கவிதைகள்

சுழலும் சக்கரம் சொல்லும் பாடமே!…. கவிதை… ஜெயராமசர்மா

துன்பமும் இன்பமும் சுழலும் சக்கரம்
உயர்வும் தாழ்வும் ஒருநிலை நில்லா
என்பதை அறியா எவருமே இல்லை
வருவது வந்திடும் வராதது நின்றிடும்

இருப்பதை ஏற்றிடும் பக்குவம் வேண்டும்
பறப்பதைப் பிடிக்க எண்ணிட வேண்டாம்
கிடைத்ததைப் பெரிதாய் நினைத்திட வேண்டும்
மனத்தினில் திருப்தியை இருத்திட வேண்டும்

அளவோ டமைந்தால் அனைத்தும் அமுதமே
அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் விஷமே
தெளிவாய் இருப்பது சிறப்பா யிருக்கும்
குழம்பிய மனது குப்பயையாய் போகும்

படைபல முடைய முடியுடை அரசரும்
முடியினை இழந்து கடைநிலை அடைவார்
கடைநிலை இருந்த அரசர்கள் கூட
முடியுடை அரசராய் அரசினை ஆளுவார்

கடைநிலை ஊழியன் முதலாளி ஆவதும்
முதலாளி கூடத் தொழிலாளி ஆவதும்
விசித்திரம் அல்ல வினோதம் அல்ல
சுழலும் சக்கரம் சொல்லும் பாடமே

தாழ்வினைக் கண்டு சஞ்சலம் வேண்டாம்
உயர்வினைக் கண்டு உவந்திட வேண்டாம்
சமநிலை பேணினால் சஞ்சலம் அகலும்
சமநிலை பேணுவோம் சந்தோஷம் நிறைப்போம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *