புதிய உலகின் யதார்த்தங்கள்!… ரஷ்ய-உக்ரைன் போர் இறையாண்மை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உக்ரைன் ரஷ்யா போர் இரு நாடுகளின் இறையாண்மையையும் பாதித்துள்ளது என்பதே உண்மையாகும். அத்துடன் இந்த போர் ரஷ்யாவிற்கு ஒரு பெரிய நெருக்கடியை பாரியளவில் உருவாக்கியுள்ளது. இந்த போர், உலகளவில் புவிசார் வியூக முக்கியத்துவத்தை மாற்றியுள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போர் என்பது, இறையாண்மை என்ற கருத்தை மையமாக வைத்து, இரண்டு நாடுகளின் சுயநிர்ணய உரிமை மற்றும் தேசிய நலன்களைப் பற்றிய ஒரு சிக்கலான மோதல் ஆகும். உண்மையாக போரை யார் தொடங்கினர், யார் சரி என்பது அனைத்தும் தவறான முகமூடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் கடைசிப் போராக இது இருக்குமா என்பது கேள்விக்குறியே)
நேட்டோ (NATO) அமைப்பு ரஷ்ய எல்லையை நோக்கி விரிவடைவதைத் தடுத்து, தன் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த ரஷ்யா இந்த போரை நடத்துகிறது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு உக்ரைன் தனது சுதந்திரத்தை அறிவித்ததிலிருந்து, சில ரஷ்ய தலைவர்கள் உக்ரைன் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.
உக்ரைன் மற்றும் சர்வதேச பார்வையில் உக்ரேனிய இறையாண்மை மீறலானது ஊடகங்களில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ஒரு சுதந்திரமான நாடு மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் உரிமை அதற்கு உண்டு. எனவே, ரஷ்யாவின் தாக்குதல் அதன் இறையாண்மையை நேரடியாக மீறுவதாக மேற்கு ஐரோப்பிய நாடுகளால் குற்றஞ் சாட்டப்பட்டு பார்க்கப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகள், உக்ரைனின் இறையாண்மையையும், எல்லைகளையும் மீறி ரஷ்யா போரைத் தொடங்கி நடாத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது எனக் கருதுகின்றன. ஆனாலும் இந்த போர், உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு நாடுகளின் இறையாண்மையையும் பாதித்துள்ளது. இந்த போர், ரஷ்யாவிற்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அனுமதியை ரஷ்ய அதிபர் புதின் வழங்கும் வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போர், உலகளவில் புவிசார் வியூக முக்கியத்துவத்தை மாற்றியுள்ளது.
சுருக்கமாக, ரஷ்ய-உக்ரைன் போர் என்பது, இறையாண்மை என்ற கருத்தை மையமாக வைத்து, இரண்டு நாடுகளின் சுயநிர்ணய உரிமை மற்றும் தேசிய நலன்களைப் பற்றிய ஒரு சிக்கலான மோதல் ஆகும்.
இன்றைய சூழ்நிலையில் இப்போரை பொறுத்தவரை, ரஷ்யர்களின் வீழ்ச்சியடைந்து வரும் நிலைகளை அமெரிக்க மூலோபாயவாதிகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகப் பயன்படுத்திய பழைய நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பானதாகும்.
முதலில் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துதல், ரஷ்ய உயரடுக்கையும் நடுத்தர வர்க்கத்தினரையும் ரஷ்ய தலைமையை எதிர்த்து வெறுப்படைய செய்தல், தலைமையை கேலி செய்து நாட்டை பாலைவனமாக்குதல், போன்ற முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது.
முன்பு யூகோஸ்லிவியாவை துண்டாடியது போலவே ரஷ்யாவை துண்டாட அமெரிக்க அரசும்
உளவுத்துறையும் முயன்றது. ரஷ்யாவை நேரடியாக எதிர்த்து நிற்க முடியாததால், அயல் நாடுகள் மூலமாக அமெரிக்க போரை நடத்த வேண்டிய சூழல் உருவானது. இந்த அயல் நாட்டு போரியல் தந்திர செயல்முறை யெல்ட்சினுக்குப் பிறகுதான் தொடங்கியது. ரஷ்ய-உக்ரைன் எல்லைகளிலும், போல்டிக் நாட்டு எல்லைகளிலும் இத்தகைய போரியல் தந்துரோபயத்தை அமெரிக்க உளவு அமைப்புகள் உருவாக்கின.
சோவியத்தின் ஆப்கான் படையெடுப்பு காலத்தில், மேற்கு நாடுகள் பாகிஸ்தானை ஒரு வழியாகவும், ஆப்கானிஸ்தானை ஒரு வழியாகவும் பயன்படுத்தி ரஷ்ய படைகளை பாரிய அளவில் அழித்தனர்.
இதே போன்ற சூழலை ரஷ்யாவின் கோக்கஸ் மலைகளிலும், செர்ச்னிய போர்களில் அமெரிக்கா மூக்கை நுளைக்க முயன்றது. ஆயினும் இந்த போர்களில் ரஷ்யா வெற்றியை ஈட்டியது. ஆனாலும் இந்த போர்களால்
காக்கஸில் உள்ள மக்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன.
இதன் பின்னரே ரஷ்யாவின் மேற்கு எல்லைகளில் புதிய போர் முன்னணி திறக்கப்பட்டது. 2014 இல் ரஷ்ய-உக்ரைன் மோதல்கள் தீவிரமாகி, இறுதியில் போர் தொடங்கியது.
2022 ஆம் ஆண்டிலேயே ரஷ்யர்களுக்கு மனிதவளம், பொருளாதாரம், இராணுவ வளம் பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது. உக்ரேனியர்களுக்கு மொத்த பேரழிவு ஏற்பட்டது போல, இந்த போரால் பெரும் விலையை செலுத்த வேண்டியிருந்தது.
புதிய உலகின் யதார்த்தங்கள்:
இந்த போரின் விளைவாக, உலகின் சீனாவை மூன்றாவது பெரிய சக்தியாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல-துருவ புதிய உலக ஒழுங்கை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் சரி, ஏன் ஐரோப்பாவிலும் கூட புதிய ஜனநாயகவாதிகள் ( நியோ-கன்சர்வேடிவ்கள்) அடிப்படையில் வலுவான பழமைவாத வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரானதுடன், உள்நாட்டில் தாராளவாத கொள்கையை பின்பற்றி வருகிறார்கள்.
முக்கியமாக யூத கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட போலந்து அல்லது ரஷ்ய குடியேறிகளின் ஆதரவை பெருக்கி முன்னைய காலத்தில் இருந்த சோவியத் எதிர்ப்பு பிரச்சாரத்தை மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்கின்றனர்.
ஆயினும் புதிய உலகின் யதார்த்தங்கள் பழைய ஐரோப்பிய பனிப்போர் சகாப்தத்தின் நிலைமையைப் போலவே அல்ல. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டை இனி தொடர்ந்து செய்ய முடியாது. ஆனாலும் 2014இன் தொடக்கத்தில் இருந்தே ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் பழைய பெரிய சக்திகளான ஜெர்மனி-பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தொடர்ந்தும் ரஷ்ய விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. ஆனாலும் சீனா-ரஷ்யா கூட்டாண்மை புதிய உலக ஒழுங்கில் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
உக்ரைனில் போர் முடிவுக்கு வருவது மட்டுமே அமெரிக்காவிற்கு போதுமானது என்று கருத முடியாது. ரஷ்யாவிற்கு எதிரான மூலோபாய ரீதியாக திருப்திகரமான ஒப்பந்தம் அவசியம் என ஜெர்மனி-பிரான்ஸ்-இங்கிலாந்து இணைந்து கோரி வருகின்றன.
குறைந்தபட்சம் ஐரோப்பிய ஒன்றியத்திலாவது இந்த நாடுகள் ஒரு தீர்க்கமான சக்தியாக இருக்க வேண்டுமென்றால், இந்த போரில் தங்கள் பக்க பலத்தை வெளிப்படுத்தி ஒருவித பங்கைக் காட்ட விரும்புகின்றனர்.
ரஷ்யாவை ஐரோப்பாவில் ஒரே வல்லரசாக மீண்டும் உருவாகிக் கொள்ளஅமெரிக்காவோ , ஐரோப்பிய நாடுகளோ ஒருபோதும் விரும்பாது என்பது திண்ணம்.
ரஷ்ய-உக்ரைன் போர் இறையாண்மை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போரின் ஆரம்பம், தொடர்ச்சி, இப்போதய சூழலில் முடிவு ஆகியவற்றிற்கு கேள்விகள் எழுகின்றன, ஆனால் பதில்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.
உண்மையாக போரை யார் தொடங்கினர், யார் சரி என்பது அனைத்தும் தவறான முகமூடிகள்
மூலம் மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் கடைசிப் போராக இது இருக்குமா என்பது கேள்விக்குறியே.
உண்மையில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் முரட்டுத்தனமான கண்ணோட்டங்களைக் கொண்ட அரசியல் வாதிகளுக்கு, போர் தொடங்குவதற்கு முன்பே, உலகை அடுத்த கட்ட ஒழுங்கிற்குள் கொண்டு செல்ல ஒருவித பல சோதனை அவசியம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதை ரஷ்யாவை தோற்கடித்து புதிய உலக ஒழுங்கு மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்பினர்.
வரலாற்றில் ரஷ்யாவுடன் நீண்டகாலமாக போட்டியிடும் சக்திகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி-பிரான்ஸ், இங்கிலாந்து அவற்றின் மூலோபாய கொள்கை நிலையில் இன்னமும் வலுவாக உள்ளன. இதன் விளைவாகவே இந்த போர் உருவாக்கப்பட்டது என்றும் அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.
![]()