காசா போர் நிறுத்தம்: ஹமாஸ் ஆயுதங்களை களையுமா?… இஸ்ரேல் ஆக்கிரமிப்பை தொடருமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

தற்போது காசாவில் போர் நிறுத்தம் ஆரம்பமாகிய நிலையில், இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகள் விடுதலைக்காக காத்திருக்கின்றனர். இதேவேளை காசாவில் உள்நாட்டு வன்முறை அச்சம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் போராளிகளை திரும்ப அழைத்துள்ளனர்.
காணாமல் போன பாலஸ்தீனியர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க இடிபாடுகளைத் தோண்டி வருவதாக காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. மேலும் 9,500 மக்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும்
கூறப்படுகிறது.
இஸ்ரேலியப் படைகள் காசா பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து மீண்டும் உள்நாட்டு வன்முறை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் காசா மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் பல்லாயிரம் போராளிகளைத் திரும்பப் பெற்றுள்ளது.
இருபது அம்ச அமைதித் திட்டம்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த வாரம் அவர் வெளியிட்ட இருபது அம்ச அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளதாக கூறுகிறார்.
இதன் பொருள் அனைத்து பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். எகிப்தில் மூன்று நாட்கள் தீவிர மறைமுக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மேலும் வலுவான, நீடித்த மற்றும் நீண்டகால அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைகளுக்கு திரும்பப் பெறும் என்று நம்புகின்றனர். ஆனால் முதல் கட்டம் என்ன என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் இதுவரை வழங்கவில்லை.
ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்
போர் நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேலிய அமைச்சரவையால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உடனடியாக நடக்கும் என்று இஸ்ரேலிய ஊடகங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் இது தொடங்கும் என்று கூறினார்.
முதலில் இஸ்ரேலிய இராணுவம் ஒரு எல்லை கோட்டிற்கு பின்வாங்கும். இது சுமார் 53% பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். கடந்த வாரம் வெள்ளை மாளிகையால் விநியோகிக்கப்பட்ட வரைபடத்தின்படி, இது இஸ்ரேலிய வெளியேற்றத்தின் மூன்று கட்டங்களில் முதல் கட்டமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் சரிசெய்யப்பட்ட வரிசைப்படுத்தல் கோடுகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் 72 மணி நேர இடைவெளியில் ஹமாஸ் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்கள் திரும்பப் பெறப்படும், இருப்பினும் அது எவ்வளவு காலம் ஆகலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்காக இஸ்ரேல் இஸ்ரேலிய சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் சுமார் 250 பாலஸ்தீன கைதிகளையும், காசாவிலிருந்து 1,700 கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன வட்டாரங்களின் தகவலின்படு, அவர்களின் அடையாளங்கள் தற்போது தெளிவாக இல்லை, ஆனால் ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்பு ஹமாஸால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் பல ஆயுள் தண்டனை அனுபவிக்கும் உயர் நபர்கள் அடங்குவர்.
அதேசமயம் மிகவும் உயர்மட்ட கைதிகளில் ஒருவரான மர்வான் பர்கோட்டி, பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட மாட்டார் என்று இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
டிரம்பின் போர் நிறுத்த திட்டம்:
அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தின்படி, ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியின் எச்சங்களுக்காக இஸ்ரேல் 15 காசாவாசிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும். மேலும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளும் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும்.
காசாவில் ஆகஸ்ட் மாதம் ஐ.நா. ஆதரவு நிபுணர்களால் பஞ்சம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் டிரம்பின் திட்டம் ஒவ்வொரு நாளும் 600 லாரிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீன வட்டாரங்கள் ஆரம்பத்தில் தினமும் குறைந்தபட்சம் 400 என்றும், அதன் பிறகு இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தன.
இரண்டாம் கட்டமாக என்ன நடக்கும்?
டிரம்பின் இருபது அம்சத் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தால், பிந்தைய கட்டங்களின் விவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஆனால் இவற்றில் பலவற்றில் ஒரு உடன்பாட்டை எட்டுவது கடினமாக இருக்கலாம்.
இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் மட்டுமே போர் உடனடியாக முடிவடையும் என்று இந்த திட்டம் கூறுகிறது. காசா பகுதி முழுமையாக இராணுவமய அற்றதாக்கப்படும் என்றும், அனைத்து இராணுவ தாக்குதல் உள்கட்டமைப்புகளும் அழிக்கப்படும் என்றும் அது கூறுகிறது.
டொனால்ட் டிரம்ப் தலைமையில், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பங்கேற்கும் “அமைதி வாரியம்” மேற்பார்வையிடும் பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களின் தற்காலிக இடைக்காலக் குழுவால் காசா நிர்வகிக்கப்படும் என்றும் அந்த திட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.
ஹமாஸ் ஆயுதங்களை களையுமா ?
காசா பகுதி சீர்திருத்தம் முழுமையாக செய்யப்பட்டவுடன், அந்தப் பகுதியின் நிர்வாகம் இறுதியில் பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த போர் நிறுத்த திட்டத்தின்படி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, காசா நிர்வாகத்தில் ஹமாஸுக்கு எதிர்காலப் பங்கு இருக்காது.
ஆனாலும் ஹமாஸ் உறுப்பினர்கள் அமைதியான சகவாழ்வுக்கு உறுதியளித்தாலோ அல்லது வேறு நாட்டிற்கு பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
காசாவை விட்டு வெளியேற எந்த பாலஸ்தீனியர்களும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். வெளியேற விரும்புவோர் சுதந்திரமாகத் திரும்பிச் செல்லலாம்.
காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும், வலுவூட்டவும் டிரம்ப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் நிபுணர்கள் குழுவால் உருவாக்கப்படும். இதேவேளை பிந்தைய கட்டங்களில் பல சிக்கல்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிந்தைய கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது பல சர்ச்சைக்குரிய புள்ளிகள் இருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஹமாஸ் முன்னர் தனது ஆயுதங்களை கீழே போட மறுத்துவிட்டது. ஒரு பாலஸ்தீன அரசு நிறுவப்பட்ட பின்னரே அவ்வாறு செய்யும் என்று கூறியது. இருப்பினும்
கடந்த வார இறுதியில் இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப பதிலில் ஆயுதங்களை களைவது பற்றி குழு எதுவும் குறிப்பிடவில்லை, இது அதன் நிலைப்பாட்டில் மாறவில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
இஸ்ரேல் இந்த போர் நிறுத்த திட்டத்திற்கு முழுமையாக ஒப்புக் கொண்டது. ஆனாலும்
போருக்குப் பிந்தைய காசாவை பாலஸ்தீன அதிகாரத்திடம் ஒப்படைக்க நெதன்யாகு பின்வாங்கினார். மேலும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் ஹமாஸ் எந்தப் பங்கையும் வகிக்காது என்று வலியுறுத்தினார்.
இதேவேளை ஒருங்கிணைந்த பாலஸ்தீன இயக்கத்தின் ஒரு பகுதியாக காசாவில் எதிர்காலத்தில் சில பங்கை வகிக்க எதிர்பார்க்கிறோம் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் அளவு மற்றொரு முக்கியமான விஷயம். இஸ்ரேல் தனது முதல் திரும்பப் பெறுதல் காசாவின் சுமார் 53% கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறுகிறது. வெள்ளை மாளிகைத் திட்டம் சுமார் 40%, பின்னர் 15% வரை மேலும் திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது.
சிக்கலான இறுதி கட்டம்:
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதி கட்டம் பாதுகாப்பு சுற்றளவு ஆகும். அது எந்தவொரு மீண்டும் எழுச்சி பெறும் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்தும் காசா சரியாகப் பாதுகாக்கப்படும் வரை இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள வார்த்தைகள் தெளிவற்றவையாக உள்ளன. முக்கியமாக இஸ்ரேலிய படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதற்கான தெளிவான காலக்கெடுவை வழங்கவில்லை. ஹமாஸ் அமைப்பு இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளது. காலக்கெடுவை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

![]()