ஒளி அமைப்பு உபகரண கொள்வனவிற்கு நிதியுதவி கோரும் திருமறைக்கலாமன்றம்!

யாழ்ப்பாணத்தில் சுமார் 65 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க திருமறைக்கலா மன்றம் கலை மற்றும் நாடகத் துறையைப் பாதுகாத்து வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.
தலைமுறைகள் கடந்து கலை மரபை பேணிவந்த இம்மன்றம், கடந்த இருபது ஆண்டுகளாக இளைஞர்களை போதைப்பொருள் உள்ளிட்ட தவறான வழிகளிலிருந்து விலக்கி, அவர்களை கலைத்துறையின் பால் நல்வழிப்படுத்துவதையே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 15 நாடகங்களை மேடையேற்றி வரும் இம்மன்றம், சமூக விழிப்புணர்வு, ஆன்மீகச் சிந்தனை மற்றும் கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றை இணைக்கும் பணியைச் செய்து வருகிறது.
குறிப்பாக வருடா வருடம் நடத்தப்படும் ‘பஷன் பிளே’ (Passion Play) எனும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளைச் சித்தரிக்கும் பிரம்மாண்டமான மேடைத் தயாரிப்பு சுமார் இரண்டு மணிநேரம் கலை நயத்துடனும் உணர்ச்சி வளத்துடனும் அரங்கேற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இருப்பினும், குறித்த கலைப் பயணத்தில் தற்போது ஒரு முக்கிய சவால் எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த ஒளி அமைப்புகள் (Lighting Equipment) அனைத்தும் பழுதடைந்து, சீரமைக்க முடியாத நிலையை எட்டியுள்ளது.
மேடை நாடகங்களின் தரம், காட்சியமைப்பு மற்றும் பார்வையாளர் அனுபவம் ஆகியவற்றில் ஒளி அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதால், குறித்த கலைப்படைப்புகளை, குறிப்பாக வருடாந்த ‘பஷன் பிளே’ நிகழ்வைத் தரம் குறையாமல் வழங்க புதிய Light Unit அமைப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
இதற்காகச் சுமார் 8 இலட்சம் (LKR 800,000) நிதி மதிப்பீட்டில் புதிய உபகரணங்களை (48 Channel Mixer, 12 Channel Power Pack, 1000W Stage Light மற்றும் Cables) வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முதலீடு, எதிர்கால நாடகங்கள் அனைத்தையும் தரம்குறைவின்றி அரங்கேற்ற உதவும் அடித்தளமாக அமையும்.
எமது கலைப் பாரம்பரியத்தைத் தொடரவும், இளைஞர்களை கலைக்குள் இணைத்து சமூக நல்வாழ்வை மேம்படுத்தவும், உங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரிக்குமாறு திருமறைக்கலா மன்ற நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

![]()