கொழும்பில் ஏப்ரல் 11 இல் அகில இலங்கை சபரிமலை சாஸ்தா பீடத்தின் 45 வது ஆண்டு ஆன்மீகப் பெருவிழா!

சர்வதேச இந்துமத குரு பீடம் மற்றும் அகில இலங்கை சபரிமலை சாஸ்தா பீடம் இணைந்து நடத்தும் 45வது ஆண்டு மாபெரும் ஆன்மீகப் பெருவிழா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி சனிக்கிழமை கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி, சபரிமலைக் குரு முதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக முன்னதாக மார்ச் 8ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இவ்விழா, தற்போது ஏப்ரல் 11 அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்விழாவில், இந்த ஆண்டும் ஆன்மீகம், சமயம், கலை மற்றும் ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 35 சிரேஷ்ட பிரமுகர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இதில் குறிப்பாகச் சிவாச்சாரியார்கள், ஆலய நிர்வாக சபையினர், தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன் இந்த 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சாஸ்தா பீடத்தின் ஆரம்பகாலத் தொண்டரும் ‘அகில உலக ஸ்ரீ சாஸ்தா பீடம்’ அமைப்பின் நிறுவுனருமான கந்தையா கபிலன் அவர்களின் முயற்சியில், சாதனையாளர்களின் விபரங்கள் அடங்கிய விசேட ஆன்மீக மலர் ஒன்றும் இவ்விழாவில் வெளியிடப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு அருள்ஜோதி சிவாகம ஞானி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் மற்றும் சிவாகம ஞானி சிவநித்யானந்த சிவாச்சாரியார் ஆகியோரின் ஆசியுடன் நடைபெறும் இவ்விழாவில், வவுனியா அந்தணர் ஒன்றிய நிறுவுனர் முத்து ஜெயந்தநாத குருக்கள், கனடா ஸ்ரீதேவி வில்லிசைக்குழு இயக்குநர் சாம்பசிவ சோமாஸ்கந்த குருஜி, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மகேஸ்வர பாலகைலாசநாத குருக்கள், சர்வேஸ்வர பத்மநாப சர்மா மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகம்பிள்ளை விஸ்வநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தரும் சிவாகம விசாரத் நித்யானந்த சுதானந்த சிவாச்சாரியார் அவர்களின் விசேட ஆன்மீக எழுச்சியுரையும் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், லண்டன், சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வருகை தரும் ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் சபரிமலை யாத்திரை மேற்கொண்ட சுவாமிமார்கள் ஆகியோருக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ள இந்த விழாவில், அனைத்து பக்தர்களும் கலந்துகொண்டு ஐயப்பனின் அருளைப் பெறுமாறு சபரிமலைக் குரு முதல்வர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
![]()