிப்புத் தகவல்களின்படி சில கப்பல்களே நகர்ந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க முற்றுகை தொடரும் என டிரம்ப் தெரிவித்துள்ளதால் மீண்டும் இந்த நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதற்கு முன்பாக போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹார்முஸ் நீரிணை வர்த்தகக் கப்பல்களுக்கு முற்றிலும் திறந்திருக்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் கண்காணிப்புத் தரவுகளின்படி மிகச் சில கப்பல்களே உண்மையில் அதன் வழியாகப் பயணித்துள்ளன. ஆனால் சமாதான ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படும் வரை ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
வரலாற்று ரீதியாக ஈரானின் வசமுள்ள இந்த நீரிணை பாரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனாலேயே ஈரானிய 13 கப்பல்களை அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) தடுத்து நிறுத்தி, ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை முடக்கியுள்ளது.அதேநேரம், மற்றுமொரு முனையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வியாழக்கிழமை முதல் பத்து நாட்களுக்குப் போர்நிறுத்தம் நடைபெற்றது. இவ்விரு நாடுகளின் தலைவர்கள் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஆறு வார கால மோதலில் லெபனானில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஐந்தில் ஒருவர் இடம்பெயர்ந்துள்ளனர். இரண்டு பொதுமக்கள் மற்றும் 13 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஈரான் அணு ஆயுத முற்றுப்புள்ளி ?
சர்வதேச அணுசக்தி சட்டங்களின் (Nuclear Non-Proliferation Treaty – NPT) கீழ், ஒரு நாடு தனது அணுசக்தித் தேவைகளுக்காக யுரேனியத்தை வைத்திருக்கும் உரிமைக்கும், அதனை ஆயுதமாக மாற்றும் அபாயத்திற்கும் இடையிலான சட்டப் போராட்டமே தற்போது ஈரானில் நடைபெற்று வருகிறது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புதல் என டிரம்ப் அறிவித்தாலும், ஈரான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான முன்னேற்றமாக, ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பாகிஸ்தானுக்கு தான் நேரில் சென்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் இராஜதந்திர வெற்றி:

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தற்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா எச்சரிக்கையும் அழுத்தமும் ஈரான் மீது விதித்துள்ளது. சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் (Hegseth) எச்சரித்துள்ளார். அதனை தொடர்ந்து கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கி உள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடர்கிறது. ஈரான் வழிக்கு வராவிட்டால் வான்வழித் தாக்குதல் நடத்துவோம் என்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசப்படும் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஒரு ‘மத்தியஸ்த நாடாக’ (Mediator State) உலகப் போரைத் தடுக்கும் இராஜதந்திரப் பணியில் ஈடுபட்டுள்ள விதம், சர்வதேச உறவுகள் (International Relations) பாடப்பரப்பில் ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், பாகிஸ்தானின் தொடர் முயற்சியால் தற்போது ஈரான் “நிபந்தனையுடன் கூடிய நம்பிக்கையை” (Cautiously Optimistic) வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், அடுத்த கட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் மையப்புள்ளியாக இருக்கும் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும் தொடரும் பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் பாகிஸ்தான் செல்வாரா என்பது சந்தேகமே.

இழுபறியில் நிபந்தனைகள்:
அமெரிக்காவின் நிலைப்பாடும் மூலோபாய அழுத்தமும் ஈரான் அணு ஆயுதக் கொள்கையில் கடினமானதாக இருக்கிறது. ஆனால் ஈரானும்
விடாப்பிடியாக இருப்பதாக தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றி முற்றுகையிடுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் இன்னும் நிலவுகின்றன. அமெரிக்கா ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கக் கோருகிறது. ஆனால் ஈரான் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிறுத்த முடியும் எனவும், யுரேனியம் செறிவூட்டும் உரிமை தங்களுக்கு உண்டு எனவும் வாதிடுகிறது.
![]()