இலங்கை

அரசாங்கம் ஏக்கியராஜ்ஜிய அரசியலமைப்பை புதிய அரசியலமைப்பாக நிறைவேற்றத் தீவிர முனைப்பு உறுதியானது: ஆபத்தைத் தடுத்து நிறுத்த கஜேந்திரகுமார் அறைகூவல்!

தற்போதைய அரசாங்கம் ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பைப் புதிய அரசியலமைப்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான கணிசமான நடவடிக்கைகளை உட்கட்சி ரீதியாக எடுத்து அது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்தகட்டமாக விரைவில் அரசியலமைப்புத் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேசப்பட்டு இதன்பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி.நிஹால் அபேயசிங்க இவ்வாறான முன்னெடுப்புக்களைத் தாம் முன்னெடுத்திருப்பதைச் சர்வதேச மட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, இது குறித்து வடக்கு- கிழக்குத் தமிழ்மக்கள் மத்தியில் தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு ஏற்படவுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் உள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கக் கூடிய சில கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், கட்சிகளின் பிரதிநிதிகளும் சுவிஸ் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான அழைப்பின் பேரில் அங்கு ஐந்து தினங்கள் நடந்த பல சந்திப்புக்களிலும், சமஷ்டி தொடர்பான கருத்தரங்கிலும் கலந்து கொண்டோம். இந்தச் சந்திப்புக்களில் புலம்பெயர் அமைப்புக்களும் அதிகமாகக் கலந்து கொண்டன. அதன் பின்னர் ஜெனீவாவுக்குச் சென்று பொறுப்புக் கூறல் தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியையும், சாட்சியங்களைச் சேகரிக்கும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.

இந்தச் சந்திப்புக்களில் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் தமக்குத் தான் மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளதாகக் கருத்துக்கள் வெளிவந்தது. மாற்றம் என்ற வகையில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அது உண்மையல்ல பொய் என்பதை நாம் தெளிவாக எடுத்துரைத்தோம். சுவிஸ் அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட சந்திப்பின் போதே அரசாங்கத் தரப்பு புதிய அரசியலமைப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இது ஒரு ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்துத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த்தேசியப் பேரவையும் இதுதொடர்பில் கடந்த பல மாதங்களாகவே கூறி வருகின்றோம். இதனால் தான் தமிழரசுக் கட்சியுடனும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கட்சியுடனும் பேசி இதுதொடர்பானதொரு பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்குக் கடந்த ஒரு வருட காலமாக முயற்சிகள் செய்து வருகின்றோம். எனினும், இந்த இரு தரப்புக்களும் எமது முயற்சிகளைத் திட்டமிட்டு உதாசீனம் செய்து வருகிறார்கள்.

ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பைத் தயாரித்த பிரதான சூத்திரதாரியாகவுள்ள சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான பின்னர் எங்களுடன் நடாத்தி வந்த ஏக்கியராஜ்ஜிய அரசியலமைப்பை நிராகரித்துத் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய, தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்படும், தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படக் கூடிய, சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக் கூடியதொரு சமஷ்டித் தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளை முறித்துக் கொண்டார். அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்குத் தற்போது எந்தவொரு அக்கறையையும் காட்டவில்லை எனவும், அவ்வாறான முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது நாங்கள் பேசலாமென்று கூறித் தான் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளை முறித்துக் கொண்டனர்.

ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பைப் புதிய அரசியலமைப்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு கற்பனையல்ல என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி 13 ஆவது திருத்தம் தொடர்பில் இனியும் கதைத்து நேரத்தை வீணாக்குவதை விடுத்து வடக்கு- கிழக்கில் பெரும்பான்மையாகவுள்ள தமிழ்மக்கள் மத்தியில் புதிய ஏக்கியராஜ்ஜிய அரசியமைப்பைத் தோற்கடிப்பதற்குத் தீவிரமாக இறங்கி வேலை செய்ய முன்வர வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படும் நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் தற்போது வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரதும் ஆதரவு புதிய அரசியலமைப்புக்கு வழங்கப்படும் பட்சத்தில் 85 வீதமான வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய ஏக்கியராஜ்ஜிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து நிறைவேற்றியதாகக் காட்டக் கூடிய அபாயநிலை காணப்படுகின்றது. எனவே, தமிழ்மக்கள் நேரடியாக எதிர்ப்பதன் மூலமாக மாத்திரம் தான் ஒற்றையாட்சி முறையான புதிய ஏக்கியராஜ்ஜிய அரசியமைப்பைத் தோற்கக் கூடியதாகவிருக்கும். அவ்வாறாயின் தமிழ்மக்கள் மத்தியில் நாம் இதுதொடர்பான தீவிரமான பரப்புரைகளைக் காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *