முச்சந்தி

வெனிசுவேலா அதிபரை கொல்ல முயன்ற சிஐஏ (CIA)?… கரீபியன் கடலில் சூழும் அமெரிக்க போர் மேகம் !…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அதிபர் மதுரோவை கரீபியனில் உள்ள ஒரு அமெரிக்க தளத்திற்கு வலுக் கட்டாயமாக கடத்திக் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேற்குலக ஊடகங்கள் இந்த தோல்வி அடைந்த விவகாரத்தினை பெரிதாக வெளிப்படுத்தவில்லை.
உண்மையில் அந்த விமானத்தை திசை திருப்பி விடுவதன் மூலம் மதுரோவைக் கடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்ததை கைதான விமானி வெளிப்படுத்தி உள்ளார். கரீபியன் கடலில் போருக்கான ஒரு திட்டத்தை அமெரிக்க அரசாங்கமானது உருவாக்க முயல்கிறது. தற்போது வெனிசுவேலாவுக்கு எதிரான அதன் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மறைமுக போதைப்பொருள் கும்பலால் ஆளப்படுகிறது என்பதாகும்)
வெனிசுவேலா அதிபரை கொல்ல சிஐஏ (CIA)உளவு நிறுவனம் முயன்றுள்ளமை, அமெரிக்காவின் அடுத்த இலக்கு கரீபியன் கடலில் ஆரம்பமாகும் அறிகுறியாக தென்படுகிறது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவில், மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவரை உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப் பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.
மேலும் மதுரோவை கைது செய்தால் வழங்கப்படும் பரிசுத் தொகையை, ஐம்பது மில்லயன் டாலராக, இரண்டு மடங்காக உயர்த்தி, அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது.
கரீபியன் கடலில் அமெரிக்க கப்பல்கள்:
அண்மையில் வெனிசுவேலாவில் பிடிபட்ட CIA முகவர்கள் மூலம், அதிபர் மதுரோவுக்காகப் பறந்த விமானி கைது செய்யப்பட்டார். இந்த விமானி அதிபர் மதுரோவை கரீபியனில் உள்ள ஒரு அமெரிக்க தளத்திற்கு வலுக் கட்டாயமாக கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மேற்குலக ஊடகங்கள் இந்த தோல்வி அடைந்த விவகாரத்தினை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. உண்மையில் அந்த விமானத்தை திசை
திருப்பி விடுவதன் மூலம் மதுரோவைக் கடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்ததை கைதான விமானி வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த திட்டம் மிகவும் அபாயகரமானது என்று தெரிந்தும், அந்நாட்டு விமானி ஒருவர் மூலம் இந்த நாடகத்தை டிரம்ப் அரசு நடாத்தியுள்ளது. இந்த தோல்வி அடைந்த விமான கடத்தல் நாடகம் அமெரிக்க அரசு, வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் தலைமை விமானி மூலமாக, சிஐஏ துணிச்சலான முறையில் இந்த விடயத்தை செய்ய முயன்றது. அந்த விமானி செய்ய வேண்டியதெல்லாம் வெனிசுவேலா ஜனாதிபதியின் விமானத்தை அமெரிக்க அதிகாரிகள் சொல்லும் இடத்திற்கு இரகசியமாகத் திருப்பிவிடுவது தான்.
அதற்கு ஈடாக அந்த விமானி ஒரு பெரும் பணத்தை பெற ரகசியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் விமானி மிகவும் பணக்காரராக்கப்படுவார் என்று சிஐஏ முகவர் உறுதி அளித்தார்.
மேலும் அந்த விமானி தனது தொலைபேசி தொடர்புகள சிஐஏ முகவரான எட்வின் லோபஸிடம் வழங்கினார். இது அமெரிக்க அரசாங்கத்திற்கு உதவ அவர் ஆர்வமாக இருந்தார் என்பதற்கான முக்கியமான ஆதாரமாகும்.
கைதான அந்த விமானி கடந்த ஜூலை மாதம் தனது அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த விமானியை எப்படி சிஐஏ தன்வசப்படுத்திது என்பது பற்றிய சொல்லப்படாத, சூழ்ச்சி நிறைந்த கதையாகும். ஒரு பனிப்போர் உளவு நாவல் த்ரில்லரின் அனைத்து கூறுகளையும் கொண்டுள்ளது.
ஆடம்பர தனியார் ஜெட் விமானங்கள், விமான நிலைய ஒரு ரகசிய சந்திப்பு ஆகியன அதிபர் மதுரோவின் விமான ஓட்டி மிக நுட்பமான கவர்ச்சி திட்டத்தில் தற்போது மாட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
டிரம்ப் CIA க்கு அங்கீகாரம்:
வெனிசுவேலா ஜனாதிபதியை கவிழ்க்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு இறுதி சூழ்ச்சியாக சிஐஏ இந்த விமானியை பயண்படுத்த முயன்றது. அதேவேளை வெனிசுவேலாவிற்குள் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள டிரம்ப் CIA க்கு அங்கீகாரம் அளித்துள்ளார். மேலும் அமெரிக்க அரசாங்கம் மதுரோவைப் பிடிக்கும் வெகுமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
இறுதியில் தோல்வியடைந்த இந்த திட்டத்தின் விவரங்கள் மூன்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் மதுரோவின் எதிர்ப்பாளர்களில் ஒருவருடனான நேர்காணல்களிலிருந்து பெறப்பட்டன. அதேவேளை இந்த முயற்சியைப் பற்றி விவாதிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது அதை வெளிப்படுத்தினால் சிஐஏயால் பழிவாங்கப்படுவார்கள் என்று அஞ்சினார்கள்.
வெனிசுவேலா போராட தயார்:
வெனிசுவேலா அரசு அதற்கு எதிராக விடுக்கப்பட்ட அமெரிக்க அச்சுறுத்தல்களையும் கண்டித்துள்ளது. வெனிசுவேலா கடற்கரையில் அமெரிக்க நாசகாரி கப்பல்களை நிலைநிறுத்தியதற்கு மதுரோ தனது அரசாங்கத்திற்கு விசுவாசமான மக்கள் போராளிகள் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தோடு நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்களைத் தூண்டுவதற்காக இந்த நடவடிக்கை ஒரு கொடூரமான உளவியல் போர்ப் பிரச்சாரம் என்று வெனிசுவேலா உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மதுரோவுக்கு முன்பு பதவியிலிருந்த ஹயூகோ சாவேஸுக்கு எதிராக, 2002இல் அமெரிக்க ஆதரவிலான சதி தோல்வியுற்றது. அப்போது ஆட்சிக்கவிழ்ப்பு சதி போன்ற நிகழ்வுகளை அமெரிக்க அரசு வெளிப்படையாக நடத்தியது.
அந்நாட்டின் பொதுமக்கள்-இராணுவம்-போலிஸ் கூட்டணி மீண்டும் ஒருமுறை அமெரிக்க அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.
ரஷ்யா வெனிசுலாவில் தரையிறக்கம்:
ஆபிரிக்கா முழுவதும் தனது படைவீரர்களை அனுப்ப பயன்படுத்தும் ரஷ்ய பாரிய விமானம், தற்போது வெனிசுவேலா நாட்டில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் முன்பு Wagner குழுவுடன் (ரஷ்யாவின் தனியார் இராணுவ நிறுவனம்) தொடர்புடையதாக இருந்தது. இப்போது அது மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இந்த விமான வருகை மூலம் ரஷ்யா மற்றும் வெனிசுவேலா இடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கும் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது என்று இராணுவ அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக நாடுகள் இடையே போர்களை நிறுத்தி வருவதாக கூறும் டிரம்ப், இலத்தீன் அமெரிக்காவில் போர் கப்பல்களை நகர்த்துவதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கமானது, மீண்டும் பாரிய பொய்களை கட்டவிழ்த்துவிடும் வழிமுறையை நாடுவதுடன், மறுக்க முடியாத அளவுக்கு பாரிய பொய்களைச் சொல்லி போருக்கான ஒரு திட்டத்தை உருவாக்க முயல்கிறது.
2003 ஆம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான ஈராக் மீதான படையெடுப்பில், ஈராக் அரசாங்கத்திடம் மக்களை அழிக்கும் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பிரமாண்டமான பொய்யை அது கட்டவிழ்த்துவிட்டது. தற்போது வெனிசுவேலாவுக்கு (Venezuela) எதிரான அதன் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மறைமுக போதைப்பொருள் கும்பலால் ஆளப்படுகிறது என்பதாகும். ஆனால், இதைப் பற்றி எந்தத் தகவலையும் வழங்காத வாஷிங்டன் அரசு, கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த அரசை கவிழ்க்க விரும்புகிறது.
வெனிசுவேலா அருகே போர் கப்பல்கள்:
வெனிசுவேலாவுக்கு அருகில் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
வெனிசுவேலா அரசை கவிழ்க்கும் திட்டத்தில், வெனிசுவேலா அரசு போதைப் பொருள் கடத்துகிறது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மதுரோ தலைமையிலான ஆளும் இடதுசாரி அரசை கவிழ்க்க அந்நாட்டு கடற்பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்க அரசு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *