முச்சந்தி

காந்தி : பொபி சான்ட்ஸ் : திலீபன் சுதந்திர விடியலுக்காக அகிம்சை வேள்வி !…. நவீனன்

சுதந்திர விடியலுக்கான அகிம்சை வேள்வியின் இன்னோர் அடையாளமே பொபி சான்ட்ஸ். ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பு இருந்தவர்.
ஐரிஷ் எழுச்சிக்கு அகிம்சை குரல்:
இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாரே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1981 சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணா நோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ்(Robert Gerard Sands, ‘பொபி சான்ட்ஸ்’ (Bobby Sands, மார்ச் 9, 1954 – மே 5, 1981). அந்த இளம் போராளி யாருமல்ல. அவரே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய பொபி சான்ட்ஸ்.
வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணா நோன்பிருந்து இறந்த அந்த இளம் போராளிக்கு அப்போது வயது 27.
அந்த இளம் போராளியுடன் சேர்ந்து பத்து பேர் இந்த உண்ணா நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இதன் பின் பலர் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர்.
பொபி சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் ஆதரவாக பலத்த குரலெழுப்பப்பட்டன. இப் போராட்டம் 66 நாட்களில் முடிவுக்கு வந்தது, ஆம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்திகதி சுயநினைவற்ற நிலையிலேயே அப்போராளியின் உயிர் பிரிந்தது.
உண்ணாவிரத போரில் பொபி சான்ட்ஸ்:
பிரிட்டன் வட அயர்லாந்து என்ற பகுதியை காலனிப் படுத்தி வைத்திருப்பதையும், IRA யின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக வளர்ந்து விட்டதையும் வட அயர்லாந்து பிரச்சினையில், அப்போதய பிரதமர் மார்க்கரெட் தாட்சர் ஆக்கிரமிப்பாளர்களான ஆங்கிலேய குடியேறிகளை ஆதரித்தார். விடுதலைக்காக போராடிய ஐரிஷ் மக்களை அடக்குவதில் குறியாக இருந்தார்.
விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது. இந்த உண்ணாவிரத போராட்டம் நாளுக்கு நாள் நாடு தழுவிய எழுச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகள் மத்தியில் பேச்சு பொருளானது, இந்த நேரத்தில் 1981இல் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே ஐரீஸ் குடியரசு இயக்கம் (Irish Republican Movement ) சார்பில் நின்று தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சான்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.
அதே போன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான பொபிசான்ட்ஸின் போராட்டம், தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் அம்மக்களின் அகிம்சா வழி போராட்டங்களை எப்போதுமே கண்டு கொள்ளாது என்பது தான் உலக விதியும் வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டது.
ஒப்பிலா அறவழிப் போராளி திலீபன்:
நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன் என தன்னுடலுக்கு துரோகமும் தன்னினத்திற்கு தன்னையும் தந்த ஒப்பிலா அறவழிப் போராளி திலீபனின் இறுதி வார்த்தைகளே இவையாகும்.
தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஒரு சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும் என்ற விடுதலைக் கனலை விழியிலேந்திய பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்டவர் திலீபன்.
காந்தியின் அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.
உண்மையில் அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் அதனைவிட ஆயுதமேந்தி போராடிய இந்திய வீரர்களை மறந்துவிட முடியாது.
காந்தியின் அகிம்சையும் திலீபனின் உயிர்க்கொடையையும் ஒரே தட்டில் ஒப்பிட முடியாது. திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல உயிர் வாழ முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை. தியாகத்தின் உச்சத்திற்கே திலீபன் சென்றார்.
திலீபனின் கோரிக்கைகள்:
1987இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப் படாது மட்டுமல்ல, எதிர் மறையான விடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டுப் போராட முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள்.
தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழப் பிரதேசத்தில், சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன், தமிழ்க் கிராமங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்.
ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து, செப்டம்பர் மாதம் 15ம் திகதி 1987ம் ஆண்டு, திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
திலீபன் இந்தியாவிடம் நீதிகேட்டு தன் அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த ஐந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல. ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விடயங்கள் தாம் அவை.
இவற்றை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய தியாதி திலீபனின் மன உறுதி பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி உள்ளவராக திலீபன் விளங்கினார். எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ளவரை, உறுதியோடு போராடுகின்ற, உளவலிமையுள்ள இலட்சிய உறுதியில் திலீபன் இருந்தார்.
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த போது, ஒரு சொட்டுத் தண்ணீரையும் உட்கொள்ளாமல், உண்ணாவிரதத்தை மேற் கொள்ள வேண்டும் என்று திலீபன் முடிவெடுத்தார். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வரலாற்றைப் படைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *