அம்மாவும் பூதியாச்சியும்…. கதை… ஏலையா க.முருகதாசன்

நாங்கள் தோட்டக் காணியில் ஓலைவீடு கட்டி இருந்த போதும் அதற்குப் பின்னரும் பல வருடங்களாக, அம்மா அடிக்கடி ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்தக் கதை என்னவென்றால் ஒரு திமிர் பிடித்த அக்காக்காரி,திருமணம் செய்து கணவருடனும் இரண்டு பிள்ளைகளுடனும் ஒரே வீட்டில் வாழ்ந்த தனது தங்கையை வீட்டைவிட்டு வெளியேற்றும் போது,அக்கா இது உங்கடை வீடு,இந்த விட்டிலிருக்க எனக்கு உரிமையில்லை நான் உங்கடை வீட்டிலிருந்து போகிறேன்,நாலு கிடுகைக் கூரையாகப் போட்டு வாழ்கிறன்,அதற்காவது ஏதும் உதவி செய்ய மாட்டாயா என்று தங்கை கண்கலங்கியபடி கேட்ட போது, தமக்கைக்காரி எகத்தாளமான நையாண்டித்தனமான சிரிப்புடன் ,இதுதான் நான் தரும் பரிசு என்று செத்த எலியைக் குடுத்ததாகவும் அந்த எலியை வாங்கிக் கொண்டு,தனது கணவருடன் போய்க் கொண்டிருந்த போது,எதிரிலே ஒரு வழிப் போக்கன் பூனையுடன் வந்து கொண்டிருக்க அவனும் கையில் செத்த எலியுடன் வந்து கொண்டிருந்த கணவன்மனைவியைக்;; கண்டு விடுகிறான்.
இரண்டு சதம் கொடுத்து தனது பூனைக்கு செத்த எலியை வாங்கினான் அந்த வழிப்போக்கன்,
அன்றைய காலங்களில் இரண்டு சதம் என்பது மிகப் பெறுமதி வாய்ந்த பணமாகும்.தமக்கையின் வீட்iவிட்டுத் துரத்தப்பட்ட தங்கச்சியாரும் அவளின் கணவனும்; இரண்டு சதத்துக்கு அரிசிப் பொரியை வாங்கிய பின் தெருவோரத்தில் ஒரு குடத்தில் தண்ணீரையும் கொண்டு வந்து காட்டில் விறகுவெட்டிக் கொண்டு அந்த வழியால் போவோருக்கு அவர்களின் சிறுபசியினைத் தீர்க்க அரிசிப் பொரியையும்தாகத்தைத் தீர்க்க தண்ணீரையும் கொடுத்தனர்.

விறகுவெட்டிக் களைத்தபடி நடந்துவந்த அந்த மக்களின் தாகத்தையும் சிறுபசியையம் தீர்த்தமையால் விறகுவெட்டிகள் தம்மால் முடிந்த பணத்தைக் கொடுக்கத் தொடங்கினர்.
இந்த வருமானம் நாளடைவில் பெருகத் தொடங்கியது.தெருவோரத்தில் கடைபோன்ற ஒரு கொட்டிலைப் போட்டு,அரிசிப் பொரியையும் தண்ணீரையும் கொடுப்பது தொடர்ந்து,பின்னர் பழவகைகளை விற்கத் தொடங்கி வருமானம் பெருகப் பெருக பிறகு வேறு வேறு உணவு வகைகளையும் விற்கத் தொடங்கினர் .
காலகதியில் பெரும் பணக்காரராகி மாடிவீடு கட்டி வாழத் தொடங்கினர் என அம்மா எனக்கும் அண்ணைக்கும் அடிக்கடி இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.வீட்டைவிட்டுத் துரத்திய தமக்கைக்காரியின் வாழ்வு தலைகீழாக மாறியது.ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்கு தமக்கைக்காரி வந்த போது தமக்கையை அரவணைத்துத் தனது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்ததாக அம்மா அடிக்கடி அக்கா தங்கை கதையைச் சொல்லுவார்.
அம்மா கதை சொன்ன தோரணையும்,கதை சொல்லும் போது அவரின் முகம் சோகத்தில் கலங்கியதையும் கவனித்தன்.
சிறுவனாக இருந்த போது அம்மா இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கிய அவர் நான் இளந்தாரியாகிய பின்பும் அப்பப்ப இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்தக் கதைக்கும் அம்மாவின் வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக உணரத் தொடங்கினன்.
அம்மாவும் தமக்கையால் விரட்டப்பட்டதை அறிந்தன்.எங்கடை அப்பு அப்பொழுது அம்பனை அருளானை என்ற இடத்தில் குத்தகைக் காணியில் தோட்டம் செய்து கொண்டிருந்தார்.
தோட்டக்காரர்களிடம் அவர்களின் தோட்டத்தில் அட்டாளை என்று சொல்லுகின்ற ஒரு கொட்டில் எப்பொழுதும் இருக்கும்.
நான்கு கால்களைக் கொண்டு நீள்வடிவச சதுரத்திலிருக்கும் இந்த அட்டாளையின் கால்கள் இணர்டரை மீற்றர் உயரம் கொண்டவையாகவும,; கால்கள் மேலே முடிவடையும் இடத்தில் நீள் சதுரத்தில் தடிகள் அல்லது மொத்தமான பனஞ்சிலாகைகள் கட்டப்பட்டடு,முகடு வைச்சு இருபக்கமும் பந்தியிறக்கி பார்பதற்கு ஒரு சிறு வீடு போல இருக்கும்.

இந்த அட்டாளைக் உள் கூரையில் குல்லான, புல்லுச் சத்தகம்,எல்லாத்தையும் கூரையின் உள்பக்கக் கிடுகு வரிச்சில், அப்பு செருகி வைப்பதுண்டு.சல்லிச்சுச் கிடங்கு கிண்டும் பாரை எப்பொழுதும் அட்டாளைப் பந்தியடியில் கிடப்பில் போட்டு வைப்பார்.மண்வெட்டி அட்டாளைப் பந்தியின் கீழ ஒரு ஓரமாக வைக்கபபட்டிருக்கும்;
இறைப்புக்குப் பயன்படுத்திய பனையீர்க்குத் துலாக்கொடி இறைப்பு முடிந்ததும் பாம்பு வளையம் போல வட்டமாகச் சற்றி அதை அட்டாளைப் பந்தியில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்.
இறைப்பு முடிஞ்சதும்,நெருப்பெரிச்சு பட்:டையில் நெருப்புச் சூடு பிடிக்கத்தக்கததாக பட்டையைச் சுழட்டிச் சுழட்டிப் பிடிச்சபின் அட்டாளைப் பந்தியில் கட்டித் தொங்கவிடுவார்.
பழைய பட்டை கோழி அடைவைக்க பயன்படுத்துவதும் உண்டு.குமாரதாசன் தனது அப்பு அம்மாவோடு வாழ்ந்த கடந்தகால வாழ்க்கையை சொல்லத் தொடங்கித் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கையில் குரல் தளதளத்தது கண்கள் கலங்கின.ஜேர்மனியில் கார்லஸ்றூக என்ற இருந்த நான்,டோட்முண்ட் நகரில் விழாவொனறு நடப்பதாக அறிந்து அங்கு போன போது, ,தமிழர்களின் கடைகள் அதிகமாக இருக்கும், கடைவீதிக்கு சும்மா போய்வருவம் என்று போன நான் என்னூரைச் சேர்ந்த என்னோடு ஊரில் பழகிய குமாரதாசனை நான் சந்திப்பன் என்று கொஞ்சமும் நானோ அவனோ எதிர்பார்க்கவே இல்லை,எப்ப வந்தனி என்று வியப்புடனும் ஆர்வத்துடனும் கேட்ட அவன் வா வா என கையைப் பிடிச்சு ஒரு சாப்பாட்டுக் கடைக்குள் கூட்டிக் கொண்டு போனவன்,ஒரு ஒதுக்குப்பக்கமாக மேசைக்கு இருபக்கமும் இரு கதிரைகள் போடப்பட்டிருந்த இடத்தில் இஞ்சை இருப்பம் என்று சொல்லியபடியே என்னையும் இருக்கச் சொன்னான்.
ஏதாவது சாப்பிடப் போறியா இல்லாட்டில் மசாலா ரீ குடிக்கப் போறியா என்று கேட்ட அவன் அங்கை அம்பனைச் சந்தி சீனியர் கடையிலை குடிச்ச நன்னாரித் தேத்தன்னி இஞ்சை கிடையாது என்று சிரிச்சபடி சொன்னவனின்; முகம் வாடியிருந்ததைக் கண்ட நான்,என்ன குமார் முகம் சரியில்லை என்ற போது அம்மாவை நினைச்சன்,அவ எங்களுக்காக பட்ட கஸ்டங்களை நினைச்சன் அதுதான் மனசைக் குழப்பிவிட்டது என்றவன்,மெல்ல மெல்ல தோட்டக் காணியில் குடியிருக்க வந்த கதையைச் சொல்லத் தொடங்கினான்.அதைத்தான் நான் கேட்டுக் கொண்டிருக்கிறன்.
தனது தாயார் ஏன் தன்னிடம் செத்த எலியை விற்று நல்ல நிலைக்கு வந்த கதையைச் சொன்னார் என்பது சிறுவனாகத் தானிருந்த போது அதன் உள்ளுக்குள் பொதிந்திருக்கும் கதை விளங்கவில்லை,ஆனால் வளர வளர வயது ஏற ஏற அம்மாவின் வாழ்க்கைக்கும் இந்தக் கதைக்கும் ஏதோ சம்பந்தமிருப்பதை உணர்ந்தன,; அம்மா ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையை எனக்கும் அண்ணைக்கும் முழுமையாகச் சொல்லிவிட்டார்.
முற்றத்திலிருந்து அம்மா சட்டிபானை கழுவும் போது ஆகாயத்தை ஊடுருவி வெறித்துப் பார்ப்பதையம் பெருகி வரும் கண்ணீரை சிலைத் தலைப்பால் துடைப்பதையும்; பலமுறை கண்டிருக்கிறன்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவுக்கும் தமக்கைக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் வெளியோ போடி என்று தமக்கை சொன்னதும் வெப்பியாரம் அடைஞ்ச அம்மா ஒரு கடகத்துக்குள் சமைக்கும் சட்டிபானைகளை தலையிலையும், என்னை இடுப்பிலை வைச்சுக் கொண்டு,அண்ணைக்கு அப்ப ஏழு வயசு அவரையும் கையிலை பிடிச்சுக் கொண்டு தோட்டக்காணிக்கு வந்துவிட்டார்.
தோட்டக்காணியில் இருந்த அட்டாளைக் கொட்டில் வீடாக மாறியது.அம்மாவும் நானும் அண்ணையும் அட்டாளைக்குள் படுக்க அப்பு வெட்டவெளியில் வெளியே படுப்பார்.ஆனால் அப்பு ஒரு கிழமைக்குள் ஒரு சிறு தென்னோலை வீட்டைக் கட்டி முடிச்சுவிட்டதாக அம்மா சொல்லுவார்.
காலம் ஓடிக் கொண்டிருந்தது.அம்மா வீட்டு வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில்,எனக்கு ஒன்றரை வயசு நான் தவழ்ந்து போய் கிணத்து மிதியடியில் குப்புறப் படுத்தபடி கிணற்றில் தெரியும் எனது தலையைப் பார்த்துச் சிரிச்சபடி இருக்க,என்னைக் காணவில்லை என்று அம்மா தேடிய போது கிணத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என்னைக் கண்ட அவர் பதறினாலும் அரவமில்iலாமல் ஓடிவந்து தூக்கியதாக சொல்லுவா.
எங்கடை வீட்டிலிருந்து கிழக்குப் பக்கமாக மூன்று வளவுகள் தள்ளித்தான் அம்பனைச் சந்தியிலிருந்து ஆரம்பித்து கொல்லங்கலட்டியை ஊடறுத்தச் சென்று தச்சன்காட்டில் முடிவடையும் வீதி இருந்தது.
வளவுகளுக்கு அப்பாலிருந்த வீதிக்கு கிழக்குப் பக்கமாகத்தான் பூதியாச்சி கிருட்டிணன்; வீடு இருந்தது.அவர்களுக்கு வேலாத்தை,இளையவன்,அப்பையா,சபாரத்தினம் என நான்கு ஆம்பிளைப் பிள்ளைகளும் லச்சுமி,பசுபதி,அன்னப்பிள்ளை என்ற மூன்று பொம்பிளைப் பிள்ளைகளும் இருந்தனர்.அன்னப்பிள்ளைதான் கடைசிப் பொம்பிளைப் பிள்ளை.
இதைவிட எமது அயலில்; சின்னப்பொடி பார்வதி சின்னம்மா தம்பதிகளும் அவர்களின் பிள்ளைகளான செல்லர் மனைவி மீனாட்சி, சரவணை,கணபதி,சின்னவன் என்றவர்களும் இருந்தனர்.
அம்மாவுக்கு ஒரு ஆறுதலும்,அன்பு காட்டியவர்களும அவர்களேதான்.நான் அப்பொழுது ஒரு வயதுக் குழந்தை.இந்த அயலவர்கள் வாஞ்சையோடு என்னைத் தூக்கி வைந்திருந்தார்கள் என அம்மா அடிக்கடி சொல்லுவார்.
நான் வளர்ந்த போது மகாஜனாக் கல்லூரிக்கருகில் உள்ள தோதரை என்ற குத்தகைக் காணிக்குள் அங்கும் ஒரு கொட்டில் வீடு கட்டி குடியிருக்கப் போய்விட்டம்.அப்பு பிந்திய காலத்தில் சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு பழைய தோட்டக் காணியான மூத்தம்பியின் தோட்டக் காணியில் தோட்டம் செய்த போதிலும் சாப்பாட்டுக்கு நாங்கள் குறைவிலாமல்தானிருந்தோம்.

வாழைத் தோட்டம் எமக்கு இருந்ததால் வாழைப்பழங்கள் சீந்துவாரற்றுக் கிடந்தன.
அப்பொழுதும் எமது அயலவர்கள் எம்மீது அன்பு செலுத்திக் கொண்டேயிருந்தார்கள்.தோட்டக் காணியில் கைக்குழந்தையாக நானிருந்த போது அன்னப்பிள்ளையக்கா என்னைத் தூக்கிக் கொண்டு தங்களுடைய வீட்டுக்குப் போய்விடுவார் என்றும,; நான் அங்கு பசியால் அழுத போதெல்லாம் பூதியாச்சி தனது முலைப்பாலைத் தந்து பசியாற்றியதாக அம்மாவும் பூதியாச்சியும்,அன்னப்பிள்ளையக்காவும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.
கிருட்டிணர்பூதியாச்சி தமபதியினரின்; பிள்ளைகள் என்னையும் அண்ணையையும் தமது சொந்தத் தம்பிகளாகவே அன்பு காட்டினர்.அம்மாவை தமக்கை உதாசீனப்படுத்திய போது நாங்கள் இருக்கிறோம் என அந்த அயலவர்கள் எம்மை அரவணைத்து நின்றார்கள்.
வளர்ந்த பின்பு சைக்கிளில் அவர்கள் இருந்த வீதியால் போகும் போதெல்லாம், அவர்கள் வீதியோரத்தில் நின்றால் சைக்கிளை நிறுத்தி அவர்களுடன் கதைக்காமல் போனதே கிடையாது.
எப்படி அப்பு இருக்கிறாய்,அப்புத்துரை அண்ணையின்ரை இரண்டாவது மோளை விரும்புகிறாயாம்,அப்புத்துரை அண்ணை நல்ல மனுசன் அவை உன்னைக் காவாந்து பண்ணுவினம் என்று சொல்லி மகிழ்வார்கள்.
எமது பகுதி கிராமசேவகருக்கு வாக்காளர் பட்டிலைச் சரிபார்க்க நான் உதவுவது உண்டு.குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குப் போகும் போதெல்லாம் லட்சுமி அக்காவும் பசுபதி அக்காவும் புளியும் சாம்பலும் போட்டு பளபளவென மினுக்கிய பித்தளை பேணியில் குடிப்பாய்தானே என்று கேட்டுத் தேத்தண்ணி தருவார்கள்.
அவர்களின் வீடு வாசல் முற்றம் என்று எல்லாமே பளிச்சென்று மிகத் துப்பரவாக இருக்கும்.அன்னப்பிள்ளையக்காவைத் தவிர லச்சுமியக்காவும்,பசுபதியக்காவும் கல்யாணம் செய்தவர்கள்.அவர்களின் நெற்றியில் குங்குமம் எப்பொழுதும் இருக்கும்.முகத்தில் ஒரு புன்னகையுடன் கூடிய மலர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
அவர்கள் என்னைத் தங்கள் சொந்தத் தம்பியாகவே பாசம் காட்டினர்.அவர்களின் தாயிடம் நானும் பால் குடிச்சதால் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.அப்பு இராசா என்று சொல்லித்தான் கதைப்பார்கள். அவர்களின் பாசமான வார்த்தைகள் இப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது.
வேலாத்தையின் வீடு எமது வாழைத் தோட்டத்துக்கு அருகிலிருந்தது.வேலாத்தையின் மனைவிக்கப் பெயர் அம்மா.உரும்பிராயைச் சேர்ந்தவர்.அவரும் தம்பி என்றுதான் பாசமாக அழைப்பார்.அவர்கள் கிடாய் வளர்த்ததால் பனங்காய் சீவி வைப்பார்கள்.அப்பொழுது அதன் நொங்கை எனக்குத் தருவார்கள்.பொழுது போவதற்காக அவர்களின் வீடுகளுக்குப் போய் வருவதுண்டு.
லச்சுமியக்காவின் மூத்தமகள் எஸ்.எஸ்.சி படிச்சு முடிச்சதன் பின் நேர்ஸ் வேலைக்குப் போவதற்கு ஆர்வப்பட்டிருக்கிறார்.
நான் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க லச்சுமி அக்கா வீட்டுக்கு போனபோது லச்சுமி அக்கா என்னிடம்,தம்பி இவள் நேர்ஸ் வேலைக்குப் போறன் என்று பிடிவாதமாக நிக்கிறாள், எடியே மாமா என்ன சொல்றாரோ அதன்படி செய் என்று சொன்ன போது நானும்,விடுங்கோவன் அது ஒரு தொண்டு லச்சுமியக்கா என்று சொன்னேன்.எனது ஆதரவு இருந்ததால் லச்சுமியக்காவின் மகள் சந்தோசப்பட்டாள்.
நாங்கள் தோட்டக் காணியை விட்டு தோதரை என்ற இடத்தில் குடியிருந்த போது நாகன் அம்மா எமக்குப் பழக்கமானார்கள்.நாகனின் மனைவிக்கம் அம்மாதான் பெயர்.
அவரும் அடிக்கடி எங்கடை வீட்டுக்கு வருவார்.நாங்கள் வெற்றிலைத் தோட்டமும் செய்தபடியால் வெற்றிலை அடுக்கித்தந்து நாகனின் மனைவி அம்மா உதவி செய்வார்.
அவரையும் கூட்டிக் கொண்டு படம் பார்க்கப் போவதுமுண்டு.அவரும்,நான் அம்மா அப்பு எல்லாரும் ஒன்றாக நின்று யாழ்ப்பாணம் வாசன் ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுத்திருந்தோம்.
சிறுவனான அண்ணையுடனும் கைக்குழந்தையான என்னையும் தூக்கிக் கொண்டு வாழ தோட்ட அட்டாளைக்கு வந்த அம்மாவையும் அப்புவையும் பார்த்து நாங்கள்தான் உங்கள் சொந்தக்காரர் கவலைப்படாதீர்கள் என்றவர்களே எமது உண்மையான உறவுகள்.
நீங்கள் எங்கையிருந்தாலும்,அவர்களை என்றுமே மறக்காதீர்கள்,அவர்கள்தான் உங்களுடைய உறவுகள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவா.
நான் படிக்கிற காலத்தில் அவர்களுடைய வீட்டுக்குப் போய்க் கதைச்சுப் போட்டு வருவதைக் கண்ட எனது வகுப்புப் பொடியங்கள் அம்பனைச் சந்தியடியில் இருப்பவர்கள் உன்ரை சொந்தமா என்று கேட்பார்கள்;.நான் ஓம் அவை எனக்குச் சொந்தம் லச்சுமியக்கா,பசுபதியக்கா,அன்னப்பிள்ளையக்கா எல்லாரும் என்னுடைய சொந்த அக்காக்கள் என்பன்.
ஆங் எப்படி அவை என்னென்று சொந்தமாக முடியும் அவை வேறை என்று இழுப்பார்கள்.அப்படித்தான் என்ற நான் அவை எனக்குச் சொந்தக்காரர் என்றால் நீங்கள் கதைக்கப் பஞ்சிப்பட்டால் கதைக்காமல் விடுங்கள் என்று முகத்திலை அடிச்சமாதிரி சொல்லிவிடுவன்.
அவர்களின் வாரிசுகள் இப்பொழுது எங்கையிருப்பார்கள் எப்படியிருப்பார்கள் என்று எனது மனம் தேடிக் கொண்டுதானிருக்கின்றது
![]()