முச்சந்தி

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதல்; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் அதாவது Leap forward  எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய தினம் காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அவ் இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இத் தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து உயிர் நீத்த தம் உறவுகளுக்கு அவர்களது  உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் மலர் தூவி  சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button