முச்சந்தி

மட்டக்களப்பிலுள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்க வியூகம்

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
.2025ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கிலே அமோகமான வெற்றி பெற்றிருக்கின்றது. நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைவாக வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள். இது உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்திற்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.

நாளைய தினம் (இன்று)நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர், பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாட இருக்கின்றோம்.

எதிர்வரும் இரண்டு,மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், உள்ளுராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை . ஆனாலும் தமிழர் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம், சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால் அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளுராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவிற்கு எமது கட்சி ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம். நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். ஏனென்றால் மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருக்கின்றபடியால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக இருக்கின்றபடியால் அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் இ.சிறிநாத் எம்.பி.யும் கருத்து தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button