சத்தியாக்கிரக போராட்டம்; புதிய சிக்கலில் கஸ்ஸப தேரர்!

ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் வகையிலும், தவறாக வழிநடத்தும் வகையிலும், பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும் பொய்யான கூற்றுக்களை பலங்கொட கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பெலவத்தை தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலதிக நீதவான் அசங்க எஸ் போதரம முன்னிலையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலவத்தை தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தின் அமைப்பாளர் ஜகத் பஸ்நாயக்க, கறுவாத்தோட்டம் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
விகாரமஹாதேவி பூங்காவிற்கு கத்திகளுடன் வந்த இருவர் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் கடந்த 22ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்ட கூற்று முற்றிலும் பொய்யானது என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பிழையானது என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கத்திகளுடன் வந்த நபர்கள் பெலவத்தை தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திலிருந்தே அனுப்பி வைக்கப்பட்டதாக கஸ்ஸப தேரர் தெரிவித்த கூற்று பொய்யானது எனவும், இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான கூற்றுக்களை பரப்புவது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98வது பிரிவை மீறும் செயலாகும் என்பதால், இக்கூற்றுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த கூற்றின் தொகுக்கப்படாத காணொளிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு தனியார் ஊடக நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த குறித்த கூற்று தொடர்பான தொகுக்கப்படாத காணொளிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு ஊடக நிறுவனத்திற்கு உத்தரவிட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
![]()