முச்சந்தி

இலங்கையின் மேற்கு ஆழ்கடலில் சிக்கிய மீன்பிடிப் படகில் 500 கோடி ரூபா’ஐஸ்’ ‘ஹெரோயின்’ மீட்பு!; 350 கிலோவுக்கும் அதிகம் ; 6 மீனவர்கள் கைது 

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுந்தூர மீன்பிடி படகொன்றில் இருந்த 350 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த படகில் இருந்த ஐந்து மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், போதைப் பொருட்களுடான அந்தப் படகு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரால் நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுடன் இணைந்ததாக கடற்படையினரால் கடற்பகுதியில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் படகொன்று பயணிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இதன்படி விரைந்து செயற்பட்ட கடற்படையினர் சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான படகை சுற்றிவளைத்து அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன்போது அந்த படனை சோதனையிட்ட கடற்படையினர் அதனுள் போதைப் பொருட்கள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 16 பொதிகளை மீட்டுள்ளதுடன், அந்தப் படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று முற்பகல் அந்தப் படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது படகில் இருந்த 16 பொதிகளிலும் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்த மீனவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அதனை அவதானிப்பதற்காக அவ்விடத்திற்கு சென்றிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகங்களுக்கு கூறுகையில்,

இந்தப் படகில் இருந்து மீட்கப்பட்ட 16 பொதிகளில் 350 கிலோவுக்கும் அதிகமான விஷ போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். முழு நாடும் முன்னெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. போதைப் பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் தகவல்களும் எங்களிடம் உள்ளன. நீங்களாகவே விலகிச் செல்லாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *