பலதும் பத்தும்

புறக்கணிக்கக்கூடாத 7 அறிகுறிகள் இவைதான்!

நம்மில் பலரும் சாதாரணமாக நினைக்கும் சில விஷயங்கள், மிக முக்கியமான அறிகுறிகளாக மாறி பின் நாட்களில் நம்மையே சோதிக்கும். அப்படியான சில அறிகுறிகள் குறித்தும், ஏன் அவற்றை உதாசீனப்படுத்தக் கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியுமே இன்று பார்க்கப் போகிறோம்.

உடல் சோர்வு, அடிக்கடி கவனமின்மை, லேசான மயக்கம், தூக்கப் பிரச்சனைகள், ஏதேனும் வலி அல்லது மோசமான மனநிலை போன்ற பிரச்சனைகள், திடீர் எடை குறைவு நீண்ட காலத்திற்கு இருந்தால் அவற்றை உதாசீனப்படுத்தக் கூடாது. இந்த அறிகுறிகளெல்லாம் உணர்த்துவது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

1) அதிகப்படியான சோர்வு ஏற்படுவது, ரத்த சோகை, தைராய்டு பிரச்சனைகள் அல்லது இதயம் தொடர்பான கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.

2) டயட் அல்லது உடற்பயிற்சி செய்யாமல் திடீரென எடை குறைவது நீரிழிவு, செரிமான மண்டலப் பிரச்சனைகள் அல்லது சில வகை புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே இதற்கு உடனடி கவனம் தேவை.

3) அடிக்கடி ஏற்படும் ஞாபக மறதி மற்றும் கவனமின்மையை வேலைப்பளு என்று ஒதுக்கிவிடக் கூடாது. ஏனெனில் இவை நீண்ட கால மன அழுத்தம் அல்லது ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கும்.

4) இரவில் தூக்கம் ஏற்படாமல் அவதிப்படுவது மிக முக்கியமான அறிகுறி. ஏனெனில் தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனநல பாதிப்புகள் அல்லது ஹார்மோன் சமநிலையின்மையைக் காட்டுகின்றன. உங்களின் ஏதேனும் ஒரு உடல்நலக் கோளாறுகூட இதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக சிகரெட், மதுப் பழக்கம் போன்ற பழக்கங்கள் இருந்தால் அதன் எதிரொலியாக இது இருக்கும்.

5) விடாத இருமல் அல்லது தொண்டை கரகரப்பு இருப்பது ஆபத்து. அதிலும் 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமலை சாதாரண சளி என்று நினைக்கக் கூடாது. இது நுரையீரல் பாதிப்பு அல்லது அமில எதிர்ப்பரிமாற்ற அறிகுறியாக இருக்கலாம்.

6) உடலில் திடீரென தோன்றும் புதிய மச்சங்கள், நிற மாற்றங்கள் அல்லது ஆறாத புண்கள் போன்றவை, தோல் ஆரோக்கியத்தில் ஏதோ குறைபாடு இருப்பதைக் காட்டும். எனவே அதற்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

7) இதேபோல அடிக்கடி ஏற்படும் தலைவலி என்பது கண்களில் உள்ள பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம் அல்லது மூளை நரம்புகளில் அழுத்தம் இருப்பதை உணர்த்தக்கூடும்.

இவற்றில் பெரும்பாலான பிரச்சினைகள் வைட்டமின் குறைபாடுகள், மோசமான தூக்கம், அதிக நீரிழப்பு, மன அழுத்தம், தைராய்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்படக்கூடும். முறையான டயட், வழிகாட்டுதல்களுடன் கூடிய உடற்பயிற்சி, நல்ல தூக்கம் போன்றவற்றின் மூலமே பெரும்பாலான பிரச்சினைகளை நம்மால் சரிசெய்ய முடியும் என்பதால் நல்ல வாழ்வியல் மாற்றங்களை முதலில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு முன், ஒருமுறை வைத்திய ஆலோசனை பெற்றுவிடுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *