இலங்கை

அரசின் செல்வாக்கு மேலும் சரிய முன் விரைவில் மாகாண சபைகளுக்கு தேர்தல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கு முற்றிலும் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று ஆளும் கட்சி பல சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் அதனை உடனடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதன் முக்கியத்துவமும் இரு நாடுகளின் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி 23 இலட்சங்களால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் அரசாங்கத்துக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *