இலங்கை

நாமல் பட்டச் சான்றிதழ் தொடர்பில் சந்தேகங்கள்; உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!  

ஸ்ரீலங்கா பொதுஜனர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்ற விதம், அவரது சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரியில் இணைவது தொடர்பான தகவல்கள் பல வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில்   நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.

அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்ட பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புலனாய்வு ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் சட்ட பட்ட சான்றிதழை , முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பட்டப்பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும்.

சிடி யுனிவர்சிடி ஒப் லன்டண் நிறுவனம் 2009.10.15 ஆம் திகதி தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25 ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த திகதியன்றே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே, நாடளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *