கவிதைகள்

கசடற கற்று அதன்வழி நிற்காததேனோ?…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

பாட்டி வடை சுட்ட கதை பழசுதான்
ஆயினும் பலரும் இதனை அறிந்திடுவர்
வடைசுட்ட கதை இது ஒருவருக்கல்ல
அனைவருக்குமாக சொன்னகதையாம்

எம்மவர்க்காக ஒரு கதையும் உண்டு
நம்மவர் பண்பை சொல்லும் கதையாம்
ஏன் இந்த கதையைச் சொன்னாரோ
என்று நான் பலநாள் எண்ணியதுண்டு

இன்று எனக்கு புரிந்ததால் சொல்கிறேன்
நண்டு கதை எனும் நாமறிந்த கதைதான்
பாண்டத்தில் பல நண்டுகளை இட்டால்
அவை மேலேறி வந்திடவும் முயன்றிடுமாம்

தப்பெதுவுமில்லை தவறாயும் சொல்லேன்
மேலேழும் முயற்சி நல்லதே என்றிடுவேன்
ஆனால் ஏறும் நண்டு ஒன்றை இங்கு கீழே
இழுத்து விடுகின்ற நண்டொன்றைப் பாரீர்

இப்போதுதான் நான் இதையும் அறிந்தேன்
எப்போதோ சொல்லி நானும் கேட்ட கதை
ஊரறிந்த ஒன்றை ஒருநண்டு கீழே இழுக்கிறது
பரமசிவன் கழுத்தில் பாம்பாய் கிடப்பதாலே

பரமசிவனும் இதனை பாராதிருப்பதேனோ
அரவம் செய்வது அவனுக்கு தெரியலையோ
கண்டும் காணாது இதையும் விட்டு வைத்தால்
கட்டியெழுப்பிய கோட்டை பெருமை குன்றும்

சீப்பின்றி திருமணம் நிற்குமாவென சொன்ன
அச்சொல்லையும் அரங்கேற்ற நினைக்கிறது
பொய்யென எண்ணி நெடுநாள் நினைத்ததை
மெய்யாக்கி மகிழ்ந்திட முயற்சியும் செய்கிறது

ஒருவரை அழித்து ஒருவர் உயர்ந்ததில்லை
திறமையற்றோர் செய்யயும் தீச்செயல் இது
ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் என்றும்
ஆதவன் மறையமாட்டான் எனவும் அறியாரோ

ஒரு கை என்றுமே ஒலியை எழுப்பிடாதாம்
ஒரு கை ஆதவனை மறைத்தும் காட்டிடாது
கற்பதன் பயனை வள்ளுவன் சொன்னாலும்
கசடற கற்று அதன்வழி நிற்காததும் ஏனோ?

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *