இலங்கை

செம்மணி, கொக்குத்தொடுவாயை புறக்கணித்த நீதியமைச்சர் குருக்கள் மடத்தில் நேரில் ஆய்வு

யாழ் செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரையில் 231 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு விஜயம் செய்யாத,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிப்பகுதிக்கு செல்லாத நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் மனித புதைகுழி இருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் மனித புதைகுழி இருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள இடங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் காணப்படும் மனித புதைகுழி தொடர்பில் முறைப்பாடுகள் இருக்குமாயின் அவற்றை முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் மேலும் தெரிவிகையில்,
கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக, காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அதன்படி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலையீட்டின் கீழ், செம்மணி மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி தற்போது சர்வதேச தரத்தின்படி நடைபெற்று வருகிறது.

இருப்பினும், குருக்கள் மடத்தில் உள்ள இந்த இடத்தில் உள்ள நிலைமை ஏனைய மனித புதைகுழிகளின் நிலைமைகளிலிருந்து வேறுபட்டது என்று கூற வேண்டும். இந்த இடம் தொடர்பாக 2014 இல் முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், காணாமல் போனோர் அலுவலகம், இங்கு விசாரணைகளை நடத்த தடயவியல் மருத்துவ அதிகாரி வசதிகள் மற்றும் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு கோரியது. இருப்பினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் காலத்தில், தேவையான ஆதரவு வழங்கப்படவில்லை.
கடந்த காலத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலையீட்டால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. காணாமல் போனோருக்குத் தேவையான உத்தரவுகளை அலுவலகம் பெற்றுள்ளது, மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களைக் கண்காணிக்க கொழும்பிலிருந்து தடயவியல் மருத்துவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு நீதி அமைச்சகம் தனது அதிகபட்ச பங்களிப்பைச் செய்து வருகிறது. நீதி மற்றும் உண்மையைத் தேடுவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட, கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். குருக்கலமடம் சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்குமாறு பொதுமக்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு ஆண்டுதோறும் வரவு செலவு மூலம் பணம் ஒதுக்கப்படுகிறது. தடயவியல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தளத்தின் அகழ்வாராய்ச்சிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். இது நிதி ஒதுக்கீடுகள் பற்றிய கேள்வி அல்ல. இது மனிதாபிமானம் பற்றிய கேள்வி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதேவேளை வடக்கில் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்ட்டு அகழ்வுகளின் மூலம் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்யுமாறு தமிழ் அரசியல் தரப்புக்களினாலும் மக்களினாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் இதுவரை அங்கு விஜயம் செய்யாத நீதி அமைச்சர் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் மனித புதைகுழி இருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *