இலங்கை

சீனாவுக்குச் சென்று வந்த பின் இராணுவ ஆட்சிக்கு அரசு முயல்கிறதா?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தும், அதுகுறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த, அரசு இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்ல முயல்கின்றதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஹிரு தொலைக்காட்சியின் பலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (சி.ஐ.டி.) தொடர்ச்சியாகத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன அப்போது அந்தப் பிரிவுகளின் பிரதான நாற்காலிகளில் இருந்தவர்களே இன்றைய விசாரணைப் பிரிவுகளிலும் இருக்கிறார்கள்.

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்திருந்தால், நாட்டின் ஜனாதிபதிக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ தெரிவிக்க முடியாவிட்டாலும், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த யாராவது ஏன் அதனை கர்தினால் ஆண்டகைக்கு அறிவிக்கவில்லை? 200 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாவதற்கு பிரதான காரணமாக இருந்த இவர்களுக்கு, தற்போதைய விசாரணைகளுக்குள் இருப்பதற்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது.

இன்று சுரேஷ் சலேயையும், கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய முற்படுவதன் மூலம் அரசாங்கம் ஒரு திரைப்படக் காட்சி போன்ற நாடகத்தையே அரங்கேற்றி வருகிறது . உண்மையான குற்றவாளிகளை விசாரிப்பதை விடுத்து, மக்கள் மத்தியில் வேறு ஒரு சித்திரத்தைக் காட்ட முனைகிறார்கள் . நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்களின் உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான புதிய தலைப்புகள் தினமும் பேசப்படுகின்றன .

அதேநேரம், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சீனாவுக்குச் சென்று வந்துவிட்டு, தங்களுக்கு 5 ஆண்டுகள் போதாது, 20 அல்லது 25 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள். நாட்டை ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்துவதற்கான திட்டமே இதன் பின்னணியில் உள்ளது .

மேலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை தயாரித்த ஒருவரையே தற்போதைய அரசாங்கம் அதன் தலைவராக நியமித்துள்ளது .இலாபம் ஈட்டக்கூடிய கொழும்பு – லண்டன் போன்ற வான்வழிப் பாதைகளைத் தனியாருக்கு வழங்கி, கொள்ளையடிப்பதற்கே இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது” எனவும் குற்றம் சுமத்தியுள்ளார் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button