கதைகள்

நடுகைக்காரி 85 …. ஏலையா க.முருகதாசன்

பல திறமைசாலிகளை உருவாக்குங்கள்,ஒரு சமூகம் ஒரு தனிமனிதனில் மட்டுமே தங்கியிருக்கக்கூடாது.அது பலரிலும் தங்கியிருக்க வேண்டும் என்று பொதுவுடமைத் தத்துவத்தை வி.பொன்னம்பலம் என்ற பொதுவுடமைவாதிக்கே சொன்ன போது அவர் திகைச்சுப் போய்விட்டார்.
-சிலம்பரசி

புடவைக்கடையில் மலிவென்றால் காகங்கள் மாதிரி கரைiயாத குறையாக குளிக்காமல் வந்திடுங்கள் என்று பார்வதியைப் பார்த்துச் சிலம்பரசி சொன்ன சொல் சங்க நிர்வாகம் வரையும் போய் அப்படிச் சொன்னது ஒருவரை அவமானப்படுத்தி வேதனையை உருவாக்குதம் சொல் என சங்கத்தின் முகாமையாளருக்கும் தலைவருக்கும் கோபத்தைக் கிளப்பவே,சக மனிதர்களைத் தவறான பார்வையுடன் சிலம்பரசி சொன்னதால் அவளை தெல்லிப்பழைச் சங்க முகாதைமயாரும் தலைவருமாகச் செர்ந்து ஒரு கிழமைக்கு இடைநிறுத்தம் சிலம்பரசி எதிர்பார்க்கயில்லை..

சிலம்பரசி பொருளாதாரக் கல்வியை விசேட பாடமாக எடுத்து அதில் முதலாவது பிரில் சித்தியடைந்துவிட்டாள்.அந்த இலகையில் நான்கு பேர் பி.ஏ பட்டதாரிகள், அதில் மூன்று பேர் ஆண்கள்.சிலம்பரசி மட்டுமே பெண்.

தான் ஒரு பெண்ணாக எக்னொமிக் ஒனர்ஸ் பட்டதாரியாக இருப்பதில் அவளுக்கு ஒரு கர்வம் இருந்தது.தெல்லிப்பழைச் சங்கத்தின் வியாபார முன்னேற்றத்திற்கான வழிவகைகளை வியாபாரத்தைப் பெருக்குவதற்கான சங்கத்தில் வியாபாரத்துக்காக வாங்கும் பொருட்கள் தரமானவையாகவும் அதே நேரம் அது மக்களுக்கு மலிவானதாக இருக்க வேண்டும்,சங்கத்தோடு மக்கள் இசைவாக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை சிலம்பரசி பலமுறை சங்க நிர்வாகத்துக்குச் சொல்லியிருந்தாள்.

கொஞ்சம் அவளுக்குத் திமிர் இருந்தது என்னவோ உண்மைதான்.அந்தத் திமிரும் அவளுக்குக் கல்வியால் கிடைத்த திமிர்தான.கல்வியின் பெறுபேறு என்பது அடுத்தடுத்த கட்டங்களில் அந்தக் கல்வியின் பிரதிபலன் மக்களுக்கு என்ன பலனைக் கொடுக்கிறது என்பதேயாகும்.
சிலவேளைகளில் சிலம்பரசி சக ஊழியர்களுடனும்,மக்களோடு பழகுவதையும் பார்த்தால் இப்படி ஒரு நல்லவளா என வியக்கத் தோன்றும்.

அவளை சங்க நிர்வாகம் விரும்பியதற்கு,அவளிடம் காணப்பட்ட பொருளாதாரக் கல்வி,அதன் கோட்பாடு சம்பந்தப்பட்ட நுட்பமான அணுகுமுறையுந்தான்.

சங்கத்துக்கு என்று வணிக அமைச்சினால் வரையறுக்கப்பட்ட சட்டங்களிருந்த போதும்,ஒவ்வொரு சங்கமும் அச்சங்கம் இருக்கும் இடத்தையும் அச்சங்கங்களோடு தொடர்புடைய மக்களின் வருமானத்தையும் கவனத்தில் எடுத்து விலைகளைக் குறைக்கும் சட்ட ரீதியான உரிமைகளை வணிக அமைச்சு சங்கங்களுக்கு கொடுத்திருந்தது.

வேறு எந்தச் சங்கங்களிலும் நடைமுறையில் இல்லாத அணுகுமுறை தெல்லிப்பழைச் சங்கத்திலிருந்தது.பாவனையாளர்களுடன் கூட்டங்களை வைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்கும் அதே நேரம்,விற்பது வாங்குவது,மக்களின் வருவாய்ப் பொருளாதாரம்,உணவுகளை வீட்டில் உள்ளவர்களுக்கு போதுமானதற்கு அப்பாலும் சமைப்பது சாப்பிட்டது போக மிகுதியை குப்பையில் கொட்டுவது போன்ற செயல்பாடுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு என்னென்ன பாதிப்புகளைக் கொடுக்கும் என்பதை அனைவருக்கும் விளங்கும் வகையில் சிலம்பரசி சொல்வதைக் கேட்டுவிட்டுச் செல்பவர்கள் ஒரு புதுப்பிள்ளை சங்கத்திலை வேலை செய்கிறாள் இப்படி யாருமே இதுவரையில் அறிவுரை சொன்னது இல்லை,வருமானம் செலவு என்பது பற்றி உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கப்படுத்தியதே இல்லை பேசாமல் அந்தப் பிள்ளையையே சங்க முகாமையாளராகப் போட்டால் சனங்களுக்கும் நல்லது சங்கத்துக்கும் நல்லது என்று பரவலாக கதைக்கத் தொடங்கிவிட்டனர்.

சிலம்பரசி தான் படித்தது போதும் ஒரு சங்கத்துக்கு தான் செய்கிற அறிவு உதவி இவ்வளவும் போதும் என்று நினைக்காது தொடர்ந்து வணிகம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை யாழ்ப்பாணம் பொது நூல் நிலையத்திலிருந்தும்,அதுசார்ந்த ஆங்கிமொழிப் புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்தும் தபால் மூலம் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.பொருளாதாரமும் மக்களும்,பாவனையாளர்களும் அவர்களின் நாளாந்த,மாதாந்த வருமானமும் வருமானமும் என்ற கட்டுரைகள் இலங்கையின் பிரபலமான தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகளில் வரத் தொடங்க,சிலம்பரசியின் அனுமதியுடன் சிங்களப் பத்திரிகைகள் அதை மொழிபெயர்ப்புச் செய்து பிரசுரிக்கவும் தொடங்கின.

அவள் சிலசமயம் கர்வம் பிடித்தவள் போல இருப்பாள் சிலசமயம் இவளைப் போல நல்லவர்கள் யாருமே சங்கத்தில் இல்லையென்பது போலவும் இருப்பாள்.
அவளின் கல்வித் தகுதிக்கு பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்யும் பணியாளராக இருக்க வேண்டிய தேவையே இல்லை.அதைவிட உயர்ந்த பதவிக்கு அவளால் போக முடியும்,பணி செய்து கொண்டே தன்னை ஒரு பேராசிரியரின் கல்வித் தகுதிக்காக அவளால் படிச்சிருக்கவும் முடியும்.

ஆனால் அதை எதையும் செய்யாமல் ஒரு சங்கத்தில் ஏன் வேலை செய்கிறாள் என்பது ஊரில் சிலருக்கும் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் வியப்பகாகத்தானிருந்தது.
சங்க முகாமையாளரே ஒருமுறை நீங்கள் பொருளாதாரப் படிப்பில் ஓனர்ஸ் பட்டம் வாங்கி வைச்சிருக்கியள் வேறை நல்ல பணிக்கு போகலாந்தானே என்று கேட்ட போது சிலம்பரசி,இது எனது ஊர்,நான் வளர்ந்து படிச்ச ஊர்,எனது ஊர் மக்களுக்காக வேலை செய்வதையே விரும்புகிறன், இந்தச் சங்கத்தைப் பயன்படுத்துகிற மக்கள் எல்லாருடைய வருமானமம் ஒரே மாதிரியானது அல்ல., வருவாயில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. சராசரியாக கணித்து அவரவரின் வருவாய்கு ஏற்ற சமன்நிலையில் எல்லாருக்கும் பொருத்தமாக விலையில் சங்கங்களினால்தான் குடுக்க முடியும்,எனது பொருளாதாரம் வணிகம் சம்பந்தப்பட்ட படிப்பு எனது ஊருக்கு உதவட்டுமே என்பது மட்டுமல்ல எனது தந்தையும் கூலி வேலை செய்துதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர் அதனால் நான் விரும்பியே இந்த வேலையைச் செய்கிறன் என்று நவரட்ணராஜாவுக்குப் பதில் சொன்ன போது இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா என சிலம்பரசியை நினைக்க அவருக்கு வியப்பு ஏற்பட்டது.

சிலம்பரசியின் தாயாரும் எல்லாரையம் எடுத்தெறிந்து பேசுபவர்தான்.அதனால்தான் சிலம்பரசியை தாயைப் போல பிள்ளை என்று சாடைமாடையாக ஊருக்குள் ஒருசிலர் பேசுவதுமுண்டு.

சிலம்பரசி சங்கம் நட்டப்படக்கூடாது என்று சிந்திக்கும் அதேயளவு நல்லெண்ணம் என்றதைவிட அதற்கும் மேலாக மக்களும் தமது வருவாய்க்குத்தக்கதாக எல்லாப் பொருட்களையும் வாங்கும் நிலைக்குத் தக்கதாக விலைகளிருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாள்.

ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட நாட்களைக் கடந்தும் அதிகளவு விற்பனை செய்யப்படாமலிருந்தால், அதுநாட்கள் செல்லச் செல்ல அதன் தரத்தை அது இழந்துவிடும் என்பதால் மக்களுக்கு அந்தப் பொருளை மலிவாக விற்பனை செய்யும் ஒரு பொறிமுறையை சங்கத்துக்கு பரிந்துரைத்தாள்.

தெல்லிப்பழைச் சங்கம் மக்களோடு உறுதுணையாக இருப்பதை அறிந்த அயலூர்ச் சங்கங்கள் அதற்கு மூலவேராக இருந்துவரும் சிலம்பரசியைத் தமது சங்கத்துக்கு கொண்டு வருவதற்கு பகீரத முயற்சிகள் ஏடுத்த போதும் சிலம்பரசி அதை முற்றாக நிராகரித்திருந்தாள்.
ஆனால் தனது அறிவை எல்லாச் சங்கங்களும் பயன்படுத்துவதற்காக சங்கங்களை நிர்வகிக்கும் சபையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டாள்.

அளவெட்டியில் இருந்த பொதுவுடமைக் கட்சிச் சேர்ந்த வி.பொன்னம்பலம் அளவெட்டிச் சங்கத்துக்கு சிலம்பரசியைக் கொண்டுவர பெரும்பாடுபட்டும், அவள் அவருக்கு என்னை மட்டும் பெரிதுபடுத்தாதீர்கள் என்னைப் போல அல்லது என்னைவிட திறமைசாலிகளை உருவாக்குங்கள்,ஒரு சமூகம் ஒரு தனிமனிதனில் மட்டுமே தங்கியிருக்கக்கூடாது.அது பலரிலும் தங்கியிருக்க வேண்டும் என்று பொதுவுடமைத் தத்துவத்தை பொதுவுடமைவாதிக்கே சொன்ன போது அவர் திகைச்சுப் போய்விட்டார்.

தனது கல்வியால் மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணம் அவளிடமிருந்த போதும்,அவளையுமறியாமல் எங்கேயோ ஒரு மூலையில் திமிர்த்தனமும் ஒளிந்திருந்தபடியால்தான் பார்வதியைப் பார்த்து அவள் சொல்லிய வார்த்தை அவளை ஒரு கிழமைக்கு பணிக்கு வரவேண்டாம் என்று சங்கம் முடிவை எடுக்கும் நிலைக்கு அவளைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றது.

மங்களேஸ்வரியினதும் முருகதாசனினதும்  பெற்றோர்தான் சிதம்பரப்பிள்ளையும் தனபாக்கியமும். முருகதாசனும் சங்கத்தில் சாதாரண கிளார்க்காக பணி செய்து கொண்டிருந்தான்.பொருளாதாரத்தில் ஒனேர்ஸ் பட்டப்படிப்பில் சித்தியடைந்த சிலம்பரசி சங்கத்தில் பணிக்குச் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே முருகதாசனுக்கும் சிலம்பரசிக்குமிடையில் காதல் ஏற்பட்டது.

முருகதாசனின் பெற்றோருக்கு,சிலம்பரசியின் தாய் ஒரு வாய்க்காரி என்பதாலும்,சிலம்பரசி ஒரு பட்டதாரி மகனை மதிக்கமாட்டாள் என்ற கற்பனையாலும் அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க முருகதாசனின் பெற்றோர் தயக்கம் காட்டினார்கள்.

ஆனால் மகனின் விருப்பத்தை முழுதாக எதிர்க்காமல் கண்டும் காணாதமாதிரி  இருந்தார்கள்.பெற்றோரின் மௌனமான சம்மதத்துடன் முருகதாசனும் சிலம்பரசியை ஆறு மாசத்துக்கு முன்னர்தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டான்.

சிலம்பரசியை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனால் பெற்றோர் அவளை வா என்று சொல்லி வரவேற்பார்களோ மாட்டார்களோ என்ற தயக்கமே இதுவரையும் சிலம்பரசி முருகதாசனின் வீட்டுக்குப் போகாமல் விட்டதற்குக் காரணம்.

