திருமலை விகாரையில் சட்டவிரோத கட்டுமானம்; அதிகாரிகள், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வெளியேற்றிய பிக்கு !

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதுடன் அதனை பார்வையிடச் சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்று முன் தினம் சனிக்கிழமை (15) இரவோடு இரவாக இந்தப் பகுதியில் பெயர்ப் பலகை நடப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமான வேலைகள் இடம்பெற்றன. இந்த சட்டவிரோத கட்டுமானப்பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் நேற்று (16)முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்தக் கட்டுமான பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக நீதிமன்றில் பொலிஸாரினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த விகாரையின் பகுதியில் ஏற்கனவே சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச் சாலையை அகற்றுவதற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் இம்மாதம் 4ஆம் திகதி நடவடிக்கை எடுத்த போதும், அந்த சட்டவிரோத கட்டடம் தொடர்பில் மாநகர சபையினால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தினாலும் பொலிசாரிடம் விகாரையின் விகாரதிபதி ஒரு வார காலம் கால அவகாசம் கேட்டிருத்தமைக்கு அமையவும் அதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்தப் பகுதிகள் மேலும் நிரந்தர கட்டுமானங்களுக்குரிய பணிகள் இடம்பெற்று வந்தது. இதற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர சபை உள்ளிட்ட திணைக்களங்களிடம் எவ்வித அனுமதியும் பெறப்படாமல் அந்தப் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை பார்வையிடச் சென்ற அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
![]()