இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 06 … செங்கதிரோன்

பாலமுனை பாறூக்கின் ‘51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூலின் வெளியீடு 23.11.2025 அன்று அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.

‘51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூல்

பண்டைத்தமிழ் நூல்கள் எனப் போற்றப்படும் சங்க இலக்கிய நூல்களெல்லாம் அரசனின் முன்னிலையில் புலவர் பெருமக்களான ஆன்றோர் நிரம்பிய அவையிலே சங்கப்பலகையிலேதான் அரங்கேற்றம் கண்டதாக அறிகிறோம். அதாவது படைப்பொன்று அரங்கேற்றத்துக்கு முன்பே அதன் தகுதியும் தரமும் அறிந்த பின்னர்தான் அரங்கேற்றம் காணும் ஒரு செயன்முறையை – மரபை நாம் வரலாற்றில் காண்கிறோம்.

பின்னர் சங்கம் மருவியகாலத்து நூலான சிலப்பதிகாரக் காவிய அரங்கேற்றத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். அது என்னவெனில், சங்ககால வழக்கிலிருந்து சற்றுமாறி மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனும் தமிழ்வல்லோன் கண்ணகியின் கதையைச் சொல்லசொல்ல அதனைக் கேட்டுக்கேட்டு இளங்கோவடிகள் எழுதஎழுத அந்நிகழ்வே சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றமாகி விடுகிறது.

ஓலையும் எழுத்தாணியும் கொண்டு படைப்புகள் எழுந்தபோது இருந்த நிலைமை இவை.

பின்னர் ஐரோப்பியரின் வருகையினால் தமிழ்ச்சூழலில் அச்சுத்தாளும் அச்சியந்திரமும் அறிமுகமாகித் தமிழின் உரைநடையில் ஏற்பட்ட வளர்ச்சியினால் – பாய்ச்சலினால் பல நூல்கள் அச்சிடப்பெற்று வெளியிடப்பெறும் வகையில் நிலைமை மாறுகிறது.

பாலமுனை பாறூக்

அவ்வாறு அச்சில் நூல்கள் வெளிவரத் தொடங்கியதும் அவற்றின் தகுதியும் தரமும் பற்றிய கேள்விகளும் எழுதத்தொடங்க தங்கத்தை உரசிப்பார்த்து அதன் தரத்தை அறிவதுபோல நூல்களையும் உரசிப்பார்க்கும் விமர்சனம் எனும் செயன்முறை எழுகின்றது. கால ஓட்டத்தில் மரபுவழிசார்ந்த விமர்சனம் மாறிப் படைப்புக்களை மார்க்சிச்க் கண்ணோட்டத்துடன் மற்றும் நவீன கலை இலக்கியக் கோட்பாடுகளின் பின்னணியில் விமர்ச்சிக்கும் ஒரு நடைமுறை நவீன காலத்தில் அறிமுகமாகிறது. இலங்கையிலே அவ்வாறான மார்க்சிசக் கண்ணோட்டத்திலும் நவீன கலை இலக்கியக் கோட்பாடுகளின் பின்னணியிலும் விமர்சனங்களை முன்வைத்தவர்களில் பேராசிரியர்களான கைவாசபதியும், சிவத்தம்பியும் தற்போது சபா. ஜெயராசாவும் பேசப்படுகின்றார்கள். ஆனாலும் அரசியல் சித்தாந்த – தத்துவார்த்த மற்றும் நவீன கலை இலக்கியக் கோட்பாடுகளான பலவிதமான ‘இசம்’களின் கண்ணாடிகளை மாட்டிக்கொண்டு படைப்புகளைப் பார்க்கக்கூடாது என்கின்ற எதிர்வினையும் ஈழத்து இலக்கியப் பரப்பில் எழுந்தன. அதனால் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரின் விமர்சன வழிமுறை காலாவதியாகிவிட்டதொரு நிலைமை தோன்றிற்று. ‘இசக்’ கண்ணாடிகளை அணிந்து கொண்டு எழுத்தைப் பார்க்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

தமிழ்ச்சூழலில் அச்சுநூல்கள் குறித்த விமர்சனங்களைவிட ஆரம்பகாலத்தில் தமிழ்த்திரைப்படங்கள் மீதான விமர்சனங்கள்தான் மக்களைக்கவரும் சுவாரஸ்யம் நிறைந்ததாக விளங்கின. அதனால் ஒப்பீட்டளவில் நூல்களைப் பற்றிய விமர்சனங்களை விடவும் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள்தான் கலை இலக்கியப் பரப்பில் அதிகமாக இடம் பிடித்தன. இதற்குச் சிற்றிதழ்கள் குறிப்பாக கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் போன்ற வணிகசஞ்சிகைகள் கணிசமான பங்களிப்புச் செய்தன.

அத்தகைய சினிமா விமர்சனங்கள் நீண்ட கட்டுரைகளாக அமையாது இச் சஞ்சிகைகளின் ஒரு பக்கத்தில் அமையுமாறும் – திரைப்படமொன்றின் சாராம்சத்தைச் சாறுபிழிந்து இறுக்கமாக அமைந்ததாகவும் இருந்தன. உதாரணமாக எம்.ஜி.ஆர் நடித்த ‘நீதிக்குப் பின் பாசம்’ எனும் திரைப்படத்தின் ஒரு பக்க விமர்சனக் குறிப்பின் இறுதியிலே ‘நீதிக்குப் பின் பாசம் பாதிக்குப்பின் மோசம்’ என முடியும். காரணம் அத்திரைப்படம் இடைவேளை வரைக்கும் விறுவிறுப்பாக ஓடி இடைவேளைக்குபின் சற்று மந்தமாகி விடுவதால் அதனையே அவ்வாறு அந்த விமர்சனக் குறிப்பு சுட்டியது. இத்தகைய சுருக்கமும் இறுக்கமும் விமர்சனத்திற்கு மெருகூட்டுகின்றன எனலாம்.

ஈழத்தைப்பொறுத்தவரையும் நூற்படைப்புக்களைப் பொறுத்தவரையும் பலர் விமர்சனக்கட்டுரைகளையும் – திறனாய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருந்தாலும்கூட அவர்களுடைய பெயர்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு மேலெழுந்தது அமரர்.மு.ளு.சிவகுமாரனின் பெயராகும். காரணம் அவருடைய ஆழமான அகலமான ஆனால் சுருக்கமும் இறுக்கமும் உடைய நடுநிலையான விமர்சனப் பாங்காகும்.

மு.ளு.சிவகுமரன் அவர்கள் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக – திறனாய்வாளராக – பத்தியெழுத்தாளராக – ஒலிபரப்பாளராக – ஊடகவியலாளராக – மொழி பெயர்ப்பாளராக – ஆங்கில ஆசிரியராக – திரைப்படத்துறை விரிவுரையாளராக – பத்திரிகையாசிரியராக – இலங்கை தணிக்கைசபை உறுப்பினரெனப் பல தளங்களில் இலங்கையின் கலை இலக்கிய ஆளுமையாக விளங்கியதால் அவரது விமர்சனங்கள் சுருக்கமாக இருந்தாலும் கடுகு சிறிதெனினும் காரமாக விளங்கியது. ஆனாலும் தன்னை ஒரு விமர்சகரென்றோ திறனாய்வாளரென்றோ அழைத்துக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் பத்தி எழுத்தாளர் என்றே தன்னை அழைத்து;ககொண்டார். இருந்தபோதிலும்கூட ஈழத்து இலக்கியப் பரப்பில் சிறந்ததோர் விமர்சகராகவே போற்றப்பட்டார். அனேகமாக அவரது விமர்சனங்கள் சிறுகதைகள் – நாவல் – பிறமொழித் திரைப்படம் சார்ந்தே இருந்தன. அவரது விமர்சனக் குறிப்புகள் நூல்தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன.

நல்ல தரமான படைப்புக்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் அரியபணியை அவர் அயராது மேற்கொண்டிருந்தார். மு.ளு. சிவகுமாரனுக்குப் பிறகு அந்த அரிய பணியை அண்மைக்காலத்தில் மேற்கொண்டவராக நண்பர் பாலமுனை பாறூக்கையே நான் பார்க்கிறேன். பாறூக் அவர்களின் இரசனைவழிப் பார்வையில் சுருக்கமும் இறுக்கமும் சுவாரஸ்யமும் மொழிச் சுவையும் நடுநிலையும் உள்ளன.

இடையில் பல எழுத்தாளர்கள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் நூல்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதாமலில்லை. கோகிலா மகேந்திரன் – இரத்தினவேலோன் – இரண்டாம் விசுமாமித்திரன் என்ற புனைப்பெயரில் ‘செங்கதிர்’ சஞ்சிகையின் விசுமாமித்திர பக்கங்களை ‘நோக்கல்’ எனும் தலைப்பில் விமர்சனக் கட்டுரைகளை வடித்த ஏ. பீர்முகம்மது போன்ற குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களைத் தவிர ஏனையவர் எழுதிய விமர்சனங்கள் ஆங்காங்கே அவ்வப்போது சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் தனியாகத் தலைகாட்டினவேயன்றி அவை ஒன்றுசேர ஒரு நூல் தொகுதியாக வெளிவந்தது குறைவு. பீர்முகம்மது அவர்களின் விசுவாமித்திர பக்கங்கள் பின்பு ‘திறன்நோக்கு’ (2015) எனும் நூல்தொகுப்பாக வெளிவந்தது. இந்நூலின் வரவு இத்துறையில் அண்மைக்காலத்தில் வெளிவந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோன்று தினக்குரல் மற்றும் தினகரன் பத்திரிகையில் தொடராகத் தான் எழுதிவந்த விமர்சன ஆக்கங்களின் தொகுதிகளாக ஆ. இரத்தினவேலோன் அவர்கள் வெளியிட்ட நூல்களான ‘புதிய சகத்திரப்புலர்வின் முன் ஈழச்சிறுகதைகள்’ (1999) – ‘அண்மைக்கால அறுவடைகள் தொகுதி 1’ (2001) – ‘அண்மைக்கால அறுவடைகள் தொகுதி 2’ (2009) – ‘புலவொலி’ (2019) – ‘அன்றலர்ந்த மலர்கள்’ (2023) – ‘நினைவழியா நூல்கள்’ (2025) ஆகியவையும் இத்துறையில் சிலாகிக்கத்தக்கனவாகும்.

இந்தப் பின்னணியில் பாலமுனைபாறூக் அவர்களின் ‘51 நூல்கள் இரசனை வழிப்பார்வை’ எனும் இந்நூலும் அதி முக்கியத்துவம் பெறுகிறது. தற்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி காரணமாக ஏராளமான நூல்கள் வெளியிடப் பெறுகின்றன. ஆனால் அவ்வாறு வெளிவருகின்ற நூல்கள் அத்தனையும் தரமானவை என்று கூறிவிடமுடியாது. அதிலும் புதுக்கவிதைத் தொகுதிகளென்றால் சொல்லவே வேண்டியதில்லை. வாக்கியத்தை முறித்து எழுதிய வரிகளெல்லாம் புதுக்கவிதைத் தொகுதிகளாகிப் புற்றீசல்கள்போலப் புறப்படுகின்றதொரு போக்கும் நிலவுகிறது.

அனேகமான நூல்கள் அழகான அட்டைப் படங்களுடனும் கவர்ச்சியான தலைப்புகளுடனும் வருகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் – இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும் – ஒன்றுமேயிருக்காது. இதனால் தேர்ந்த வாசகர்கள்கூட எதனை வாசிப்பது எதனை விடுவது என்பதில் திக்குமுக்காடிப் போகிறார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிலர் எழுதும் இரசனைக் குறிப்புகள் பெரும்பாலும் ஆளுக்காள் முதுகுசொறியும் பாங்கிலேயே அமைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் பாலமுனை பாறூக் போன்றவர்கள் வழிகாட்டியாக விளங்குகிறார்கள். நூல்களைத் தேடி வாசித்து அவற்றுள் தேர்ந்தனவற்றை அவற்றின் உள்ளடக்கங்களைச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சாறுபிழிந்து தினகரன் இதழில் வாராவாரம் சுவையூட்டித் தருவதன் மூலம் வாசகர்களை ஆற்றுப்படுத்தும் அரிய பணியை மேற்கொண்டுள்ளார். இதனால் படைப்பாளிகளும் ஊக்கம் பெறுகின்றனர். ஏனெனில் இதிலுள்ள விமர்சனங்கள் யாவும் நேர்மறைக் கணியங்களாகவே காணப்படுகின்றன.

இந்த நூலின் அட்டைப்படம்கூட தேனீயையும் தேன்வதையிலிருந்து தேன்துளிகள் கொட்டுவதையும் கொண்டிருப்பது மிகப்பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. ‘தேனீ’ பூக்களைத் தேடுவதுபோல அவர் புத்தகங்களைத்தேடி அவற்றின் உள்ளடக்கங்களுள் புகுந்து வெளியேறி அவற்றைத் தேன்வதையிலிருந்து தேன்துளிகள் வடிவதுபோலச் சாறுபிழிந்து தந்திருக்கிறார். உண்மையிலேயே இத்தொகுப்பு நூல் ஒரு தேன்கூட்டிலுள்ள தேன்வதை போன்றதுதான். இதற்குமேல் இந்நூலைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அவருக்கு வாலாயமான மொழிநடைகூட ஒரு தேன்வதை போலத்தான் திகழ்கிறது.

ஈழத்து இலக்கியப் பரப்பில் – உங்களுக்குத் தெரியும் – சிலர் தம்மை எழுத்து ‘ஜாம்பவான்கள்’ என்றும் படைப்புப் ‘பிரம்மாக்கள்’ என்றும் கற்பிதம் பண்ணி உளவியல் ரீதியாகத் தம்மைப் பற்றிப் பிரமாண்டமான பிம்பமொன்றைத் தமக்குள்ளே தாமே கட்டமைத்துக்கொண்டு ஏனைய படைப்பாளிகளையும் அவர்களுடைய படைப்புக்களையும் எடுத்தெறிந்து பேசியும் – எழுதியும் இலக்கியத் திமிருடன் வித்துவப் பல்லக்கில் ஏறிப் பவனி வருகின்ற இத்தகைய ‘பிரம்மாக்கள்’ மத்தியில் நல்ல நூல்களையும் அவற்றின் உள்ளடக்கங்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களைத் தேடலின்பால் ஆற்றுப்படுத்துகின்ற அரிய இலக்கியப் பணியை வாராவாரம் ஒரு வேள்வியாகச் செய்து வருகின்றமை மட்டுமல்லாமல் அவற்றை ஒரு நூல்தொகுப்பாக்கி அமுதமாக அளித்திருக்கின்ற நண்பர் பாலமுனை பாறூக் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *