முச்சந்தி

மத்திய வங்கி ஆளுநர் பாரிய நிதி மோசடி; விமல் வீரவன்ச தெரிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மோசடியான வகையில் பிணை முறி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்றும், இதனால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் அவர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அது தொடர்பில் விரைவில் சட்டப்படியான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,

நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு, வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்த முடியாமல் நெருக்கடி நிலைமையில் இருந்த போது மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட நந்தலால் ஆரம்பத்தில் பொருளதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவர் என்று மக்கள் நினைத்தனர். இதன்பின்னர் மத்திய வங்கி சுயாதீன நிறுவனமாக மாறிய பின்னர் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அங்கு பணியாற்றுபவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன.

இதேவேளை அவரே பிணை முறியின் வட்டி வீதங்களை தீர்மானித்து கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றார். வங்கிகளின் வட்டி வீதம், பிணை முறி வட்டி வீதங்களை தீர்மானிப்பதால் அவர் எந்த நேரத்தில் என்ன நிலைமை ஏற்படும் என்று அந்த விளையாட்டுக்குள் ஈடுபடுகின்றார். மற்றையவர்கள் எதுவும் தெரியாமலேயே பிணை முறியில் கொடுக்கல் வாங்கல்களை ஈடுபடுகின்றனர். இதன்படி அவர்பிணை முறியில் முதலீடுகள் மூலம் முறையற்ற லாபங்களை பெற்றுக்கொண்டுள்ளார். நான்கு தடவைகளில் 50 மில்லியன் ரூபாவை அவர் பிணை முறியில் முதலீடு செய்து லாபங்களை பெற்றுள்ளார். பிணை முறியின் போது பகிரங்கப்படுத்தப்படாத தகவல்கள் அனைத்தையும் அவர் அறிந்துகொண்டு பிணை முறியில் கொடுக்கல் வாங்கல்களை செய்வது நியாயமற்றதே.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நேரத்தில் அதில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காது. தனது லாபத்தையும் பங்குகளையும் அதிகரித்துக்கொள்ளவுமே செயற்பட்டுள்ளார். இவ்வாறான மத்திய வங்கி ஆளுநருக்கு இந்தப் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கான உரிமை கிடையாது. அவர் தொடர்ந்தும் இந்தப் பதவியில் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பதற்கான உறுதிமொழி உள்ளதா? இதனால் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்கம் இருக்குமாக இருந்தால் மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு விரைவில் நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *