கவிதைகள்

இழுக்குடை மனத்தின் அழுக்கினைப் போக்குவோம்!… கவிதை… ஜெயராமசர்மா

மனத்துக்கண் மாசுடன் மருந்தைக் கொடுத்தால்
கொடுக்கும் மருந்தும் தடுக்கா நோயினை
நோயினைத் தடுக்க நோவினை நீக்க
மருந்தைக் கொடுக்கும் மனத்தைத் திருத்துவோம்

மந்திரம் என்பதும் மருந்தே யாகும்
மனமதைத் திருத்த மந்திரம் மருந்தே
மாசுடை மனமே நோயுடை மனமே
மாசினை அகற்றிட மந்திரம் உதவும்

அல்லா மந்திரம் யேசு மந்திரம்
அரியும் மந்திரம் அரனும் மந்திரம்
உண்மை மந்திரம் நேர்மை மந்திரம்
உணர்வுடன் அமர்த்தினால் உள்ளம் தெளியும்

கள்ளம் அழுக்கு கபடம் அழுக்கு
கருணை இல்லா அனைத்தும் அழுக்கு
அழுக்கை அகற்றி அகத்தை வெளுக்க
அறத்தை வாய்மையை அமர்த்துவோம் அகத்தில்

வாய்மை இல்லா மனமும் அழுக்கு
வழுவினைக் காட்டும் அனைத்தும் அழுக்கு
அழுக்குடை மனமே இழுக்குடை ஆகும்
இழுக்குடை மனத்தின் அழுக்கினைப் போக்குவோம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *