கதைகள்

மனிதன் மதத்தில் மூழ்கி விட்டான்…. கதை… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இருட்டடிப்பு செய்வாரோடு இணங்க வேண்டாமென்பதும் இன்னா செய்தாரை ஒறுத்தலும்! ……

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்று கண்ணதாசன் பாடல் வரி போல் மனிதன் மதத்தில்தான் மூழ்கி விட்டான் என்று எண்ணி இருந்தேன். ஆனான் மனிதன் குணத்திலும் மாறிவிட்டான்.

இதை உலகநாத பண்டிதர் சிறிதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
இல்லாவிடில் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம் என்று எழுதியவர்
இருட்டடிப்பு செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்றும் கூறியிருப்பார்.

இப்படியாக பெங்களூர்த் தமிழ்ச்சங்க வீதியில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த பரந்தாமன் நண்பன் பாண்டியனிடம் புலம்பிக் கொண்டே வந்தான். அப்போது பாண்டியன்,

“என்னடா, என்னவோ உலகநாத பண்டிதர் என்று ஏதேதோ சொல்கிறாய்” என்றான்.

“ஆமாண்டா, தமிழென்றாலே வேப்பங்காயாய் கசக்கும் கூட்டத்தில் நீயும் சேர்ந்து விட்டாயா?” என்று பதிலளித்தான்.

“இந்த வேப்பங்காய் புடலங்காய் சங்கதி ஒன்றும் வேண்டாம். எங்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. தமிழை நீ தான் தத்து எடுத்து வளர்க்கிற மாதிரி பேசாதே”

“டேய், கோபப்படாதே. இங்கு தமிழ் தமிழ் என்பவர்கள் சிலர் மாறி தாறி தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி தூள் கிளப்புவார்கள். ஆனால் மற்றவர்கள் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தினால் அவர்களைத் தமிங்கிலம் பேசுவதாக சொல்வார்கள். அந்தக் நினைப்பில்தான் அப்படிப் பேசிவிட்டேன். கோபப்படாதே”

“சரி கோபப்படல, உலகநாத பண்டிதர் மற்றும் உலகநீதி என்றாயே? அந்த செய்தியைப்பற்றி சொல்”

என்று கேட்ட பாண்டியனிடம் பரந்தாமன் சொன்னான். உலகநாத பண்டிதர் என்பவர் பதினெட்டாம் ஆண்டில் வாழ்ந்த ஒரு புலவர். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் போன்ற அறிவரைகள் நிறைந்த உலகநீதி என்ற நூலை இயற்றியவர் இவர் என்றான்.

உடனே பாண்டியன், அவர் இருட்டடிப்பு செய்வாரோடு இணங்க வேண்டாம் என்றும் எழுதியிருப்பார் என்றாயே, எதனால் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டான்.

அது எனக்கு ஏற்பட்ட அனுபவம். சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தான். மைசூரில் என் அக்கா வனஜாவை திருமணம் பண்ணிக் கொடுத்திருப்பது உனக்கு தெரியும் அல்லவா? அவளுடைய ஐந்து வயது மகன் அன்புக்கு பிறந்தநாள் கொண்டாடினார்கள். நானும் போயிருந்தேன் என்பது உனக்குத் தெரியும்.

அங்குதான் இந்த இருட்டடிப்பு அரங்கேறியது என்று நடந்ததை விவரித்தான். தங்கம் விக்கிற விலைக்கு இரண்டு பவுனில் பிறந்தநாள் கொண்டாடும் என் அக்கா மகனுக்கு தாய்மாமனாக சங்கிலி போட்டேன். பிறந்தநாள் விழா முடிந்து விருந்து சாப்பாட்டுக்கு பிறகு அங்கு அமர்ந்து சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

IMG_2890.JPG

அப்போது யாரிடமோ என் அக்காவின் கொழுந்தன் உமாபதி சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. தனது அண்ணன் பையனுக்கு யார் யாரோ செய்ததை எல்லாம் விவரமாக பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான் என்று சொன்னான்.

“அதனால் உனக்கென்ன சங்கடம்?” என்று கேட்டான் பாண்டியன்.

“சங்கடம்தான். அவன் யாரைப்பற்றியும் சொல்லவில்லை என்றால் பரவாயில்லை. நகைப்போட்ட அவர்களின் சொந்தக்காரர்களைப் பற்றியெல்லாம் பெருமையாகப் பேசியவன் என்னைப் பற்றி மூச்சு விடவில்லை. அது எனக்கு கொஞ்சம் மனம் வருத்தம்”

“அவன் சொல்லாவிட்டால் போகிறான். நீ உன் மருமகனுக்கு தாய்மாமன் என்ற முறையில் செய்தது உன் அக்காவுக்கும் அத்தானுக்கும் தெரியுமல்லவா? அது போதாதா, உன் அக்காளின்கொழுந்தன் யாரிரிம் சொன்னால் உனக்கென்ன?” என்று பரந்தாமனை ஆறுதல் படுத்தினான்.

நண்பன் பாண்டியன் எவ்வளவுதான் சமாதானப் படுத்தினாலும் பரந்தாமனுக்கு தன்னை இருட்டடிப்பு செய்ததுதான் தாங்க முடியவில்லை. உலகநாத பண்டிதர் காலத்தில் இருட்டடிப்பு செய்பவர்கள் இருந்திருக்க மாட்டார்களோ? இருந்திருந்தால் அவர் வழங்கிய அறிவுரைகளில் இருட்டடிப்பு செய்வாரோடு இணங்கவேண்டாம் என்றும் சேர்த்திருப்பார் என்று நினைத்தான்.

இப்படியாக தனக்குத் தானே சமாதானம் சொல்லி அமைதியடைந்தாலும் ஏனோ மனம் அமைதி அடையவில்லை. இருநூறு ஆண்டுகளில் மனிதர்களிடம் எத்தகைய மாற்றங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்தால் மனிதர்களிடையே என்னென்ன மாற்றங்கள் ஏற்படுமோ என்று பேசியபடியே நடந்தார்கள்.

ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்ற வள்ளுவன் குறள்படி மற்றவர்களை இருட்டடிப்பு செய்பவர்களுக்கு தன்னை மற்றவர்கள் இருட்டடிப்பு செய்து அதை உணரும்போது மட்டுமே அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்றான் பாண்டியன்.

தான் செய்ததை தவறு என்றுகூட நினைக்காமல் அதற்காக வருந்தக்கூட செய்யாதவர்கள் தன்னை மாற்றிக் கொள்வார்கள் என்பது சந்தேகமே என்றான் பரந்தாமன். ஆனால் இன்னா செய்தாரை ஓறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள் வழிப்படி நாமாவது நடப்போம் என்று பாண்டியனிடம் சொன்னான்.

இதுபோல் நடைபயிற்சி செய்யும் போது தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். நடைபயிற்சி என்பது உடல் நலத்துக்கு மட்டுமின்றி பொதுவான கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து தெளிவு பெற நல்ல வாய்ப்பாக மனநலத்துக்கும் பயனாக இருப்பதால் பல ஆண்டுகளாக இந்த நடைபயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

நடைபயிற்சிக்காக ஒரு இலக்கை அவர்கள் வைத்திருக்கிறார்கள். சிவாஜி நகர் ஒடுக்கத்தூர் முருகன் கோவிலில் தொடங்கி தமிழ்ச் சங்கம் வீதிவழியாக அலசூர் ஏரி போட் ஹவுஸ் வரை அவர்கள் இலக்கு. அந்த இலக்கிலிருந்து திரும்ப ஒடுக்கத்தூர் முருகன் கோவில்வரை வந்து முருகனை வணங்கிவிட்டு வீடு திரும்புவார்கள்.

முருகன் தன் வழிவந்த இனமக்கள் லட்சக்கணக்கில் துயருற்று மடிந்தபோது காக்க வராவிட்டாலும்கூட எங்கிருந்தாலும் இன்றும் காக்க காக்க கனகவேல் காக்க என்று அவனை நினைத்து வணங்கத்தான் செய்கிறார்கள். தமிழர்களுக்கு தெரியும் அன்று அவன் வாழ்ந்த காலத்தில் தம் இனமக்களை காத்து அரவணைத்தான் என்று.

அதை நினைவுகூறும் முகமாகவே இன்றும் நம் தாத்தா, பாட்டன், பூட்டன் போன்ற குலதெய்வங்களை வணங்குவதுபோல் குலதெய்வங்களுக்கு எல்லாம் குலதெய்வமான முருகனை வணங்குகின்றோம். அவ்வாறு பரந்தாமனும் பாண்டியனும் இலக்கு வரை சென்று திரும்பி முருகனையும் வணங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *