மெல்பேணில் தமிழ் மொழிச் சாதனை விழா!… கிறிஸ்டி நல்லரெத்தினம்

விக்ரோறிய மாநிலத்தில், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய,விக்ரோறிய கல்விச் சான்றிதழ் (VCE) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவை அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றது.
கடந்த வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா 2026 மார்ச் மாதம் 9ம் திகதி திங்கட்கிழமை, விக்டோரிய மாநிலத்தில் உள்ள கிளேற்றன் மண்டபத்தில் (Clayton Hall, Clayton) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்மொழிப் பாடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருது வழங்கியதுடன், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் இந்த விழாவில், பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் மெல்பேணில் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் வெற்றிகரமாக எழுத்தாளர் விழாக்களையும், படைப்பாளிகளின் கௌரவிப்பு மற்றும் வாசிப்பு அனுபவ பகிர்வுகளையும், நூல் வெளியீடுகளையும், மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
மேலும், 2019 முதல் இச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறு கதைத்தொகுதி, நாவல், கவிதை, கட்டுரை எனும் நான்கு பிரிவின் கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த நூல்களுக்கு இலங்கை ரூபா Rs. 50,000 பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவித்து வருகின்றது. சங்கத்தின் இந்த செயற்பாட்டின் நோக்கம் இலங்கைப் படைப்பாளிகளை ஊக்குவித்து கௌரவிப்பதுடன் அவர்கள் படைப்புகளுக்கு உலக அரங்கில் ஒரு களம் அமைத்துக் கொடுப்பதும் ஆகும்.
விக்டோறிய மாநிலத்தில், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய,விக்றோரிய கல்விச் சான்றிதழ் (VCE) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டுவதன் நோக்கம் மாணவர்களை தமிழை ஒரு பாடமாக கற்க ஊக்குவிப்பதுடன் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை கௌரவிப்பதும் ஆகும்.
செல்விகள் மோஷிகா பிரேமதாச, ஸ்ரீசேகா பிரேமதாச ஆகியோரால், தமிழ் வாழ்த்துப்பாடலும், அவுஸ்திரேலிய தேசிய கீதமும் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட, இந்த விழாவில், செல்வி மோஷிகா பிரேமதாசவின் வீணைக் கச்சேரி, செல்வன் நிஷித் ராஜன்பாபுவின் மெல்லிசைப் பாடல், துசியந்தி ராஜராஜன், வினுசாகினி இராஜராஜன் சகோதரிகளின் பரதநாட்டியம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன. மேகானந்தி சிவராசா அவர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து புகைப்படங்களையும் திரு விமால் அரவிந்தன் அவர்கள் அழகுற பதிவு செய்தார்.
விக்டோறிய பாராளுமன்ற அங்கத்தினர் திரு. லீ டர்லாமிஸ் சிறப்பு விருந்தினராக பங்குபற்றி, உரையாறியபோது, சங்கத்தினரின் இந்தப் பணியை வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், இந்த விழாவில், முதுபெரும் எழுத்தாளர், திரு.லெட்சுமணன்.முருகபூபதி அவர்களின், சேவைநலன் பாராட்டு வைபவமும் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி, பாடும்மீன் ஶ்ரீ கந்தராசா அவர்கள், முருகபூபதியைப் பாராட்டும் வாழ்த்து மடல் கேடயத்தை வாசித்து, வழங்கி அவரைக் கௌரவித்தார். திரு. நோயல் நடேசன் அவர்கள் பாராட்டுரையாற்றினார்.
விழாவுக்குத் தலைமை தாங்கிய, சங்கத்தின் உபதலைவர், திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்கள் தனது தலைமை உரையில் VCE பாடத்திட்டத்தில் மொழிப்பாடங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாகப் பேசினார்.
அவர் தன் உரையில்: விக்ரோறிய பாடத்திட்ட மதிப்பேட்டு அதிகார சபை (The Victorian Curriculum and Assessment Authority (VCAA)) 116 பாடங்களைக் கொண்ட ஒரு பரந்த VCE பாடத்திட்டத்தை நிர்வகித்து வருகிறது. அவர்கள் அண்மையில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, தாய்மொழிப் பாடங்களில் குறைந்த மாணவர் சேர்க்கையே VCAA எதிர்கொள்ளும் முக்கியச் சவால்களில் ஒன்று என்று கூறப்பட்டிருந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டில் பத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஒன்பது தாய் மொழிப் பாடங்கள் நீக்கப்படும் அபாயத்தில் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த ஒன்பது மொழிப்பாடங்கள் தவிர, பெரும்பான்மை மொழிகளாக இருக்கும் மேலும் 27 தாய் மொழிகளில்,100க்கும் குறைவான மாணவர்களையே கொண்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையிலும், நமது தமிழ் மொழி குறித்த தரவுகள் இங்கு குறிப்பிடத்தகுந்தவை. 2024 ஆண்டு VCE தமிழில் 46 மாணவர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், 2025 ஆண்டு இந்த எண்ணிக்கை 50க்கும் மேல் உயர்ந்துள்ளது. இது ஒரு உற்சாகமான செய்தி !
இதற்கு முக்கிய காரணிகளாக பெற்றோர்களின் ஊக்குவிப்பும், மாணவர்களின் ‘தமிழைக் கற்கவேண்டும்’ என்ற வேட்கையும் இந்த மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக கற்க களம் அமைத்துக் கொடுத்த தமிழ் பாடசாலைகளையும் அங்கு ஒரு அர்ப்பணிப்புடன் கற்பிக்கும் ஆசிரியர்களையும் நிர்வாகத்தினரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்! மொழிப் பாதுகாப்பு என்பது வெறும் எண்ணிக்கை அடிப்படையான தல்ல அது ஒரு சமூகத்தின் அடையாளம்! இதில் மாணவர்கள் மட்டுமன்றிப் பெற்றோரின் பங்களிப்பும் மிக முக்கியமானதொன்று. மாணவர்களின் மொழி நோக்கிய பயணத்தின் முதல் அடியை அவர்கள் தம் பெற்றோரின் வழிகாட்டலிலேய கைபற்றி தொடங்குகிறார்கள். இப்பயணம் ஒரு கலாச்சாரம் மற்றும் மரபை நோக்கிய நெடும்பயணம். எனவே இந்த பயணத்தின் எதிர்கால திசை நோக்கிய விவாதத்தில் அல்லது திட்டமிடுதலில் பங்குதாரர்களாய் அனைவரும் உற்சாகமாக பங்கேற்று, நமது வருங்காலத் தலைமுறையினருக்கு சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட கல்வி முறையை உருவாக்குவதில் ஊக்கமுடன் பங்களிக்க வேண்டும் என்றும், அவ்வாறான ஊக்கப் படுத்துதலைப் பிரதான நூக்கமாகக் கொண்டே சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் இந்த நிகழ்ச்சியை எமது சங்கம் முன்னெடுத்து வருகிறது என்றும் கூறினார்.
சங்கத்தின் பொருளாளர், திருமதி சிவமலர் சபேசன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்ற இந்த விழாவில், பெற்றோர்களும், பாடசாலைகளின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும், கலை ஆவலர்களும் கலந்து கொண்டு, மிகச்சிறப்பாக நடந்தேறியது.

![]()