இலங்கை

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களின்றி உயிர்நீத்தவர்களை நினைவுகூர உரிமை உண்டு!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், பொலிஸாரினால் ‘A’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் காணி உரிமை தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க முடியாது என அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணி தமக்குச் சொந்தமானது எனவும், அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, தம்மைக் காணி உரிமையாளர்கள் எனக் கூறிக்கொண்ட தரப்பினர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வேலன் சுவாமி உள்ளிட்ட நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, சாட்டியில் மாவீரர் நாள் நிகழ்விற்குத் தடை விதிக்கக் கோரி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ‘A’ அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொலிஸாரினால் உரிய சட்டப்பிரிவுகள் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வழக்கினை இன்றைய தினத்திற்கு (20) ஒத்திவைத்திருந்தது.

அதற்கமைய, இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை உள்ளது எனத் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் மற்றும் அடையாளங்களைக் காட்சிப்படுத்தாமலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை உண்டு என மன்று சுட்டிக்காட்டியது.

அத்துடன், பொலிஸார் ‘A’ அறிக்கை ஊடாக இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளமையால், காணி உரிமை தொடர்பில் கட்டளையொன்றைப் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *