கட்டுரைகள்

உலக எரிசக்தி பாதுகாப்பின் தலைவிதியும், தீர்க்கப்படாத சவால்களும்!…. கிறிஸ்டி நல்லரெத்தினம்

கிறிஸ்டி நல்லரெத்தினம்

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பின் மையப்புள்ளியாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் கப்பல் போக்குவரத்துக்கு இது ஒரு அத்தியாவசிய வழித்தடமாகும். சமீப காலங்களில், ஈரானியப் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் சாத்தியமான மூடல் குறித்த அச்சங்கள் காரணமாக உலகெங்கிலும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது தெரிந்ததே.

இந்த நீரிணை தொடர்ந்து கப்பல் போக்குவரத்திற்கு மூடப்பட்டால், உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும் என்பது வெள்ளிடைமலை. இத்தகைய ஒரு நெருக்கடியைத் தவிர்க்கும் வகையிலோ அல்லது அதன் தாக்கத்தைக் குறைக்கும் வகையிலோ, பல தசாப்தங்களுக்கு முன்பே இரண்டு மாபெரும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஒன்று, ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இயற்கை எரிவாயு குழாய் திட்டம், மற்றொன்று, ஓமானின் முசந்தம் (Oman’s Musandam Peninsula) தீபகற்பத்தின் வழியாக ஒரு கால்வாய் வெட்டும் திட்டம்.

இந்த இரண்டு திட்டங்களும் ஹோர்முஸ் நீரிணையின் மீதான உலகத்தின் சார்புநிலையை கணிசமாகக் குறைத்திருக்கும். ஆனால், வியக்கத்தக்க வகையில், இந்த இரண்டு மாபெரும் திட்டங்களும் இன்றுவரை முழுமையாக முடிக்கப்படவில்லை அல்லது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உலக நாடுகள் மாற்று வழிகளைத் தேடி அலையும் இச்சூழலில், ஏன் இந்த முக்கிய திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன? என்ன காரணிகள் அவற்றின் வெற்றியைத் தடுத்தன?

இந்த இரு திட்டங்களின் பின்னணியையும், அவற்றின் தோல்விக்கான விரிவான காரணங்களையும், அவற்றின் மூலம் உலக எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பாதிப்புகளையும் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

ஹோர்முஸ் நீரிணையின் தந்திரோபாய முக்கியத்துவம்

ஹோர்முஸ் நீரிணை என்பது ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு கடல்வழிப் பாதையாகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கிறது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்திற்கு இது ஒரு தவிர்க்க முடியாத உயிர்நாடி. தினமும் சுமார் 17 மில்லியன் முதல் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இது உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கையும், உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் 20 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது. இதன் மிகக் குறுகிய புள்ளி சுமார் 33.7 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. இதில், கப்பல் போக்குவரத்துக்கான பாதை சுமார் 16 கிலோ மீட்டர்கள் மட்டுமே.

இவ்வளவு பெரிய அளவிலான எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஒரு குறுகிய பாதை, புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு தளமாக அமைகிறது என்பது உண்மை.

பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து, குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஈராக், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து உலக சந்தைகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய இதுவே முக்கிய வழியாகும். இந்த நீரிணை அடைக்கப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படுள்ளது, இது இப்போது வரலாறு காணாத எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

அது சரிதான், ஆனால் இதற்கு மாற்றத் திட்டமாக வேறு திட்டங்களை ஏன் யாரும் வகுக்கவில்லை என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்விக்கு விடை பகிரும் இரு திட்டங்கள் இல்லாமல் இல்லை.

ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (IPI) எரிவாயு குழாய் திட்டம்: ஒரு அமைதிக் கனவு

ஹோர்முஸ் நீரிணையின் மீதான சார்புநிலையைக் குறைப்பதற்கான ஒரு சாத்தியமான தீர்வாக, ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இயற்கை எரிவாயு குழாய் திட்டம் 2009இல் முன்மொழியப்பட்டது. “அமைதிக் குழாய்” (Peace Pipeline) என்று அழைக்கப்படும் இந்த திட்டம், ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த திட்டம் பல வகைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றுத்திட்டமாக கருதப்பட்டது.

திட்டத்தின் நோக்கம் மற்றும் சாத்தியங்கள்:

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எரிசக்தி பாதுகாப்பு: வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய இரு நாடுகளுக்கும் நிலையான மற்றும் நம்பகமான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்திருக்கும்.

பிராந்திய ஒத்துழைப்பு: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பையும், பிராந்திய ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஈரானுக்கு வருவாய்: ஈரானுக்கு அதன் பெரிய இயற்கை எரிவாயு இருப்புக்களை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்ட உதவியிருக்கும்.
நிலவழி மாற்று: ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் கப்பல் போக்குவரத்தின் அபாயங்களைக் குறைத்து, நிலவழி எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு நம்பகமான மாற்று வழியை வழங்கியிருக்கும்.

நடைபெற்ற பணிகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள்:

இந்தத் திட்டத்தில், ஈரானின் பகுதியானது கிட்டத்தட்ட 900 கிலோமீட்டருக்கும் மேல் முடிக்கப்பட்டு, முழு செயல்பாட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் பகுதியில் சுமார் 780 கிலோமீட்டர் குழாய் பாதை முடிக்கப்படாமலேயே பாதியிலேயே நின்றது. திட்டத்தின் தொடக்கத்தில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும், பல முக்கிய காரணிகள் அதன் முன்னேற்றத்தைத் தடுத்து, இறுதியில் திட்டத்தை தோல்வியடையச் செய்தன.

திட்டத்தின் தோல்விக்கான காரணங்கள்:

1. அமெரிக்காவின் அழுத்தமும் தடைகளும்:

இந்தத் திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் கடுமையான அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடைகள். ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் மோதலில் இருந்ததால், அமெரிக்கா ஈரானை உலக அரங்கில் தனிமைப்படுத்த விரும்பியது. IPI குழாய் திட்டம் ஈரானுக்கு கணிசமான வருவாயைக் கொண்டு வந்து, அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்பதால், அமெரிக்கா இந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்தது.

பாகிஸ்தான் மீதான அழுத்தம்: பாகிஸ்தானில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியது. இதனால், பாகிஸ்தான் இந்த திட்டத்தில் முதலீடு செய்யவோ அல்லது அதை முடிக்கவோ தயங்கியது. நிதி நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு பயந்து இந்த திட்டத்திற்கு நிதியளிக்க மறுத்தன.
இந்தியா மீதான அழுத்தம்: அமெரிக்கா இந்தியாவுக்கு மாற்றாக, துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) குழாய் திட்டத்தை முன்மொழிந்தது. இது ஆப்கானிஸ்தான் வழியாகச் செல்வதால், பிராந்திய பாதுகாப்புக் கவலைகள் இருந்தபோதிலும், இந்தியாவை IPI திட்டத்தில் இருந்து விலகச் செய்ய இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

2. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் பாதுகாப்பு சவால்கள்:

பாகிஸ்தான் பகுதியின் வழியாகச் செல்லும் குழாய் பாதை, நிலையற்ற மற்றும் மோதல் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.
பிரிவினைவாதக் கிளர்ச்சி: பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) போன்ற பிரிவினைவாதக் குழுக்கள் நீண்ட காலமாகவே பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இவர்கள் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை எதிர்த்து வருகின்றனர்.

தாக்குதல்கள்: பலூசிஸ்தான் பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள எரிவாயு குழாய்கள் மற்றும் ரயில்வே பாதைகள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது IPI குழாய் திட்டத்தின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. குழாய் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு பெரிய பாதுகாப்பு செலவுகள் தேவைப்படும் என்பதால், திட்டத்தின் நிதி சாத்தியக்கூறுகள் கேள்விக்குறியாயின.

பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமை: பாகிஸ்தான் அரசாங்கத்தால் திட்டப் பாதைக்கு முழுமையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. இது இந்தியா போன்ற முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

3. நிதிச் சிக்கல்கள்:

திட்டத்தின் பிரம்மாண்டம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, நிதி திரட்டுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது.

உள்நாட்டுப் பற்றாக்குறை: பாகிஸ்தான் அதன் உள்நாட்டு வளங்களைக் கொண்டு இத்திட்டத்தை முழுமையாக முடிக்க போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை.
சர்வதேச நிதி நிறுமங்களின் தயக்கம்: அமெரிக்கத் தடைகள் மற்றும் பலூசிஸ்தான் பாதுகாப்புச் சூழல் காரணமாக சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திட்டத்திற்கு நிதியளிக்கத் தயங்கின.

4. இந்தியாவின் விலகல்:

இந்தியா ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டியபோதிலும், பின்னர் அதிலிருந்து விலகியது.

பாதுகாப்பு கவலைகள்: பாகிஸ்தான் வழியாக செல்லும் குழாய் பாதையின் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு பெரும் கவலைகள் இருந்தன. பாகிஸ்தானுடனான வரலாற்று ரீதியான மோதல்கள் காரணமாக, பாகிஸ்தான் இந்தியாவிற்கு எரிவாயு விநியோகத்தை எப்போது வேண்டுமானாலும் துண்டிக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

விலை நிர்ணயம் மற்றும் விதிமுறைகள்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

அமெரிக்காவின் அழுத்தம்: அமெரிக்காவின் அழுத்தமும், TAPI ( Turkmenistan-Afghanistan-Pakistan-India Pipeline) போன்ற மாற்று திட்டங்களுக்கான ஊக்கமும் இந்தியாவின் விலகலுக்கு ஒரு முக்கிய காரணம்.

5. புவிசார் அரசியல் போட்டி:

சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள், ஈரானை பிராந்தியத்தில் வலுப்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்தன. இது திட்டத்தின் மீதான சர்வதேச ஆதரவைக் குறைத்தது.

இன்றைய நிலை:

இன்றுவரை, ஈரானியப் பகுதி முடிந்துவிட்டாலும், பாகிஸ்தான் பகுதி முற்றுப்பெறாமல் உள்ளது. ஈரான், திட்டத்தை முடிக்கத் தவறியதற்காக பாகிஸ்தான் மீது அபராதம் விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் இன்னமும் இந்தத் திட்டத்தை முடிப்பதற்கான வழிமுறைகளைத் தேடி வருகிறது. ஆனால், அமெரிக்கத் தடைகள், பாதுகாப்புச் சவால்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இது ஒரு பகல் கனவாகவே உள்ளது.

அடுத்ததாக இரண்டாவது முன்னெடுப்பை சிறிது நோக்குவோம்.

முசந்தம் கால்வாய் திட்டம்: ஒரு மாபெரும் கற்பனை

ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் தவிர்ப்பதற்கான மற்றொரு தீவிரமான யோசனை, ஓமானின் முசந்தம் தீபகற்பம் (Musandam Peninsula) வழியாக ஒரு மாபெரும் கால்வாய் வெட்டுவது ஆகும். இது ஒரு கடற்படை பொறியியல் அற்புதமாக இருந்திருக்கும், ஆனால் இது ஒருபோதும் யதார்த்தமான திட்டமாக மாறவில்லை என்பது ஒரு சோகக்கதையே!

திட்டத்தின் கருத்தாக்கம் மற்றும் தந்திரோபாய நன்மைகள்:

முசந்தம் தீபகற்பம்: ஓமானுக்குச் சொந்தமான இந்த தீபகற்பம், ஹோர்முஸ் நீரிணைக்கு மிக அருகில், அதன் ஓமன் பகுதியில் அமைந்துள்ளது. அதன் புவியியல் அமைப்பானது, ஒரு கால்வாய் வெட்டப்பட்டால், கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையாமலேயே நேரடியாக அரபிக்கடலை அடைய அனுமதிக்கும்.

முழுமையான புறக்கணிப்பு: இந்த கால்வாய், ஹோர்முஸ் நீரிணையின் அனைத்து அபாயங்களையும், புவிசார் அரசியல் பதட்டங்களையும் முழுவதுமாகத் தவிர்த்திருக்கும். உலக வர்த்தகத்திற்கான ஒரு பாதுகாப்பான, மாற்றுப் பாதையை உருவாக்கியிருக்கும்.

எரிசக்தி பாதுகாப்பில் புரட்சி: உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கும், ஹோர்முஸ் நீரிணையின் அடைப்பு உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கும்.

திட்டத்தின் நடைமுறைப்படுத்தாமைக்கான காரணங்கள்:

1. பிரம்மாண்டமான செலவு:

இந்தத் திட்டம் “கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் செலவு மிக்கது” என்று விவரிக்கப்பட்டது. பில்லியன் கணக்கான டாலர்கள்: ஒரு கால்வாய் வெட்டுவதற்கு பல பில்லியன், ஒருவேளை டிரில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. இது ஸ்வேஸ் கால்வாயை விடவும் மிகவும் சவாலானது மற்றும் விலை உயர்ந்தது.

மலையடிவாரப் பாறை:முசந்தம் ஒரு மலைப்பாங்கான மற்றும் பாறை நிறைந்த தீபகற்பம் ஆகும். இந்த கடினமான நிலப்பரப்பில் ஒரு கால்வாய் வெட்டுவது மிகப்பெரிய பொறியியல் சவாலையும், அபரிமிதமான செலவுகளையும் உள்ளடக்கியது.

2. பொறியியல் சவால்கள்:

முசந்தம் தீபகற்பத்தின் கடினமான பாறை அமைப்புகள் மற்றும் செங்குத்தான மலைகள், ஒரு கால்வாய் வெட்டுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கும். 400 மில்லியன் கன சதுர மீட்டர்கள் பாறைகளை வெட்டி அகற்றுவது அத்தனை லேசுப்பட்ட காரியம் அல்லவே!
நிலவியல் தடைகள்: ஒரு கால்வாய் வெட்டுவதற்கு, பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சி, பாறைகளை உடைத்தல் மற்றும் நிலத்தை சமன் செய்தல் தேவைப்படும். இது மிகவும் ஆபத்தான மற்றும் நீண்ட கால திட்டமாக இருந்திருக்கும்.

தொழில்நுட்ப சவால்கள்: கடல் நீரோட்டங்கள், அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்க வேண்டிய சவால்கள் அதிகம்.

3. சுற்றுச்சூழல் பாதிப்பு:

அவ்வளவு பெரிய அளவில் ஒரு கால்வாய் வெட்டுவது, முசந்தம் தீபகற்பத்தின் தனித்துவமான மற்றும் நுட்பமான கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். இது ஓமன் போன்ற நாடுகளின் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு எதிரானது.

4. ஓமானின் இறையாண்மை மற்றும் அரசியல் கவலைகள்:

இதுவே இத்திட்டம் கைவிடப்பட்டதற்கான மிக முக்கிய அரசியல் காரணமாகும். ஓமன், தனது இறையாண்மை மற்றும் பிராந்திய நடுநிலைத்தன்மையை மிகவும் மதிக்கும் ஒரு நாடு.
புதிய “சுவேஸ் கால்வாய்” பயம்: ஒரு கால்வாய் வெட்டப்பட்டால், அது சர்வதேச கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படலாம் அல்லது சுவேஸ் கால்வாயைப் போல் சர்வதேச கவனத்தையும், குறுக்கீட்டையும் ஈர்க்கும் ஒரு புதிய புவிசார் அரசியல் பதற்ற மையமாக மாறலாம் என்று ஓமன் அஞ்சியது.

கட்டுப்பாட்டின் இழப்பு: ஓமன் தனது தேசிய எல்லைக்குள் ஒரு அத்தியாவசிய உலகளாவிய போக்குவரத்துப் பாதையின் கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை. இது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என்று அஞ்சியது ஓமன்.

நடுநிலை நிலைப்பாடு: ஓமன் பிராந்தியத்தில் நடுநிலை மற்றும் அமைதியான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இத்தகைய ஒரு மாபெரும் திட்டத்தை தனது மண்ணில் அனுமதிப்பது, அது தேவையற்ற அரசியல் பதட்டங்கள் மற்றும் மோதல்களில் ஈடுபட வழிவகுக்கும் என்று அஞ்சியது.

இந்த இரு நிறைவேறாத கனவுத் திட்டங்களை அடுத்து “வரும் ஆனா வராது” டைப் திட்டத்தையும் பார்ப்போமா?

1980களில், சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் தங்களது எண்ணெயை Yanbu துறைமுகத்துக்கு கொண்டு செல்லும் குழாய் வழித்தடங்களை அமைத்தன. இந்த துறைமுகம் (Red Sea ) செங்கடல் கரையில் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில், இவ்வழித்தடங்கள் பிராந்தியத்தின் தினசரி எண்ணெய் உற்பத்தியின் ஒரு பெரிய பகுதியை எடுத்துச் செல்லும் அளவுக்கு திறன் கொண்டதாக இருந்தன.

இதன் பொருள், இந்த ஏற்றுமதிகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சில காலத்திற்கு இந்த ஏற்பாடு சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதன் பின்னர், வளைகுடா பகுதியில் எண்ணெய் உற்பத்தி கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்த குழாய்களின் அதிகபட்ச கொள்ளளவு மிகவும் குறைந்த அளவிலேயே உயர்ந்துள்ளது.

மேலும், இந்த குழாய்கள் கொண்டு வரும் எண்ணெயை ஏற்றும் Yanbu துறைமுகத்தில் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லை. இந்த குழாய்கள் தினமும் சுமார் 7 மில்லியன் பேரல்கள் எண்ணெயை எடுத்துச் செல்லக்கூடியவை. ஆனால் துறைமுகம் 3 முதல் 4 மில்லியன் பேரல்கள் மட்டுமே கையாள முடிகிறது.

இந்த கொள்ளளவு பற்றாக்குறை எந்த தொழில்நுட்பக் குறைபாடினாலும் அல்ல. ஏன் இவ்வளவு பணத்தை இதில் கொண்டு கொட்டுவான் என்ற அசிரத்தையே காரணம். ‘ஹோர்முஸ் நீரிணை இருக்கிறதே, ஏன் கவலை?’ என்ற எண்ணப் போக்கே இன்றைய இந்த நிலைக்கு காரணம்.

ஹோர்முஸ் நீரிணை என்பது உலக எரிசக்தி பாதுகாப்பில் ஒரு முக்கியமான பலவீனமான புள்ளியாகும். அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்ட ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய் மற்றும் முசந்தம் கால்வாய் திட்டங்கள், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கான சாத்தியமான தீர்வுகளாக இருந்தன. இருப்பினும், இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறாமல் போனதற்கான காரணங்கள், பிராந்திய ஒத்துழைப்பைத் தடுக்கும் புவிசார் அரசியல் சிக்கல்கள், உள்நாட்டு மோதல்கள், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் நிதிச் சவால்களின் சிக்கலான வலைப்பின்னலைக் காட்டுகின்றன.

ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய் திட்டத்தின் தோல்விக்கு, அமெரிக்கத் தடைகள், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் நிலவிய பாதுகாப்புச் சவால்கள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன. இந்தத் திட்டம் ஒரு “அமைதிக் குழாய்” ஆக இருந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள், புவிசார் அரசியல் போட்டிகளால் நசுக்கப்பட்டன. மறுபுறம், முசந்தம் கால்வாய் திட்டம், அதன் பிரம்மாண்டமான செலவு, ஈடு செய்ய முடியாத பொறியியல் சவால்கள், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஓமானின் இறையாண்மை தொடர்பான கவலைகள் காரணமாக ஒரு கற்பனையாகவே நின்றுவிட்டது.

உலக நாடுகள் ஹோர்முஸ் நீரிணையின் அடைப்பு என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இச்சூழலில், மாற்று வழிகளை உருவாக்குவது இன்னும் அவசியமாகிறது. ஆனால், மேலே குறிப்பிட்ட திட்டங்களின் தோல்விகள், இத்தகைய மெகா திட்டங்களை பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதற்கான ஒரு தெளிவான பாடத்தைக் கற்பிக்கிறது. இது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு தொடர்ச்சியான சவாலாகவே உள்ளது, மேலும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல தடைகளைத் தாண்டி மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும்.

இந்தத் திட்டங்களின் தோல்வி, வெறும் உள்கட்டமைப்பு திட்டங்களின் தோல்வி மட்டுமல்ல, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான ஒரு இழந்த வாய்ப்பும் கூட!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *