எங்களால் தனித்து முடியாது கைவிரிக்கும் பொலிஸார்!; இராணுவம்,அதிரடிப் படையின் ஒத்துழைப்பு தேவை

பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைவிரித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந. திருலிங்கநாதனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இதன்போது வடமராட்சியில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும், கற்கோவளம் பகுதியில் மணல் மாபியாக்களால் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, ‘பொலிஸ் நிலையத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆதலால், இந்த விடயத்தில் எதையும் தம்மால் செய்ய முடியாதுள்ளது. இராணுவத்தினர் அல்லது விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தெரிவித்தார்.
இதன்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸார் ஒருவர் சொந்தமாக டிப்பர் வாகனங்களை வைத்துக்கொண்டு வடமராட்சியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் ஒளிப்பட ஆதாரங்களுடன் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, ‘இந்த விடயம் தொடர்பில் கவனம் எடுக்கப்படும்’ என பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க கூறினார்.
இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு நேற்றுக் காலை சென்றிருந்தார்.
இந்தப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இது பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகாரிகள் சகிதம் அமைச்சர் அங்கு விரைந்திருந்தார்.
மீனவர்கள் மற்றும் மக்களிடம் கலந்துரையாடி, நடந்தவற்றை கேட்டறிந்து – அவை பற்றி பொலிஸாரிடம் எடுத்துரைத்தார். பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் ஊடாகவே மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்த வைத்தார்.
தீவக பகுதிகளில் காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சிதான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது எனவும் அமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.
![]()