முச்சந்தி
ஈரான் புதிய தலைவர் மொஜ்தபா கொமேனி: மேற்குலகுடன் நட்புறவை வலுப்படுத்த முயல்வாரா ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

உயிருடன் உள்ளாரா, இல்லையா என்ற ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கொமேனியின் நிலை குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட தகவல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கொமேனியின் (Mojtaba Khamenei) தற்போதைய நிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

ஈரானில் நாம் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது எமக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களின் தற்போதைய தலைவர் மொஜ்தபா கொமேனி உயிருடன் உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதே எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை என ட்ரம்ப் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய உச்ச தலைவர் தொடர்பில் வெளியாகும் புலனாய்வுத் தகவல்களைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவின் தாக்குதலில் மொஜ்தபா கொமேனி ஒரு காலை இழந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நூற்றுக்கு நூறு வீதம் ஆரோக்கியமாக உள்ளார் என எவரும் கூறவில்லை.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi)
ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியில், எமது உச்ச தலைவருக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. போர் ஆரம்பித்த முதல் நாள் அவரது தந்தை அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதன் பின்னர் பதவியேற்றார் எனத் தெரிவித்து ட்ரம்பின் கூற்றை மறுத்துள்ளார்.
ஈரானின் புதிய தலைமை:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது புதல்வரான 56 வயதுடைய மொஜ்தபா கொமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய அதியுயர் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் புதிய அதியுயர் தலைவராக மொஜ்தபா கமேனி பிரகடனம் நாடாளவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. தனது குடும்பத்தையே பறிகொடுத்த சோகத்திற்கு மத்தியில் அவர் இந்த உயர் அரியணையில் ஏறியுள்ளார்.
1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானின் அதிகாரம் தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். பெப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலில் அலி கொமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட மதகுருமார்கள் குழு கூடியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொஜ்தபா கொமேனி நிச்சயமான வாக்குகள் அடிப்படையில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இக்கட்டான சூழலில் மக்கள் அனைவரும் புதிய தலைமைக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என்று அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக நாட்டின் அறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் மத குருமார்கள் புதிய தலைவருக்குத் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்குமாறு ஈரான் அரசு ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
மறைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கொமேனி, ஈரானின் புதிய உயரிய தலைவராக (Supreme Leader) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களால் சில நாட்கள் காலந்தாழ்த்தியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உளவுத்துறை தலைவர்:
ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை (Assembly of Experts), போர் உக்கிரமடைந்துள்ள சூழலில் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் ஒரு வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிபுணர்கள் சபையின் செயலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகளுக்கு மத்தியிலும், ஈரானின் இஸ்லாமியக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக எவ்விதத் தாமதமுமின்றி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அந்தச் சபை அறிவித்துள்ளது.

அரசுத் தொலைக்காட்சியில் “அல்லாஹ் அக்பர்” முழக்கங்களுடன் மொஜ்தபா கொமேனி தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள மொஜ்தபா கொமேனி, ஒரு பாரிய தனிப்பட்ட சோகத்துடனேயே அதிகாரத்தைக் கையேற்றுள்ளார். கடந்த பெப்ரவரி 28 அன்று அவரது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில், மொஜ்தபாவின் தாயார், அவரது மனைவி மற்றும் ஒரு சகோதரியும் கொல்லப்பட்டுள்ளனர். குடும்பத்தையே பறிகொடுத்துள்ள நிலையில், ஈரானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு அவர் வசம் வந்துள்ளது.
இதுவரை எவ்வித அரசாங்கப் பதவிகளையும் வகிக்காத மொஜ்தபா, ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் உளவுத்துறையில் நீண்டகாலமாக ‘நிழல் உலகத் தலைவராக’ செல்வாக்கு செலுத்தி வந்தவர். 1980-களின் ஈரான்-ஈராக் போரில் பங்கேற்ற அனுபவம் கொண்ட இவர், ஈரானின் கடும்போக்குவாதப் பிரிவினரின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ளார்.
யார் இந்த மொஜ்தபா கொமேனி?
56 வயதான மொஜ்தபா கொமேனி, மறைந்த அலி கொமேனியின் இரண்டாவது மகன் ஆவார். 1969-இல் மஷ்ஹாத் நகரில் பிறந்த இவர், கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் இஸ்லாமிய இறையியல் பயின்றார். தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தந்தையின் அலுவலகப் பணிகளிலேயே செலவிட்ட மொஜ்தபா, இதுவரை எந்தவொரு பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டதோ அல்லது பொது இடங்களில் அதிகம் தோன்றியதோ இல்லை.
எனினும், ஈரானின் சக்திவாய்ந்த ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படை’ (IRGC) மற்றும் பழமைவாத மதகுருமார்களுடன் இவர் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 2009-ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற தேர்தல் போராட்டங்களின்போது, ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கியதில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மன்னராட்சி முறையை ஒழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி முறை உருவாவது ஈரான் அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வாஷிங்டனின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கப்படும் ஈரானின் புதிய தலைமை நீடிக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொஜ்தபா கொமேனிக்கு டிரம்ப் மிரட்டல்:
ஈரானின் இந்தப் புதிய நியமனத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் கொமேனியின் மகனை ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், தனது அனுமதியின்றிப் பதவியேற்கும் எவரும் நீண்டகாலம் நீடிக்க முடியாது என நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இஸ்ரேலும் ஈரானின் ஒவ்வொரு அடுத்தடுத்த தலைவர்களையும் வேட்டையாடுவோம் எனச் சவால் விடுத்துள்ளது.
மறுபுறம், சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
CENTCOM உறுதிப்படுத்தியுள்ள நிலையில் . ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது இரு நாடுகளுக்கும் இடையிலான போரை மேலும் உக்கிரமாக்கியுள்ளது.
போர் நிறுத்தத்தை விரும்பாத ஈரான்
மொஜ்தபா கொமேனி அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்து காலை இழந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழ் ‘தி சன்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கொமேனியை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி உயர்மட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் இக்கட்டான நிலையில் சிக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
அவருடைய வயிறு – கல்லீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கு வயிறு அல்லது கல்லீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும் ஈரான் சுகாதார அமைச்சருமான முகமது ரெஸா ஜாஃபர்கண்டி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிப்ரவரி 28 அன்று அவரது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபா கொமேனியும் காயமடைந்தாரா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.

இருப்பினும் தற்போது அவர் ஈரானின் போர் வியூகத்தை வழிநடத்துகிறார். இதுதான் உலகளாவிய எரிபொருள் விஷயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த ஒருவர், மொஜ்தபா கொமேனிக்கு கால்கள் அகற்றப்பட்டுள்ளச
அவர் கோமா நிலையில் இருக்கிறார் என கூறியுள்ளார்.
இதற்கிடையே தான் மொஜ்தபா கமேனி முதல் முறையாக நடக்கும் போர் விவகாரம் பற்றி நாட்டு மக்களுக்கு செய்தி வழங்கினார். தொலைக்காட்சியில் அவர் நேரில் தோன்றி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொஜ்தபா கமேனி பெயரில் வெளியான அறிக்கையை மட்டுமே ஈரான் தொலைக்காட்சிகள் செய்தி வாசிப்பாளர் மூலமாக ஒளிபரப்பியது. இதனால் உண்மையில் மொஜ்தபா கமேனி கோமா நிலையில் உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
![]()