முச்சந்தி
மேற்குலகில் குடியேற்ற எதிர்ப்பு நிலை… ஆஸி, பிரித்தானியாவில் வலதுசாரி இனவாதம் ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அண்மையில் அவுஸ்திரேலியாவிலும், இலண்டனில் நடைபெற்ற குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள், அங்கு வாழும் புலம்பெயர்ந்தோர், குறிப்பாக தென் கிழக்காசிய சமூகத்தினரிடையே பெரும் கவலையையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இலண்டனில் தீவிர வலதுசாரிகள் பேரணி, பல தசாப்தங்களில் பிரிட்டன் கண்டிராத வகையில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக மாறியது. 2025 செப்டம்பர் 13ஆம் திகதி ஒன்ரறை இலட்சம் பேர் பேரணியில் பங்கேற்றதால் மொத்த நகரமே குலுங்கியது. தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் “யுனைட் தி கிங்டம் (Unite The Kingdom) என்ற பெயரில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு முன்பாக அவுஸ்திரேலியா நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி ‘மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா’ (March for Australia) என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.அதிகப்படியான வெளிநாட்டினர் குடியேற்றத்தால் வளங்கள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு பாதிக்கப்படுவதாக பேரணியில் குற்றம் சாட்டினர். இந்த போராட்டங்கள், சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் மற்றும் கான்பெரா போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்றன.
இலண்டன் குடியேற்ற எதிர்ப்பு பேரணி:
அதிகரிக்கும் குடியேற்றம் மீதான கோபம் மற்றும் நாட்டின் எல்லைகளில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்ற கருத்தின் மீதான நம்பிக்கையால், லண்டனில் பெருமளவில் மக்கள் திரண்டனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து, அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், பிரிட்டன் தனது கட்டுப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
பிரித்தானிய கலாசாரம் அழிந்து வருவதாகவும், அதைப் பாதுகாக்கவே தாங்கள் இப் பேரணியில் வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. குடியேற்றத்திற்கு எதிராகப் பேசும் சாதாரண மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்று பலரும் குறிப்பிட்டனர்.
இதற்கு முன்பாகவும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க பல போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. இப்பேரணிகளில் இனவெறி கருத்துகளையும் பரவலாகப் பார்க்க முடிந்தது.
ஆனால் பிரிட்டனில் சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டமாக இது இருக்கிறது. புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி மத்திய லண்டன் போராட்டம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே மறுபக்கம் இனவெறிக்கு எதிராக நில்லுங்கள் என்ற முழக்கத்துடன் புலம்பெயர்ந்தோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பாதுகாப்பை மீறி புலம்பெயர்ந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், போலீசார் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆட்சி மாற்றம் கோரும் எலான் மஸ்க்:
உலகின் மிக பெரிய பணக்காரரும், தீவிர வலதுசாரி ஆதரவாளருமான எலான் மஸ்கும்
அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ மூலம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். பிரிட்டிஷ் நாட்டின் குடிமகனாக இருப்பதில் எப்போதும் ஒரு சிறப்பு உள்ளது. ஆனால், இப்போது இங்கு நடப்பதை நான் பிரிட்டனின் அழிவாகப் பார்க்கிறேன். மேலும், கீர் ஸ்டார்மர் அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ மூலம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். பிரிட்டிஷ் நாட்டின் குடிமகனாக இருப்பதில் எப்போதும் ஒரு சிறப்பு உள்ளது. ஆனால், இப்போது இங்கு நடப்பதை நான் பிரிட்டனின் அழிவாகப் பார்க்கிறேன். மேலும், கீர் ஸ்டார்மர் அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.மேலும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக சாடினார். வன்முறை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டன் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் போராட வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும். உடனடியாக பாராளமன்றை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி:
ஆஸியில் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களின் உச்சமாக “March for Australia” போன்ற நிகழ்வுகள் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்ப்பதோடு, அவுஸ்திரேலியாவின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த எதிர்ப்பு போராட்டங்கள் வலதுசாரி மற்றும் நவ-நாஜிக் அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டன. வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, அவுஸ்திரேலியாவின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுப்பது என்ற அடிப்படையில் நவ-நாஜி மற்றும் வலதுசாரி அமைப்புகள் இந்த போராட்டங்களை ஆதரித்தன. மேலும்
இந்தியனே வெளியேறு போன்ற இனவாதக் கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இது அவுஸ்திரேலியாவின் பல்லின கலாச்சார அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது. இத்தகைய இனவாத போராட்டங்கள் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாகவும், சமூகப் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் ஆஸி உள்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் வலதுசாரி பேரணி:
பாரிய குடியேற்றத்தை (Mass Migration) முடிவுக்குக் கொண்டுவரவும், அவுஸ்திரேலியாவின் அடையாளத்தை மீட்டெடுக்கவும் அழைப்பு விடுத்து, March for Australia போராட்டங்கள் அவுஸ்திரேலிய புலம் பெயர் குடிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் டோனி பேர்க் இந்த பேரணியை அவுஸ்திரேலிய அரசியல் கலாச்சார முறைக்கு மாறானது என்றும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டில் ஒருவர் வெளிநாட்டில்
பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளனர். இதற்கு நவநாஜி மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்கான பேரணி என்ற பெயரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிட்னி நகரில் சுமார் எட்டாயிரம் பேர் தேசியக் கொடியேந்தியபடி பங்கேற்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு எதிராக அகதிகள் நடவடிக்கை கூட்டமைப்பு பேரணி நடத்தியது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், அவுஸ்திரேலியாவுக்கான பேரணி, தீவிர வலதுசாரி அமைப்பினரின் வெறுப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை, அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும். அவர்கள் குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வளங்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், வீடுகளின் வாடகை உயர்ந்துள்ளதாகவும் வாதிடுகின்றனர்.இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட சிலர், ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயர்களுக்காக கட்டப்பட்ட நாடு என்றும், புலம்பெயர்ந்தோர் வெளியேற வேண்டும் என்றும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மெல்பேர்ணில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி:
மெல்பேர்ணில் பூர்வக்குடி மக்களின் போராட்ட முகாம்மீது தீவிர வலதுசாரி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்தவர்கள் மீது நவநாஜிகள் குழு கொடூரமாக தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை விக்டோரியா மாநில அரசும் கண்டித்துள்ளது.
பூர்வக்குடி மக்களின் கொடிகளை, கறுப்பு ஆடை அணிந்த கும்பல் மிதித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்த போராட்டங்களுக்கு பின்னால் உள்ள இனவெறி உணர்வை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் சமூகங்களில், இந்தியர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர். இதுவே, இந்த போராட்டங்களின் முக்கிய இலக்காக இந்தியர்கள் மாறுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற உயர் பணிகளில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். ஆனால், சில குழுக்கள், இந்தியர்களின் குடியேற்றம் உள்ளூர் வேலைவாய்ப்பையும் சமூக அமைப்பையும் பாதிக்கிறது என்று தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு:
2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிரிட்டனில் தெற்காசிய மக்கள் இரண்டாவது பெரிய இனக்குழுவாக உள்ளனர். இதில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், தமிழர்களும் நேபாளிகளும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.
பிரிட்டனில் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் கொள்கைகள் இருந்தாலும், பல தலைமுறைகளாக பிரிட்டனில் வாழும் இந்த தெற்காசிய சமூகங்கள் தாக்கத்தை உணர்கின்றன. தற்போது இஸ்லாம் மற்றும் சீக்கிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன.
புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக பிரிட்டனின் மக்கள் தொகை, கலாசாரம் மற்றும் பொருளாதார அடையாளத்தை தக்கவைத்து வருகின்றனர். ஆனால், பிரெக்ஸிட்க்குப் பிறகு, தீவிர வலதுசாரி குழுக்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதப் போக்கை அதிகரித்துள்ளன.

வளங்களின் பங்கீடு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டியுள்ள தவறான தகவல்கள், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளன. லண்டன், பர்மிங்காம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் தொகையில், கிட்டத்தட்ட நாற்பது வீதமான புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர். இதனால், அவர்கள் வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றுவதாக ஒரு உணர்வு பரவியுள்ளது.
தீவிர வலதுசாரிகள் இதனை பிரிட்டன் நாடு முற்றுகையில் இருப்பதற்கான அடையாளமாக சித்தரிக்கின்றனர். அதேநேரம், பொருளாதார அழுத்தங்கள், அதிகரிக்கும் செலவுகள், வீடுகள் பற்றாக்குறை, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை குடியேற்றத்தை எளிதாக குற்றம் சாட்டக்கூடிய இலக்காக மாற்றியுள்ளன.
இனவெறியை கட்டுப்படுத்தும் ஆஸி அரசு:
ஆஸி அரசு இந்த போராட்டங்களை கடுமையாக கண்டித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பலம் அதன் பன்முகத் தன்மையிலும், அனைவரையும் உள்ளடக்கிய சமூக அமைப்பிலுமே உள்ளது என்று அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இனவெறி மற்றும் பாகுபாட்டை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அரசு கூறியுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் சில தீவிர வலதுசாரி குழுக்களால் பரப்பப்படும் குடியேற்ற எதிர்ப்பு மனநிலை, சமூக நல்லிணக்கத்துக்கு ஒரு சவாலாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள், புலம்பெயர்ந்த சமூகங்கள் தங்கள் அடையாளத்தையும், பங்களிப்பையும் அவுஸ்திரேலியாவில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.இதுபோன்ற போராட்டங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, அரசு மற்றும் சமூகத் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த உறுதியான நிலைப்பாடு, அவுஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினருக்கும், மற்ற புலம்பெயர்ந்தோருக்கும் ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
![]()