தமிழகம் நெல்லை அருகே இரு கார்கள் மோதிய கோர விபத்தில் 7 பேர் பலி

தமிழகம் நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசையில் பயணித்த மற்றொரு காருடன் மோதிய விபத்தில், குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகினர்.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் தாணுமூர்த்தி, 41. இவரது மனைவி பாலகிருஷ்ணவேணி, 36. மகன் சுபிசந்தோஷ், மகள் பிரியதர்ஷினி.
இவர்கள் உட்பட மேலும் சிலர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, ‘மாருதி டிசையர்’ காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தாணுமூர்த்தி ஓட்டினார்.
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நாங்குநேரியை கடந்து தளபதிசமுத்திரம் என்ற இடத்தில் கார் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியன் மீது மோதி, எதிர்திசையில் சென்றது.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வந்து கொண்டிருந்த, கார் மீது, தாணுமூர்த்தி ஓட்டி வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில், இரு கார்களும் பலத்த சேதமடைந்தன.
மற்றைய காரை மாரியப்பன் என்பவர் ஓட்டினார். அவரது மனைவி அன்பரசி, மகன் பிரவீன், மகள் அஸ்வினி மற்றும் மாரியப்பனின் தாய் உள்ளிட்டோர் அந்த காரில் பயணித்தனர். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு, வள்ளியூர் மற்றும் நாகர்கோவிலில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இரு கார்களில் வந்தவர்களில் யார், யார் இறந்தனர் என்ற விபரத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
இறந்தவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
![]()