முச்சந்தி

ஐ.எம்.எப்.பின் இலக்குகளைத் தாண்டியது அரசின் வருமானம்; அபிவிருத்திக்கு பயன்படுத்தவும் -சஜித் வலியுறுத்து 

சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எப்) இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் ஈட்டியுள்ள மேலதிக நிதியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படும் நிலையில், இன்று நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி அரச வருமானத்தை ஈட்டியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% அரச வருவாய் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதிய நிபந்தனையிட்ட போதும், இன்று அது 15.9% ஆக அதாவது 287 பில்லியன் ரூபா அரச வருவாயை ஈட்டியுள்ளது.

ஆரம்ப மீதியும் 2.3 இல் பேணிச் செல்லப்பட வேண்டும் என்ற இலக்குக்கு மாறாக தற்போது 3.8 ஆக அதிகரித்து காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, தொழில்முனைவோர், தொழிற்றுறையினர், சேவைகள், நிர்மாணத்துறைகளை வலுப்படுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச நாணய நிதியம் விதித்த இலக்கை விட அதிகமாக ஈட்டப்பட்ட மேலதிக 0.9% ஐ துறைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிதியைத் திறைசேரியை நிரப்ப மட்டும் பயன்படுத்தாமல், நாட்டு மக்களுக்காக முதலீடு செய்யலாம், வரிச் சலுகைகளை வழங்கலாம், வீட்டுவசதிகள் போன்ற கனவைக்கூட நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம், 2028 ஆம் ஆண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த விரைவான பொருளாதார வளர்ச்சி தேவையாகக் காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *