நாடெங்கும் 5783 வாக்கு எண்ணும் நிலையங்கள்; நள்ளிரவுக்குள் முடிவுகள்

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் இன்று மாலை 5 மணி முதல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் 5783 இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
339 உள்ளூராட்சி சபைகளுக்காக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் இன்று முற்பகல் 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் பிரதான வாக்கு எண்ணும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் வாக்களிப்பு நிலையங்களே வாக்கு எண்ணும் நிலையங்களாக அமைக்கப்படவுள்ளன.
இதன்படி பிற்பகல் 5 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வட்டார ரீதியிலான வாக்குகளை எண்ணி முடித்த பின்னர் பிரதான மத்திய நிலையத்திற்கு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு விகிதாசார ஆசனங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்குமான முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் பெற்றுக்கொண்டுள்ள மொத்த ஆசனங்கள் தொடர்பான விபரங்கள் இதன்போது அறிவிக்கப்படவுள்ளன. அத்துடன் வாட்டார ரீதியிலான முடிவுகளை அந்தந்த வட்டார வாக்குகளை எண்ணும் நிலையங்களில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளன.
இதன்படி இன்று நள்ளிரவுக்குள் பெரும்பாலான முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
![]()