முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவின் புத்தகத்திற்கு பிரிட்டன் அரசு தடை விதித்தது!

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட எழுதி வெளியிட்ட ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ என்ற புத்தகத்திற்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டதையடுத்து அதன் விற்பனையை அமேசான் யு.கே.நிறுவனம் நிறுத்தியுள்ளது.
செப்டம்பர் 2005 முதல் ஜூலை 2009 வரை இலங்கை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னாகொட, அமேசான் யு.கே. முடிவால் மிகவும் ஆச்சரியப்பட்டதாக ‘த ஐலன்ட்’டிடம் கூறியுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட , ஜெனரல் (ஓய்வு) ஷவேந்திர சில்வா, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா மற்றும் முன்னாள் புலிகளின் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன், அல்லது கருணா அம்மான் ஆகியோர் மீது தடை விதித்த நிலையிலேயே தற்போது, எழுதி வெளியிட்ட ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ என்ற புத்தகத்திற்கும் பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தடைச் சட்டத்தை மீறியதாக,இந்தப் புத்தக விற்பனை மீறியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) எச்சரித்ததன் விளைவாக அமேசான் இந்த முடிவை எடுத்ததாக அட்மிரல் வசந்த கரன்னாகொட கூறினார்.
தென்னாபிரிக்காவில் நிறுவப்பட்ட ITJP, 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தி வருகிறது.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனின் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினராகப் பணியாற்றிய யஸ்மின் சூகா, இலங்கை இராணுவம் மோதலின் கடைசி கட்டத்தின் போது 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டினார்.அவர் ITPJ இன் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நடவடிக்கையை அடுத்து பிரிட்டன் அரசின் கோரிக்கையால்,மேற்படி புத்தகத்தின் வெளியீட்டாளரான பென்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா, தங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயன்றதாக வசந்த கரன்னாகொட கூறினார்.
“வெளியீட்டாளர் எந்தச் சிரமத்தையும் அனுபவிக்க நான் விரும்பவில்லை. எனவே, நாங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம்,” என்று அவர் கூறினார்.
மேலும் இவ் விடயத்தில் இலங்கை தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பிரிட்டனால் அறிவிக்கப்பட்ட தடையை ITPJ பயன்படுத்திக் கொண்டது என்று அட்மிரல் வசந்த கரன்னாகொட ‘த ஐலன்ட்’டிடம் கூறினார்.
இந்தப் புத்தகத்தை விசாரணைக்காக ITJP, இங்கிலாந்தின் நிதித் தடைகள் அமலாக்க அலுவலகத்திற்கு அனுப்பிய நிலையிலேயே பிரிட்டனால் இந்தத் தடைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரண்ணகோடவின் நினைவுக் குறிப்புகளை வெளியிட்டதற்காக பென்குயின் இந்தியா நிறுவனத்திடம் ITJP கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. கரன்னாகொடவின் மேற்படி புத்தகத்தின் சிங்களப் பதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
முன்னாள் கடற்படைத் தளபதியான வசந்த கரன்னாகொட யுத்தம் நடைபெற்ற காலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்ததுடன், யுத்தத்தின் இறுதிப் பகுதியில் கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் பிரதம சூத்திரதாரியென குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது கடந்த மார்ச்சில் பிரிட்டன் தடை விதித்திருந்தது.
இதேவேளை ஏப்ரல் 2023 இல் அட்மிரல் வசந்த கரன்னாகொடவை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்ததும் பிப்ரவரி 2020 இல் ஜெனரல் சவேந்திர சில்வா மீது அமெரிக்கா பயணத் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
![]()