பலதும் பத்தும்

இந்தியாவில் ஆணுறை விலை உயரும் அபாயம்!

ஈரான் போர் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தாக்கம் தற்போது எதிர்பாராத விதமாக ஆணுறை மற்றும் மருந்து உற்பத்தித் துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் இவற்றின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

ஆணுறைகள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் அம்மோனியா மற்றும் சிலிக்கான் எண்ணெய் போன்ற பெட்ரோகெமிக்கல் பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லேடெக்ஸ் திரவத்தைப் பதப்படுத்த உதவும் அம்மோனியாவின் விலை 40% முதல் 50% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேக்கேஜிங் செய்யப் பயன்படும் அலுமினியம் ஃபாயில் மற்றும் பிவிசி தாள்களின் விலையும் அதிகரித்துள்ளதால், சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ஆணுறை சந்தை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் ஆணுறை தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் அரசு நிறுவனமான ‘ஹெச்.எல்.எல் லைஃப்கேர்’ மற்றும் ‘க்யூபிட் லிமிடெட்’ போன்ற முன்னணி நிறுவனங்கள், உற்பத்திச் செலவு அதிகரிப்பால் திணறி வருகின்றன. உலகளாவிய கப்பல் கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக, 80 சதவீத உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்குச் சரக்குகளை அனுப்ப முடியாமல் தவிக்கின்றன.

“ஆணுறைகளின் விலை அதிகரிப்பதோ அல்லது தட்டுப்பாடு ஏற்படுவதோ நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாரியளவில் பாதிக்கும்” என பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் பூனம் முத்ரேஜா கவலை தெரிவித்துள்ளார். இது திட்டமிடப்படாத கர்ப்பங்கள், பதின்ம வயதுக் கருத்தரிப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில் தற்போது 9% தம்பதியர் மட்டுமே ஆணுறையைப் பயன்படுத்தும் நிலையில், இந்த விலை உயர்வு அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆணுறைத் துறை மட்டுமன்றி, ஒட்டுமொத்த மருந்து உற்பத்தித் துறையும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பில் கரைப்பான்களாகப் (Solvents) பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை ஊக வணிகம் காரணமாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் குறைந்திருப்பதால், மருந்து ஏற்றுமதிக்கான செலவுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.

தற்போதைய நிலையில் இந்தியாவில் மருந்து இருப்பு போதுமானதாக இருந்தாலும், போர் நீடித்தால் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *