முச்சந்தி

பிரதமர் ஹரிணி மீது கட்சிக்குள் அதிருப்தி; பதவி நீக்குவதற்கும் முயற்சி?

கொழும்பு மாநகரசபையில் எதிர்பார்த்த வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ள முடியாமைக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவே காரணமென நேரடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை அதிகாரத்திலிருந்து நீக்கும் முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜாங்கை சந்தித்திருந்ததுடன், மிலிந்த மொரகொட தலைமையிலான தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த பின்னணியில், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்சிக்குள் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக செயற்படும் 46 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹரிணியுடன் இணைந்து சுயேச்சையாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசாங்கம் ஜே.வி.பி காரணமாக அல்ல, மாறாக தேசிய மக்கள் சக்தியின் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகவும் பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் இணைந்தமையால் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்ததாகவும் இந்த குழுவினர் நம்புவதால் இச்செயற்பாட்டை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்புடும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படையான பதில் எதையும் வழங்கவில்லை. தேசிய மக்கள் சக்திக்குள் சிலர் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிப்பதாக மட்டுமே கூறியிருந்தாலும் விரிவான விளக்கத்தை வழங்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button