ஆனால் ஊருக்குள் புதினம் கதைப்பதற்கென்ற சிலர் என்ன பாக்கியம் மோன் ஊரிலை பொம்பிளையில்லாமலா ஒரு திமிர்க்காரியை விரும்பிப் பிடிச்சிருக்கான் என்று கேட்க, அவன் விரும்பினான் அவன் கட்டினான்,தாய்தகப்பனான நாங்களே பிள்ளைகள் சந்தோசமாயிருந்தால் போதுமென்று இருக்கிறம் இப்ப உங்களுக்கென்ன வந்திட்டுது என்று தனபாக்கியம் புதினம் கதைச்சவர்களுக்கு வெடுக்கென்று சொல்ல பதில் எதுவுமே சொல்லாமல் போனவர்களில் சிலர்,அடுத்தவர் வீட்டுப் படலையைத் திறந்து, இவள் தனபாக்கியம் சிலம்புக்காரியின்ரை தாயைவிட மோசம் நான் நல்லதுக்குச் சொன்னதற்கு என்னோடு வெடுக்கென்று விழுகிறாள் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

எது அந்த நல்லது என்பதை நாகம்மாவிடம் பின்னேரம் கேட்டுத் தெரிந்து கொள்வம் என்று படலை வீட்டுக்காரி பேசாமலிருந்து விடுவாள். இதுவரையும் தனது மாமியார் வீட்டுப் பக்கமே போகத் தயங்கிய சிலம்பரசி தனது மாமியாரை சங்கத்தடியில் கண்டதும் கலங்கித் தவித்தவள், அவளையறியாமலே ஓடிப்போய் மாமியாரின் தோள் மீது தலையை வைச்சு தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது மாமி என்று சொல்லி அழுது கண்ணீர் விட்டபோது,தனது மருமகள் அவளின் திமிரால் ஏதாவது பிழை விட்டிருப்பாளோ என்பகதற்கப்பால் என்ன இருந்தாலும் அவள் எனது வீட்டு மருமகள் என்ற பாசத்தில் தனபாக்கியம் அவளின் முதுகைத் தடவிக் கொடுத்த இப்ப என்ன நடந்து போச்சுது பிள்ளை, என்ன இருந்தாலும் நீ எங்களுடைய மருமகள்.வா வீட்டுக்கு என்று கூப்பிட மங்களேஸ்வரியும் அழாதையுங்கோ அண்ணி,உங்களை எல்லாரும் திடமான பொம்பிள என்று சொல்லுவினம்,இப்பிடி அழுகிறீர்களே.நீங்கள் எங்கடை வீட்டுக்கு வருவதில்லைத்தான்,ஆனால் சங்கத்தில் உள்ளவர்கள் உங்கள் கெட்டித்தனத்தைப் பற்றிச் சொல்லும் போது நாங்கள் சரியாச் சந்தோசப்படுவம் என்று சொல்லி அவளின் தோளில், பாசத்துடன் மெதுவானகக் கைவைச்சு ஆறுதல்படுத்தி அவளைக் கூட்டிக் கொண்டு வருகின்றனர்.

மகாஜனாக் கல்லூரிக்குப் மேற்குப்பற ஒழுங்கையிலேதான் சிதம்பரப்பிள்ளை தனபாக்கியத்தின் வீடு இருந்தது.அங்கேதான் நாகம்மாவின் வீடும் இருந்தது. ஒழுங்கையால் போவோர் வருவோரை வேலிக்கு மேலால் தெரியும் தலைகளின் அமைப்பை வைச்சே அது யாரெனச் சொல்லிவிடுவது நாகம்மாவின் கவனிப்புகளில் ஒன்று, அவரையறியாமலே அவரின் கண்கள் ஒழுங்கைவேலியைப் பார்க்கும்.அது இசைவாக்கப் பண்பாகவே அவரின் அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாக நாகம்மாவின் வாழ்வோடு கலந்துவிட்டது.

சிலம்பரசியைக் கூட்டிக் கொண்டு தனபாக்கியமும் மங்களேஸ்வரியும் ஒழுங்கையால் வரும் போது முற்றத்தில் நின்ற நாகம்மா,என்ன இது மூன்று தலைகள் தெரியுதே,அதிலும் ஒரு தலை கம்பீரமான உடம்புக்குரியவளின் தலையாகத் தெரியுதே, தனபாக்கியத்தினதும் மஙகளேஸ்வரியினதும் தலையைத் தவிர இன்னொரு தலைக்குரியவள்,அது யாராக இருக்கும் என நினைச்சுக் கொண்டே யாரென்று பார்ப்பம்என வேகமாக தனது படலையடிக்குப் போகிறாள்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *