ஞானசாரருக்கு உடனடியாகப் பொதுமன்னிப்பு வழங்கி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரவும்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி தற்போதைய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் கருத்தின்படி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் ஆகும். அந்தக் குற்றத்திற்காக ஞானசார தேரர் 10 மாதங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பிலும் அவருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட நடைபயணம் மற்றும் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளாத தேரர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவை நடக்கக்கூடாத தவறுகளாகும். அதேபோல், அவரது காவி ஆடையை கழற்றி எறிய உத்தரவிட்டவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுவது பொருத்தமானதாகும்.
மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களின் தலையீட்டின் கீழ், ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.
![]()