பலதும் பத்தும்

கைகள் இன்றி வில்வித்தையில் சாதித்த முதல் பெண்- சிறந்த வீராங்கனை விருது வென்று சாதனை!

இந்திய விளையாட்டுத் துறையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி, உலக வில்வித்தை அமைப்பால் ‘2025-ஆம் ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனை’ என்ற உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகப் பட்டம் மற்றும் பாராலிம்பிக் பதக்கம் எனத் தனது வெற்றிக் கணக்கைத் தொடர்ந்து வரும் ஷீத்தல், இந்தியாவிற்கு மீண்டும் ஒரு உலகளாவிய பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

பிறவியிலேயே கைகள் இல்லாத நிலையில், தனது பாதங்கள் மற்றும் தோள்களைப் பயன்படுத்தி வில்லை இயக்கும் தனித்துவமான நுட்பத்தை உருவாக்கியுள்ள ஷீத்தல், உலகப் போட்டிகளில் கைகள் இன்றி தங்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்

தென் கொரியாவின் குவாங்ஜுவில் நடைபெற்ற தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், மகளிர் குழுப் பிரிவில் வெள்ளி மற்றும் கலப்புக் குழுவில் வெண்கலம் எனப் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளார்.

இந்த அங்கீகாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ஷீத்தல் தேவி, “நன்றியுணர்வாலும், உணர்ச்சிகளாலும் இதயம் நிறைந்துள்ளது; இந்தப் பயணம் தந்த அனைத்திற்கும் நன்றி” எனத் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸ் பாராலிம்பிக் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரை தொடர்ச்சியாகப் பதக்கங்களை வென்று வரும் ஷீத்தல் தேவி, மன உறுதி இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *