முச்சந்தி

உச்சகட்ட முறுகலில் டிரம்ப் – புட்டின்!…. அமெரிக்க ஆயுதங்கள் மீண்டும் உக்ரைனுக்கு?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இந்தியா 2024 இல் 35வீத ரஷ்ய மசகு எண்ணெயை இறக்குமதி செய்தது. அதேவேளை சீனா 19 வீத மசகு எண்ணெயை இறக்குமதி செய்தது. துருக்கி அரசு 2023இல் 58 வீத பதப்படுத்தப்பட்ட பெட்ரோலிய இறக்குமதியை பெற்றுக் கொண்டது. தற்போது அமெரிக்காவின் புதிய வரிகளால் இந்த நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேரிடும் என அச்சம் நிலவுகிறது)
புட்டின் உக்ரேனிய போரை நிறுத்தாவிடின் ரஷ்யாவுக்கு எதிராக 100 வீத “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்து அச்சுறுத்தியுள்ளார்.
ஐம்பது நாட்களுக்குள் உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படா விட்டால் இந்த வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் என மேலும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜூலை 14இல் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே டிரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர் நிறுத்த கலந்துரையாடலை நடத்தும் டிரம்பின் முயற்சிகளை ரஷ்ய ஜனாதிபதி இழுத்தடிப்பதால் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவிற்கு பாரிய நெருக்கடி?
டிரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடியை புட்டின் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்றும், சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் ரஷ்யா இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக டிரம்பின் வரிகள், ரஷ்ய மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு, யுரேனியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2024 இல் 35வீத ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது. அதேவேளை சீனா 19 வீத எண்ணெயை இறக்குமதி செய்தத. துருக்கி அரசு 2023இல் 58 வீத பதப்படுத்தப்பட்ட பெட்ரோலிய இறக்குமதியை பெற்றுக் கொண்டது. தற்போது வரிகளால் இந்த நாடுகள் பெரும் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆர்வம் காட்டவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனில் டிரம்ப் காற்று வீசுகிறதா ?
புதிய வரியை ரஷ்யாவுக்கு விதிப்பதுடன், உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை நேட்டோவிற்கு அனுப்பும் என்றும், பின்னர் அவற்றை உக்ரைனுக்கு வழங்கும் என கூறப்படுகிறது.
புட்டின் மீது கடும் அதிருப்தியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உதவும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை மீண்டும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளமை ஐரோப்பிய ஒன்றியத்தால் வரவேற்கப்பட்டுள்ளது.
டிரம்ப் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தம்:
உடனடியாக போரை நிறுத்த கோரும் அமெரிக்கா, போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் தான், டிரம்ப் அரசு அதிகமாக கவனம் செலுத்துகிறது. யுத்த நிறுத்தம் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு உக்ரேனின் முக்கியமான கனிம வளங்களை பெற வாய்ப்பு அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்கனவே உருவாக்கி உள்ளார்.
பல மாதங்கள் நீடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரேனின் கனிம மற்றும் எரிசக்தி இருப்புக்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் உக்ரேனும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட ஏப்ரல் மாதம் கையொப்பம் இட்டுள்ளன.
உக்ரேனின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்வதற்கான பொருளாதார ஊக்கத்தை வழங்கும் எனக்கூறி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரேனுக்கு ஏற்கனவே தங்கள் நாடு செய்துள்ள உதவியின் அளவு தொடர்பான அமெரிக்காவின் பொருளாதார நலன்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம், லித்தியம் என பல்வேறு முக்கியமான கனிமங்கள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ராணுவ தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்பட பல முக்கியமான துறைகளுக்கு பயன்படும் என்பதால் இந்த கனிமங்களுக்கு சர்வதேச அளவில் தேவை அதிக அளவில் உள்ளது.
போரினால் சிதைந்திருக்கும் உக்ரேனின் பொருளாதாரத்தை உத்வேகத்துடன் மேம்படுத்துவதற்காக முதலீட்டு நிதியை உருவாக்குவது தொடர்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்கா மற்றும் உக்ரேன் இடையிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.
பேட்ரியாட் வான் பாதுகாப்பு :
தற்போது உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளமைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எனினும் எத்தனை பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot air defense missiles) வழங்குவது என அமெரிக்க ஜனாதிபதி அறிவிக்க வில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தாக்குதலில் பெருமளவான இழப்புகள் ஏற்படுவதாகவும், உக்ரைனின் தற்காப்பிற்காகக் கூடுதல் ஆயுதங்கள் தேவை என டிரம்ப் தனது நிலையை வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோவுடன் ஆயுத ஒப்பந்தம்:
நேட்டோ அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அப்படி வாங்கப்படும் பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை, அந்நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்து உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
பல பில்லியன் கணக்கான மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாகவும், அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களை, ரஷ்யாவுடன் யுத்தம் புரியும் உக்ரைனுக்கு விரைவிலேயே வழங்க உள்ளதாகவும் ட்ரம்ப் ரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உக்ரைன் ஏராளமான ஆயுதங்களை பெறும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருத்தே கூறியுள்ளார்.
டிரம்பின் வாய்ச்சவாடல்:
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் 24 மணி நேரத்துக்குள் உக்ரேன் போரை நிறுத்தி விடுவேன் என்ற பேச்சு தற்போது வெறும் வாய்ச்சவாடலாகவே மாறியுள்ளது.
தற்போது டிரம்ப் அதிபராக பதவியேற்று ஏழு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. உக்ரேனிய போர் இந்த அளவுக்கு கடுமையான மற்றும் சிக்கலான மோதலாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை டிரம்ப் தற்போது உணரத் தொடங்கியிருக்கலாம்.
இதேவேளை ரஷ்ய அதிபர் உடனடியான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அவசரப்பட விரும்பவில்லை. நீண்ட கால தீர்வைப் பற்றி பேசுவதற்கு முன்பு இடைக்கால போர் நிறுத்தத்தை கோரும் அமெரிக்காவின் இரண்டு கட்ட திட்டத்தை தான் உறுதியாக எதிர்ப்பதாக புட்டின் வெளிப்படுத்தி இருந்தார்.
நேட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரேன் மேற்குலகு சார்பு கொண்ட நாடாக இருப்பது ஆகியவை ஒரு வகையில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக ரஷ்ய அதிபர் வெளிப்பட கூறியுள்ளார்.
எந்தவொரு சமாதான உடன்பாடும் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு முன்பு, ரஷ்யா முன்வைக்கும் முக்கியமான கேள்விகளுக்கும் நிபந்தனைகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றும் புட்டின் வலியுறுத்தி வருகிறார்.
புட்டின் மீது அதிருப்தியில் டிரம்ப்:
புட்டின் குறித்து பேசிய ட்ரம்ப், அவர் உண்மையாகவே ஏராளமான மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். புட்டின் காலையில் நன்றாகவே பேசிவிட்டு, மாலையில் அனைவர் மீதும் குண்டுகளை வீசுகிறார் என்றும் விமர்சித்திருந்தார்.
இவ்வருட ஜனவரி மாதத்தில், ரஷ்ய அதிபர் புட்டினுடன் இணைந்து பணியாற்றி, போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நம்பிக்கையாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்நிலையில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால், பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும், ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இரு நாடுகளும் எதற்குமே ஒத்துவரவில்லை. இதனால், சமீப காலமாக, புட்டின் – ஜெலன்ஸ்கி மீதும் பெரும் அதிருப்தியில் உள்ளார் டிரம்ப்.
டிரம்ப் கூறியது போல எதுவும் நடக்கவில்லை. அதற்கு புட்டின் ஒரு தடையாக இருப்பதாக அவர் மீது எரிச்சலடைந்துள்ள டிரம்ப், தற்போது ரஷ்யா மீது வரிகளை விதித்துள்ளார்.
இதற்கு புட்டின் அடி பணிவாரா அல்லது உக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button