முச்சந்தி

எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டின் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய சமயத்தில், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல ஆண்டுகளாகத் தியாகங்கள் செய்து, 41 இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கல்வியைப் புகட்டினர் என்றும், இந்த 22,000 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இலவசக் கல்வியை வலுப்படுத்தினர் என்றும், ஆனால் இன்று அவர்களில் 16,600 பேர் மட்டுமே காணப்படுகின்றனர். ஏனையோர் விரக்தியில் விலகிச் சென்றுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று (17) கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடத்திய அமைதிப் போராட்டத்திற்கு விஜயம் செய்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, தேர்தல் காலங்களில், இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக்கொள்வோம் எனத் தீர்மானங்களை, வாக்குறுதிகளை மற்றும் உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால், அந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, இந்த 16,600 பேருக்கும் ஆசிரியர் சேவையில் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொடுங்கள். இது தொடர்பான மத்தியஸ்தத் தீர்மானத்தை அமுல்படுத்துங்கள். பல ஆண்டுகளாகக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த விடயத்தில் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கிக் கொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுத்து இவர்களை நிரந்தரத் தொழிலில் ஈடுபடுத்துங்கள்.

வாக்குறுதியளித்தபடி இவர்களுக்கு முறையான தொழில்களைப் பெற்றுக் கொடுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களை ஏமாற்றி, இன்று ஆட்சிக்கு வந்த பிற்பாடு அவர்களை மறந்துவிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். “தயவுசெய்து, இனியும் இவர்களை ஏமாற்ற வேண்டாம். இந்த ஏமாற்று வேலையை நிறுத்துங்கள். இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உரிய தொழில்கள் வழங்கப்படும் வரை, இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவேன்,” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதி அளித்தார்.

16,600 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தாம் பாராளுமன்றத்திலும் கருத்துத் தெரிவித்து, இவர்களுக்கான தீர்வைக் கோரியதாகத் தெரிவித்தார். மேலும், 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு எப்படியாவது தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதே தனது நோக்கமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *