50-100 சபைகளை இழந்த எதிரணிகள்!; ரணில் சுட்டிக்காட்டு

தான் அறிவுறுத்தியபடி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால், ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பில் இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர். திர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால், ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம். சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளன.
நாம் திருப்தி அடையலாம். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வேலை செய்ய வேண்டும். இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நான் தேர்தல் பிரசாரப் பணிகளில் பங்கேற்கவில்லை. இது இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. இதில் நல்ல விடயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன. தற்போது நம்மிடம் உள்ள பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். யானை சின்ன வேட்பாளர் என பரிந்துரைக்கப்படும் போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று சிலர் கூறினர்.
யானை சின்ன வேட்பாளர் என்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்று இப்போது தெரிகிறது. இப்போது நாம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என கூறினார்.
![]()