இலங்கை

இறுதிப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மானை உயிருடன் மீட்க அமெரிக்கா கப்பல் அனுப்பியது

இறுதிக்கட்டப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டவர்களை அமெரிக்கா உயிருடன் கோரி இருந்தது. அதற்காக கப்பலொன்றுகூட அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ புலி டயஸ்போராக்களுடன் இந்த அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கின்றது. தேர்தல் தொடர்பில் அவர்களுடன் கொடுக்கல், வாங்கல்கள்கூட இருந்திருக்கலாம். நிதி உதவிகூட கிடைக்கப்பெற்றிருக்கக்கூடும்.

கனடாவில் இனவழிப்பு நினைவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகூட வெளியிடப்படவில்லை. இனவழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மற்றும் கொழும்பில்கூட இனவழிப்பு நினைவுகூரப்படுகின்றது.

ஆனால் ஆட்சியாளர்கள் போர் வீரர்களுக்குரிய கௌரவத்தை வழங்கவில்லை. புலி டயஸ்போராக்களுக்கு மனம் வலிக்கும் என்பதால்தான் போர் வீரர்களைக்கூட சிப்பாயென ஆட்சியாளர்கள் விளித்துள்ளனர்.

போர்காலத்தில்கூட சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. அது இன்னும் தொடர்கின்றது.
இறுதிக்கட்டப்போரின்போது வடக்கு கடற்பரப்புக்கு அண்மித்து அமெரிக்காவின் மெரைன் படையணியின் கப்பலொன்று வந்தது. சர்வதேச கடற்பரப்பில் அது நிறுத்தப்பட்டிருந்தது.

பொட்டு அம்மான், பிரபாகரன் உள்ளிட்டவர்களை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரினார்கள். எதற்காக இது? இலங்கையை பிரிக்க வேண்டும் என்பதே அந்த சக்திகளின் நோக்கம். அந்த தேவைக்காகவே புலிகள் அமைப்பு செயற்பட்டது. சர்வதேச ரீதியிலும் வலுவடைந்தது.

எமது நாட்டில் பாடப்புத்தகத்துக்கு போர் வீரர்களை உள்ளடக்க முடியாதுள்ளது. ஆனால் கனடாவில் பாடப்புத்தகத்துக்குள் இனவழிப்பு உள்வாங்கப்பட்டுள்ளது. இப்படிதான் சர்வதேச அழுத்தம் தொடர்கின்றது.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *