பலதும் பத்தும்

நிசார் செயற்கைக்கோளை ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக ‘நாசா- இஸ்ரோ செயற்கை துளை ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களையும் வழங்கும்.இதனை கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.

ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத ”கிரகணப் பருவம்\” காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நடப்பாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது வருகிற ஜூன் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, ‘நிசார் செயற்கைக்கோள் வருகிற ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. சோதனையில் செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட்டபோது, நிசார் செயற்கைக்கோளுடன் தொடர்புடைய ஒரு சில பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

அதாவது, நிசார் செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் விட்டம் கொண்ட ‘பிரதிபலிக்கும் ஆண்டெனா’ விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.இதை நிவர்த்தி செய்வதற்காக பிரதிபலிக்கும் ஆண்டெனா அதிக வெப்பமடைவதைத் தடுக்க ஒரு சிறப்பு வெப்ப பூச்சுக்காக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பூச்சு பயன்படுத்தப்பட்ட பிறகு நிசார் செயற்கைக்கோள் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும், மேலும் சோதனை செய்வதற்கும் ஆண்டெனா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அங்கு சோதனைகள் நிறைவடைய உள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறும்போது, ‘வரலாற்று சிறப்புமிக்க நிசார் செயற்கைக்கோளின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 2 விண்வெளி நிறுவனங்களும் ஜூன் மாதத்தில் இந்த பணிக்கான சாத்தியமான ஏவுதள தேதிகளை மதிப்பாய்வு செய்து வருகின்றன.

ஜி.எஸ்.எல்.வி. இன் 2-ம் கட்டம் இஸ்ரோ உந்துவிசை வளாகத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதள வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 என பெயரிடப்பட்ட ராக்கெட்டில் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது’ என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button