முச்சந்தி

அணு ஆயுத இந்திய பாகிஸ்தான் முறுகல்…  காஷ்மீரில் முடிவுறாத தொடர் பிணக்கு!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர், கோட்லி மற்றும் முசாபராபாத் இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் இராணுவ தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை தாக்கியுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவால் அவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளமையானது பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
பிரிக்கப்பட்ட காஷ்மீர்:
இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் ஐ.நா.வரை சென்று குரல் எழுப்பிய வரலாறும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
15 மில்லியன் மக்கள் வசிக்கும் முஸ்லிம் பெரும்பான்மை காஷ்மீர் பிராந்தியம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு நாடுகளும் முழுமையாக உரிமை கோருகின்றன.
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைக் குரலாகவும் இருக்கிறது. காலங்கடந்தும் தீராத பதில் தான் ஒன்று தான். அதுவே காஷ்மீர் இந்தியாவுக்கும் இல்லை, பாகிஸ்தானுக்கும் இல்லை. வரலாற்று உண்மையாக இருவருக்கும் சொந்தமில்லை, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே யதார்த்தமாகிறது
பஹல்காமில் கொடூர தாக்குதல்:
தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22/4/25 அன்று நடந்த கொடூர தாக்குதலில் சுமார் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை இந்தியா தீர்மானித்த பிறகு, பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தும் என்றும் பாகிஸ்தான் காஷ்மீரில், விளையாட்டு மைதானங்களில் அவசர பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் உணவு மற்றும் மருந்துகளை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மத பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எல்லையில் வசிப்பவர்கள் மோதலுக்கு பயந்து மக்கள் தொலைதூர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதுடன், பதுங்குகுழிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நீண்ட தூர ஏவுகணை சோதனை:
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இராணுவம் 5/5/25 திங்களன்று 120 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தான் துருப்புக்களின் செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்வதையும், ஏவுகணையின் மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் மேம்பட்ட துல்லியம் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அளவுருக்களை சரிபார்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
அதேவேளை 3/5/25இல் 450 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு ஏவுகணை சோதனையை நடத்தியதாக இராணுவம் அறிவித்தது. எனினும், இந்த இரண்டு சோதனைகளும் எங்கு நடத்தப்பட்டன என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவிக்கவில்லை.
காஷ்மீரின் தொடர் பிணக்கு :
வரலாற்று ரீதியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இந்திய நிலப்பரப்பில் அடங்கி இருந்த சமஸ்தனங்கள் இந்தியாவோடும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் அமைந்த சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன.
புவியியல் ரீதியாக இரண்டில் இருந்தும் ஒதுங்கி இருந்த காஷ்மீர் தனி நாடாகவே இருந்து விட்டது. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாகவும் மன்னர் இந்துவாகவும் இருந்தும் கூட எந்தப் பிணக்கும் அங்கு பாரிய அளவில் அக்காலத்தில் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் பேராசைப்பட்டது போல காஷ்மீர மக்கள் முஸ்லீம்கள் என்பதால் தாங்கள் படையெடுத்துச் சென்றால் நம்மை ஆதரிப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டு பாகிஸ்தான் உள்ளே நுழைய நாட்டைக் காக்க மன்னர் ராம்சிங் இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்.
1947 பிரிவினையின் போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ள , இந்தியப் படைகள் நுழைந்த பிறகு மிஞ்சிய பகுதிகளை இந்தியா இணைத்துக் கொண்டது. அன்று பிடித்தது அந்த நிலப்பரப்பிற்கும் காஷ்மீர் மக்களுக்கும் தீராத வலி.
1940களின் இறுதியில் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்த போது நேரு அப்போது சில உரிமைகளை அரசியல் சாசனப் பிரிவிலேயே எழுதிக் குடுத்தார். ஆனால் அவைகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு :
1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வளைத்தது. பாகிஸ்தான் ராணுவம் பின்புலத்தில் இருந்து செயல்பட்டது.
வேறு வழியில்லாத சூழலில் மன்னர் ஹரி சிங், இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அவர் சம்மதித்தார். அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டது. அதன் பாதுகாப்புக்கு இந்தியா முழு பொறுப்பேற்றது. இருப்பினும் பாகிஸ்தான் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் நேரு, ஐ.நா.விடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகளும் தங்கள் பகுதிக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக் கோடு உருவாக்கப்பட்டது. இன்றவுளவும் அதுவே காஷ்மீரின் பாகிஸ்தானுடனான தார்மீக எல்லையாக இருந்து வருகிறது.
1962 இந்தியா – பாக். போர்:
இந்தக் காரணத்தை முன்வைத்தே இரு நாடுகள் இடையே போர்களும் நடந்துள்ளன. 1962ம் ஆண்டு முதல் இந்தியா – பாக். போர் மூன்று தடவைகள் நடந்துள்ளது.
1989-ம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரில் தீவிரவாதம் புதிய வடிவத்தை எடுத்தது. காஷ்மீர் தீவிரவாதமும், அதனைத் தூண்டிவிடும் பாகிஸ்தானும் இன்றளவும் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாக இருந்து வருவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
அரசியல் ரீதியாக காஷ்மீர் பல துண்டுகளாகி விட்டன. தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமின்றி மக்கள் ஜனநாயக கட்சியும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் கட்சியாக விளங்குகிறது. பாஜகவும், காங்கிரஸும் ஜம்மு பகுதியை பிரதிநிதித்துவப் படுத்த மத முரண்பாட்டை பயன்படுத்துவதுடன், அரசியல் மட்டுமின்றி பிரிவினைவாதம், தீவிரவாதம் என பல வடிவங்களைக் கொண்ட சிக்கல் நிறைந்த பிரச்சினையாக காஷ்மீர் உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் பதிலடி சாத்தியமா ?
இந்தியாவின் தாக்குதலானது தற்காலிக மகிழ்ச்சி என்றும், ஆனால் நீடித்த துக்கத்தால் மாற்றப்படும் என்று பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர், இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் இராணுவம் தனது விருப்பமான நேரத்தில் மற்றும் இடத்தில்பதிலடி கொடுக்கும் என்று கூறினார். மேலும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலளிக்கப்படாமல் போகாது என்று பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button